SBI-ஐ தொடர்ந்து வட்டியை உயர்த்தும் மற்ற வங்கிகள்! எந்தக் கடனுக்கு EMI அதிகமாகப் போகிறது?

0
169

எஸ்.பி.ஐ., பேங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ் வங்கிகள் கடன்களுக்கான வட்டியை அதிகரித்துவிட்ட நிலையில், மற்ற வங்கிகளையும் வட்டியை உயர்த்த முடிவுசெய்துள்ளன. பேங்க் ஆஃப் பரோடாவும், ஆக்சிஸ் வங்கியும் எம்சிஎல்ஆர் விகிதத்தை 0.05 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

வட்டி நிர்ணயத்தில் பிற தனியார் வங்கிகளும் கூட, நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ.யைத்தான் பின்பற்றுகின்றன. ரிசர்வ் வங்கியால் 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப் படுத்தப்பட்ட எம்சிஎல்ஆர் அல்லது மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட் அடிப்படையில் எஸ்பிஐ வங்கி வட்டி விகிதத்தை நிர்ணயித்துள்ளது. அதன்படி எல்லா காலத்துக்கான கடன்களுக்கான வட்டியையும் 10 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.10 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. வட்டி உயர்வு 15 ஏப்ரல் 2022 முதல் கணக்கிடப்படும் என்று எஸ்பிஐ அறிவித்திருக்கிறது.

இதனால் வங்கியில் கடன் வாங்கியிருப்பவர்கள் செலுத்தும் மாதாந்தர தவணையான இ.எம்.ஐ கட்டணம் இனிவரும் மாதங்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி.ஐ. வங்கி மட்டுமல்லாமல், பிற வங்கிகளும் கடன்களுக்கான வட்டியை உயர்த்தும் முடிவை விரைவில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பேங்க் ஆஃப் பரோடா, ஆக்சிஸ், கோடக் மஹிந்திரா வங்கிகள் எம்சிஎல்ஆர் (MCLR – Marginal Cost of Funds Based Lending Rates) விகிதத்தை 0.05 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளன. இந்த உயர்வு ஏப்ரல் 12,2022 முதல் அமலுக்கு வருவதாக பேங்க் ஆஃப் பரோடாவும், ஏப்ரல் 16, 2022ல் இருந்து வட்டி உயர்வு கணக்கிடப்படும் என கோடக் மஹிந்திரா வங்கியும், ஏப்ரல் 18, 2022ல் இருந்து நடைமுறைக்கு வருவதாக ஆக்சிஸ் வங்கியும் அறிவித்துள்ளன.

MCLR விகிதம் என்பது ஒவ்வொரு கடனுக்கும் வங்கிகளால் விதிக்கப்படும் அடிப்படை வட்டி விகிதமாகும். எனவே, MCLR உயர்ந்தால், கடன் EMI தொகையும் அதிகரிக்கிறது. இதனால் வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களுக்குமான இஎம்ஐ தொகை உயரும். யாருக்கெல்லாம் இஎம்ஐ தொகை உயரும் என்றால், எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இஎம்ஐ உயரும். பிற கடன்தாரர்களுக்கு இஎம்ஐ தொகை உயராது.

இப்போது எஸ்பிஐ வங்கியின் எம்சிஎல்ஆர் ஓராண்டுக்கு 7.1 சதவிகிதமாக உள்ளது. ஆனால் ஹெச்டிஎஃப்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றில் 7.25 சதவிகிதமாக உள்ளது. பேங்க் ஆஃப் பரோடாவில் 7.35 சதவிகிதமும், ஆக்சிஸ் வங்கியில் 7.4 சதவிகிதமும் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் விகிதமாக உள்ளது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியின் விகிதம் மற்ற வங்கிகளோடு ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry