சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை(DPI) வளாகத்தில், ஒரு வாரத்திற்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் என மூன்று வகையான ஆசியர்கள் சங்கத்தினர் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கள் குடும்பத்தினருடன் போராடி வருகின்றனர்.
குறிப்பாக, இடைநிலை பதிவு ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், ‘ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’ எனக்கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் பேசும்போது, தமிழ்நாட்டில் கடந்த 2009 மே 31-ம் தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், ஜூன் 1-ம் தேதி முதல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஒருநாள் வித்தியாசத்தில் நடந்த ஊதிய முரண்பாட்டால் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கடந்த 14 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். எனவே சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறோம்’ என்கின்றனர்.
‘திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்’ எனக்கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர, ஆசிரியர் தகுதி தேர்வு (TET) முடித்தவர்களைப் பொறுத்தவரையில், ‘கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு எனும் TET தேர்வு கொண்டுவந்தார்கள், இதில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியராக முடியும் என்றார்கள். அதன்படி, 2013, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் பி.எட்., முடித்த நாங்கள் 30,000 பேர் தேர்ச்சி பெற்றோம்.
விடியல் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சரமாரியாக கேள்விகளை கேட்டு தாக்கிய ஆசிரியை
தமிழக மக்களும்
ஆசிரிய பெருமக்களும் இனிமேலாவது விழித்து கொள்ள வேண்டும்….#திமுககேடுதரும் #DMKFailsTN pic.twitter.com/eHz39CXIc6— Gowri Sankar D (@GowriSankarD_) October 2, 2023
ஆனால், தேர்ச்சி பெற்றும் எங்களுக்குப் பணிநியமன ஆனை வழங்கவில்லை. மாறாக, டெட் எழுதியவர்கள் இன்னொரு போட்டித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் வேலை எனக்கூறி தமிழ்நாடு அரசு கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும், உடனடியாக எங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும்’ என்பதுதான் எங்கள் கோரிக்கை என்கின்றனர்.
ஒரு வார காலமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், களத்தில் இருப்பவர்களில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடக்கக் கல்வித்துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலாளர் என பல்வேறு உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்களை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதல்படி, முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
“சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும்” என தமிழக அரசுக்கு எதிராக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை @AIADMKOfficial சார்பில் மாண்புமிகு பொதுச்செயலாளர் “புரட்சித்தமிழர்” @EPSTamilNadu ஆணைக்கிணங்க நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் , கழக அமைப்பு செயலாளர் @djayakumaroffic கழகத்தின் முழு… pic.twitter.com/xVyFN3aTQc
— AIADMK (@AIADMKOfficial) October 3, 2023
இந்த நிலையில், ஒரு வழியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மூன்று தரப்பு ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளை, பசுமை வழிச் சாலையில் உள்ள தனது அரசு இல்லத்துக்கு அழைத்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அதில் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. போராட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் இதுபற்றி கூறும்போது, ‘இப்படிப் பலமுறை பேச்சுவார்த்தையை நம்பி போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.
ஆனால் இதுவரை முறையாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த முறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவை அறிவிக்கும்வரை போராட்டம் தொடரும்’ என்று கூறியுள்ளனர். காலாண்டுத் தேர்வு முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களுக்கு வரும் பருவத்திற்கு எப்படி பாடம் எடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கும் `எண்ணும், எழுத்தும் பயிற்சி’ வகுப்பை இடைநிலை ஆசிரியர்கள் புறக்கணித்திருக்கின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் போராட்டம் நடந்தபோது, எதிர்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், போராடும் ஆசிரியர்களை சந்தித்து, `திமுக ஆட்சிக்கு வந்தால் உங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’ என வாக்குறுதி அளித்தார்.
Also Read : “தி.மு.க ஆட்சி அமையும் வரை அமைதியாக இருங்கள்!”- ஜாக்டோ – ஜியோ-வுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
Also Read : திமுக ஆட்சி அமைந்ததும் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியிலும் அந்த அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. தி.மு.க தேர்தல் வாக்குறுதி 181-ல், பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பகுதிநேர ஆசிரியர்களாகப் பணியாற்றிவரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதி 311-ல் ,’சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், 20,000 இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கழக ஆட்சி அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவதுபோல காலமுறை ஊதியம் வழங்கும்!’ என வாக்குறுதி அளித்துள்ளது.

ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனாலேயே ஆசிரியர்கள் 2வது முறையாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வாரத்தைத் தாண்டியுள்ள போராட்டம், நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. பள்ளிக் கல்வி இயக்குநரக வளாகம் முழுவதும் ஆசிரியர்கள் நிரம்பியுள்ளனர். ஏராளமான பெண் ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளுடன் களத்தில் திடமாக உள்ளனர். வெயில், மழை என போராட்டத்தில் அவதிப்படும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட கல்வித்துறை செய்துதரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry