பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு! திரையுலகமே காத்திருக்கும் பிரம்மாண்ட படைப்பு!

0
321

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீட்டுத் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது.

அமரர் கல்கியின் புகழ் பெற்ற காவியமான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க முயன்று பலரும் பின்வாங்கிய நிலையில், இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்களின் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை 2 பாகங்களாக இயக்குகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அமரர் கல்கி

10-ம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகள், வீரர்களுள் – சதிகாரர்களுக்கு இடையில் நிகழும் போராட்டங்கள், சோழர்களின் சாதனைகள், நகைச்சு, தியாகம் ஆகியவற்றை ஒருங்கே கொண்ட விறுவிறுப்பான கதையாக “பொன்னியின் செல்வன்” இருக்கும். இதைத் திரையில் காண கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

தாய்லாந்து, புதுச்சேரி, மத்திய பிரதேசம், ஊட்டி என பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் மொத்தப் படப்பிடிப்பையும் படக்குழு முடித்ததுவிட்டது. முதல் பாகத்தை வரும் கோடையில் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது ‘பொன்னியின் செல்வன்’ வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைகா புரொடொக்‌ஷன் நிறுவனர் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜாவின் பிறந்தநாளையொட்டி இன்று வெளியீட்டுத் தேதியையும் படத்தில் நடிக்கும் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்டோரின் கவனம் ஈர்க்கும் புதிய போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார்கள். அனைவரின் போஸ்டர்களும் மிரட்டலாய் ரசிக்க வைத்தாலும் த்ரிஷா பேரழகியாக காட்சியளித்து மொத்தக் கவனத்தையும் குவிக்கிறார்.

விக்ரம், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரபு, லால், ரியாஸ் கான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேரது பங்களிப்புடன் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இசைக்கு ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவிற்கு ரவிவர்மன், கலைக்கு தோட்டாதரணி என மிகப்பெரிய ஜாம்பாவன்கள் டீம் பணியாற்றியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தில் 6 பாடல்களும், 2-ம் பாகத்தில் 6 பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலி படத்தை பார்த்து உலக சினிமாவே வியப்பதற்கு பல ஆண்டுகள் முன்னரே சந்திரலேகா, கர்ணன் உள்ளிட்ட ஏகப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த படங்களை தமிழ் சினிமா கொடுத்து இருக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படமும் பாகுபலிக்கு முன்னோடி தான்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry