அதிகரிக்கும் ஆளுநர் – முதல்வர் மோதல்! துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதா நிறைவேற்றம்!

0
157

தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது தொடர்பாக சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்தார்.

அதன் மீது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், குஜராத்தை போல துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார். 

மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் 13 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. உயர்கல்வி துறையின் கீழ் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகின்றன. துணை வேந்தர்கள் ஆளுநர் மூலமே நியமித்து வருகின்றனர். உயர்கல்வியை அளிக்கும் மாநில அரசை மதிக்காமல் துணை வேந்தர்களை ஆளுநரே நியமிப்பது சரியான செயல் அல்ல. இது மக்களாட்சியின் தத்துவத்திற்கு எதிராக உள்ளது. இதில் மாற்றம் ஏற்பட வேண்டிய சூழல் நிலவுகிறது.

இது மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்னை, மாநில கல்வி உரிமை தொடர்பான பிரச்னை. பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கிறது. இதுபோல் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவில் மாநில அரசின் பரிந்துரையின்பேரில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். குஜராத்தில் உள்ளது போல உரிய திருத்தம் செய்து மாநில அரசே நியமனம் செய்யும் உரிமையை வழங்க வேண்டும் என்பது குறித்து மசோதா நிறைவேற்றப்படுகிறது”. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் புதிய சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தாக்கல் செய்தார். இதற்கு அதிமுக அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல், சட்ட மசோதாவிற்கு பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்தது. பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசும் போது, தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்கள் நடுநிலையோடு திறமைவாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்போது அரசியல் உள்நோக்கத்துடன் இருக்க வாய்ப்புள்ளது என கூறினார். இதன்பிறகு பா.ஜ.க. எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவை திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வரவேற்றனர். இதன் பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. முத்தாய்ப்பாக இந்த மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிதான் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதனிடையே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் 2 நாள் மாநாடு உதகையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் வளர்ந்து வரும் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் பங்கு, 2047க்குள் இந்தியா உலக தலைவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட யோசனைகள் மற்றும் செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டினை ஆளுநர் ஆர்.என் ரவி துவக்கி வைத்தார்.

இந்த மாநாட்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதேஷ் குமார் மற்றும் ஜோஹோ கார்ப்பரேஷன் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்கள் பேராசிரியர்கள் மற்றும் இணைப் பேராசிரியர்களுடன் மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry