எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள்! முதலமைச்சர் எச்சரிக்கை!

0
129

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவது உறுதி செய்யப்பட வேண்டும், கொரோனா பரவலை தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் எடுத்து வருகின்றன. அதே நேரத்தில் தமிழகத்தில் பாதிப்பு சற்று உயர்ந்திருந்தாலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதையடுத்து, ஓமைக்ரான் தொற்று பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. இந்த பெருந்தொற்றின் தாக்கத்தில் இருந்து மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டுள்ளனர். அதே சமயம் மக்களின் வாழ்வாதாரமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஒரு வாரத்தில் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், சென்னை ஐஐடியிலும் மீண்டும் கொரோனோ பரவல் அதிகரித்துள்ளது. எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும். மக்கள் முகக் கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா பரவலைத் தடுக்க நம்மிடம் உள்ள மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவால். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான நபர்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry