#HBDSoori | எல்லா கோட்டையும் அழிங்க…!முதல்ல இருந்து ஆடுவோம்…! முன்னணி ஹீரோக்களை கதறவிடும் சூரி!

0
162

நடிகர் சூரி இன்று 44-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி உள்ளது.

மதுரை ராஜாகூரில் பிறந்த நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். 1999-ம் ஆண்டு பிரபுதேவாவின் நினைவிருக்கும் வரை திரைப்படத்தில் அவர் அறிமுகமானார். பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர், சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் நடித்துள்ளார். சினிமாவில், தான் பேசிய முதல் வசனத்தை டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.

2009-ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு திரைப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்தப் படத்தில், பரோட்டா பிரியராக நடித்திருந்த கதாபாத்திரம், அவருக்குபரோட்டா சூரிஎன்ற பெயரை பெற்றுத்தந்தது. அதன்பின்னர், நான் மகான் அல்ல, குள்ளநரிக் கூட்டம், அழகர்சாமியின் குதிரை, வாகை சூடவா, மனம் கொத்திப் பறவை, சுந்தர பாண்டியன், கேடி பில்லா கில்லாடி ரங்கா, தில்லு முல்லு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பாண்டிய நாடு, ஜில்லா, பிரம்மன், மான் கராத்தே, கத்துக்குட்டி, ரஜினி முருகன், மருது என இவர் நடித்த வெற்றிப் படங்களின் பட்டியல் நீள்கிறது.

முன்னணி ஹீரோக்களாக இருக்கும் விஜய், அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்திருக்கும் சூரி, தற்போது ரஜினியுடன் இணைந்துஅண்ணாத்தபடத்திலும், சூர்யாவுடன்எதற்கும் துணிந்தவன்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார். காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது கதாநாயகனாக உயர்ந்து இருக்கும் சூரி, தனது பிறந்தநாளை முன்னிட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வெண்ணிலா கபடிகுழு படத்தில் சூரி பேசும் வசனமானஎல்லா கோட்டையும் அழிங்கமுதல்ல இருந்து ஆடுவோம்..!’ என்று தொடங்கும் அந்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

இரட்டையர்களாக பிறந்த சூரி, இந்தப் பிறந்தநாளில் தனது சகோதரருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் ரெட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன். உழைப்பிலும் திறமையிலும் உயர்ந்தவன். என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன். முந்திப் பிறந்ததால்தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பிஅடுத்த ஜென்மத்தில் எங்கள் அனைவருக்கும் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன் பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி என்று பதிவிட்டுள்ளார்.

விடுதலை படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்த சூரி, தற்போது மிகவும் ஃபிட்டாக நச்சென்று இருக்கிறார்.  இநதப்படம் வெளியான உடன், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு சவால்விடும் வகையில் சூரி மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என்பது உறுதி.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry