பால் விலை ரூ.8 வரை உயர்கிறது! ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை திடீர் நிறுத்தம்! ஆவின் அட்டகாசத்தால் நுகர்வோர், முகவர்கள் அவதி!

0
54
Purple coloured packet milk stopped supply without prior notice

சில மாதங்களுக்கு முன் சென்னை மாநகரில் ஊதா(Purple) நிற பாக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட “செரிவூட்டப்பட்ட பசும்பால்” விநியோகத்தை எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி நேற்று முதல் (01.10.2023) ஆவின் நிர்வாகம் நிறுத்தி விட்டதாக , பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அந்தச் சங்கத்தின் நிறுவனத்தலைவர் சு.ஆ. பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆவின் பால் விற்பனை விலையை மறைமுகமாக லிட்டருக்கு ரூ.8 உயர்த்தும் நோக்கில், “செரிவூட்டப்பட்ட பசும்பால்”(Fortified Milk in Purple Sachet) விநியோகத்தை முன்னறிவிப்பு இன்றி நிறுத்தி விட்டு, தற்போது அதற்குப் பதிலாக “டிலைட் பால்” என்கிற பெயரில், அதே ஊதா நிற பாக்கெட் பால், சென்னையை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் ஆவின் நிறுவனம் விநியோகம் செய்கிறது.

சு.ஆ. பொன்னுசாமி

இதுமட்டுமல்ல, சென்னை மாநகரில் உள்ள நேரடி ஆவின் பாலகங்களுக்கு நேற்று (01.10.2023) முதல் 4.5% கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை,  எந்தவிதமான முன்னறவிப்பும் இன்றி 50% குறைத்துள்ள ஆவின் நிர்வாகம்,மொத்த விநியோகஸ்தர்கள் வாயிலாக, பால் முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தையும் நாளை(அக்டோபர்-3) முதல் 50% குறைக்க முடிவு செய்துள்ளது.

ஆவின் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பால் முகவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சை நிற பாக்கெட் பால் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல்பட்டு வருவதோடு, அதிக விலை கொண்ட தனியார் நிறுவனங்களின் பாலினை வாங்கும் சூழலுக்குதள்ளப்பட்டுள்ளனர்.பால் முகவர்களோ, நுகர்வோர் கேட்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளை சரியாக விநியோகம் செய்ய முடியாமல் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

Also Read : தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்! கண்டுகொள்ளாத கல்வித்துறை! வாக்குறுதிகளை நிறைவேற்ற பிடிவாதமாக மறுக்கும் தமிழக அரசு!

அதுமட்டுமின்றி,  பச்சை நிற பாக்கெட் பாலுக்கு மாற்றாக விநியோகம் செய்யப்படும் ஊதா நிற பாக்கெட்டின் பின்புறம் Toned Milk (சமன்படுத்தப்பட்ட பால்) என குறிப்பிட்டிருப்பதன் மூலம், பொதுமக்களையும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தையும் ஆவின் நிர்வாகம் ஏமாற்றுவது தெளிவாக தெரிகிறது.

ஏனெனில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகளின் படி, பசும்பால்(Cow Milk) என்றால் 3.5% கொழுப்புச் சத்தும், 8.5% திடச்சத்தும் இருக்க வேண்டும். அதுவே சமன்படுத்தப்பட்ட பால்(TonedMilk) என்றால் 3.0% கொழுப்புச் சத்தும், 8.5% திடச்சத்தும்  இருக்க வேண்டும். ஊதா நிற பாக்கெட்டை, “செரிவூட்டப்பட்ட பசும்பால்” என அறிமுகம் செய்து விட்டு, தற்போது அதனை “டிலைட் பால்” என மாற்றியிருப்பதும், ஏற்கனவே நீல நிற பாக்கெட்டில் “Toned Milk” (சமன்படுத்தப்பட்ட பால்) விற்பனையில் இருக்கும் போது, தற்போதைய ஊதா நிற பாக்கெட் பின்புறமும் “Toned Milk” என குறிப்பிட்டிருப்பதன் மூலம், ஆவின் நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்ய முடிகிறறது.

Purple coloured packet of milk where supply has been stopped
Purple coloured packet milk sold as Delight Milk

ஏற்கனவே 5%, 10%, 20% என நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விநியோகத்தை தமிழகம் முழுவதும் படிப்படியாக குறைத்து வந்துள்ள ஆவின் நிர்வாகம், தற்போது சென்னை மாநகரில் ஒரேயடியாக 50% குறைத்துள்ளதை வைத்துப் பார்க்கும் போது, பச்சை நிற பாக்கெட் பால் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக கொழுப்பு சத்து 1% குறைவான ஊதா நிற பாக்கெட்டினை விற்பனைக்கு கொண்டுவந்து, மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகவே தெரிகிறது.

ஏற்கனவே கடந்த இரண்டாண்டுகளில் 9 முறை ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் ஆவின் நிர்வாகம் உயர்த்தியது. தற்போது பால் விற்பனை விலையை நேரடியாக உயர்த்த முடியாமல், நடைமுறையில் உள்ள  கொழுப்புச் சத்து அளவையும், பாக்கெட்டுகளில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு 8.00 ரூபாய் வரை விற்பனை விலையை மறைமுகமாக உயர்த்துகிறது. இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

Also Read : மகாளய பட்சம் என்றால் என்ன? இல்லம் தேடி வரும் முன்னோர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? Mahalaya Patcham!

தமிழகத்தில், ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காத சூழலில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆவினுக்கான பால் வரத்து கடுமையாக சரிவடைந்துள்ளது. இதனால் வடமாநிலங்களில் இருந்து வெண்ணெய் மற்றும் பால் பவுடர் கொள்முதல் செய்யும் நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இழப்பை ஈடுசெய்ய பாலில் கொழுப்புச் சத்து அளவையும், பாக்கெட்டுகளில் பாலின் அளவையும் குறைத்து, அதன் மூலம் லிட்டருக்கு 8.00 ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை விலையை உயர்த்துவதை ஆவின் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

இதனால் ஆவின் பால் உபயோகிக்கும் நுகர்வோர் மற்றும் விநியோகம் செய்யும் முகவர்களுக்கு திண்டாட்டமாகவும், ஆவின் அதிகாரிகள், தனியார் பால் நிறுவனங்களுக்கு கொண்டாட்டமாகவும்  இருக்கிறது. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆவின் நிர்வாகத்தின் தன்னிச்சையான, சர்வாதிகாரமான முடிவுகளை தமிழக அரசு இனியேனும் அனுமதிக்கக் கூடாது. ஆவினுக்கான பால் கொள்முதலை அதிகரிக்க, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

அத்துடன் ஆவின் பால் விற்பனை விலையை நியாயமான அளவில் மாற்றி அமைத்து, மக்கள் விரும்பி  வாங்கும் ஆவின் பால் பாக்கெட்டுகளை தட்டுப்பாடின்றி உற்பத்தி செய்து விநியோகம்  செய்ய முதலமைச்சர்போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry