புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர் அஸ்வினிகுமார் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் வழக்கமான மாறுதல் தான் இது என்று சொல்லப்பட்டாலும், அரசியல் பின்னணியும் இருப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த 2017-ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தின் தலைமைச் செயலாளராக அஸ்வினிகுமார் நியமிக்கப்பட்டார். அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு செக் வைப்பதற்காக மத்திய அரசிடம் கேட்டு அவரைக் கொண்டு வந்தார் அப்போதைய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. அவரும் நிதி உள்ளிட்ட பல விஷயங்களில் காங்கிரஸ் அரசுக்கு கடும் முட்டுக்கட்டை போட்டார். காங்கிரஸ் அரசின் இறுதிக் கட்டத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றப்பட்டாலும் தலைமைச் செயலாளர் மட்டும் மாற்றப்படவில்லை.
மத்திய அரசு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கம். அப்படி மூன்று ஆண்டுகள் முடிந்த போதும் கூட புதுவை மாநிலத்தின் தலைமைச் செயலாளரான அஸ்வனிகுமாரை மாற்றாமலேயே வைத்திருந்தது மத்திய அரசு. ஆட்சி மாற்றம் நடந்து ரங்கசாமி தலைமையிலான அரசு பதவியேற்ற போதும்கூட அவரை மாற்றவில்லை.
நான்கு ஆண்டுகளாக புதுச்சேரியில் மாநில அரசுக்கு பல்வேறு வகையிலும் நெருக்கடிகளை கொடுப்பவராக, அரசின் திட்டங்களை செயல்படுத்த தடை போடுபவராகவும் அஸ்வினிகுமார் தொடர்ந்து பணியாற்றி வந்தார். புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார் முட்டுக்கட்டையாக இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. தலைமைச் செயலாளரை மாற்றம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதமும் எழுதினார். அப்போதும் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில் திடீரென நேற்று இரவு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின் மூலம் அஸ்வனிகுமார் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அருணாசலப்பிரதேசத்தில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ்வர்மா புதுவை மாநில தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயக்குநர் பி.ஜி.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.
வரும் 24-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வரவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது புதுவை அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்னும் பல்வேறு மாற்றங்கள் புதுச்சேரியில் நடைபெறும் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர். தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தற்போது புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பில் உள்ளார். விரைவில் புதுச்சேரிக்கு முழு நேர துணை நிலை ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry