ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு..! என்ற பாரதியாரின் வரிகளுக்கேற்ப கல்வி முன்னேற்றத்திற்காக கொண்டுவந்துள்ள, இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்களை வரவேற்று மகிழ்கிறோம்.
அதேநேரம், மதிப்பிழந்து வரும் பள்ளிக் கல்வித்துறையை எண்ணி எங்களைப் போன்ற ஆட்சியின் மீது பற்று கொண்டவர்கள் கவலையுறாமல் இருக்க முடியவில்லை. பெருமிதத்துடன் முப்பெரும் விழா கொண்டாடி மகிழ்கின்ற தமிழ்நாட்டில், பள்ளிக்கல்வித்துறையில் தன்னம்பிக்கை பேச்சாளர்கள் என்ற பெயரில் மூடநம்பிக்கை பேச்சாளர்கள், 13 பள்ளிகளுக்கு அனுமதி பெற்று, சென்னையில் உள்ள இரண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் விதவைகள் பற்றிய போதனைகள் செய்த மகா விஷ்ணுக்கள் வளர்ந்து வரும் பேராபத்தினை கண்டு அதிர்ச்சியுற்று வருகிறோம்.
அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் கல்வி பெறவேண்டிய இளம்பருவ மாணவர்களிடம், அழகில்லாத பெண்களாக இருப்பதற்கு காரணம் முற்பிறவியில் அவர்கள் செய்த பாவம்தான் என்று பேசவும், சில பிள்ளைகள் அது கேட்டு தேம்பி அழுவதையும் கவலையுடன் காணொளியில் காணும்போது பெரியார் பிறந்த மண்ணில், அண்ணா பிறந்த மண்ணில், கருணாநிதி பிறந்த மண்ணில் தான் வாழ்கிறோமா? என்ற கேள்வி நம்மை சிந்திக்க வைக்கிறது.
அமெரிக்காவிலிருந்து தாங்கள் விடுத்த அழுத்தமான ஆணையின் பேரில் மகாவிஷ்ணுக்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள். நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். மகா விஷ்ணுவை குருஜி என்று அழைத்து பக்தி காட்டும் காணொளி பார்க்க முடிகிறது. மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக அமல்படுத்தி வரும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அதற்கு துணை போகும் சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்; பிரதமர் போஜனா திட்டம் என்ற பெயரில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மக்களிடம் நன்கொடை வாங்கி தலைவாழை நல்விருந்து அளிக்கச் சொல்லி ஒருவார காலமாக சுற்றறிக்கை அனுப்பியது கண்டு கோபப்படாமல் இருக்க முடியவில்லை.
Also Read : 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான இலவச சுகாதார காப்பீடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
ஒரு மூத்த அமைச்சர் பணியாற்றக்கூடிய திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிறந்த திருச்சி மாவட்டத்தில் ஒருவார காலமாக பிரதம போஜனா தலைவாழை நல்விருந்து நடத்த சுற்றறிக்கை அனுப்பி வருகிறார்கள் என்றால், மத்திய அரசின் பிடியில் சிக்கித் தவிக்கும் பள்ளிக் கல்வித்துறையினை எண்ணி கோபப்படுவதா? வேதனையுறுவதா? என்று தெரியவில்லை.
மூன்று மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலில் விநாயகர் சதுர்த்திக்காக பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியருடன் நாங்கள் கொண்டுள்ள தொடர்பின் காரணமாக அவர் தலையிட்டதால் உடன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியை ஆய்வு செய்ய செல்லும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முன்னேற்றம் அளிக்காத ஆசிரியர்களை விருப்ப ஓய்வில் சென்று விடுங்கள் என்று மாணவர்கள் முன்னாலேயே ஆணையிடுகிறார். ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 12 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. காலிப் பணியிடங்கள் நினைவிடங்களாகவே தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையிலும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்பித்தல் பணியாற்றி வருகிறார்கள். கற்பித்தல் பணிக்கு பயிற்சி பெற்றவர்கள் நாங்கள், நிர்வாகத்திற்கு பயிற்சி பெற்றவர்கள் ஆட்சியாளர்கள்.
அன்பிலார் பேரன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றதற்கு பிறகு பள்ளி கல்வித்துறையில் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பள்ளிக்கல்வித்துறையை பார்வையிடலாம்; தலையிடலாம், எதைப் பற்றியும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கவலைப்படமாட்டார். யார் கட்டுப்பாட்டில் பள்ளிக் கல்வித்துறை நடந்தாலும் அவர் ஏதாவது ஒருவகையில் விளம்பரத்தை தேடிக் கொண்டிருக்கிறார். ஆசிரியர்கள் போராட்டம் தொடருகிறது, தீர்வு காண்பதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அக்கறை காட்டுகிறாரா?
காமராஜர் ஆட்சிக் காலம் தொடங்கி தொடர்ந்து 60 ஆண்டு காலமாக ஒன்றிய அளவில் முன்னுரிமைப்படி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நியமனம், மாறுதல்கள் நடைபெற்று வந்தது. அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு 60 ஆண்டு கால நடைமுறை மரபினை புறந்தள்ளிவிட்டு, ஒன்றிய அளவில் இருந்த ஆசிரியர்கள் முன்னுரிமையினை மாற்றி மாநில அளவில் கொண்டு வந்து, ஆசிரியர் சங்கங்களின் கருத்துக்களை கேட்காமலும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஆழமாக புரிந்து கொள்ளாமலும் அரசாணை 243/23.12.2023 வெளியிட்டார்.
10% ஆசிரியர்களின் நன்மைக்காக 90% பெண்ணாசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று நாம் தெளிவுபடுத்தினோம். அரசாணை 243ஐ வெளியிட்டமைக்கு நன்றி தெரிவிக்கும் மாநாட்டில் அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு புகழாரம் சூட்டி மகிழ்ந்துள்ளார். ஒட்டுமொத்த தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் எதிர்ப்பு வெடித்து கிளம்பி போராட்ட வடிவத்தில் வந்து கொண்டுள்ளது.
1985 ஜேக்டீ போராட்டத்தில் 40 நாட்கள் சிறை சென்றவர்கள், 1988 ஜாக்டி-ஜியோ போராட்டம், 2003 ஜாக்டோ ஜியோ போராட்டத்திலும் பங்கேற்றவர்கள், சிறைசென்றவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட போதும்கூட டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை கற்பித்தல் பணிக்காக பெற்று வந்ததுதான் வரலாறு. போராடி சிறை சென்றவர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி அளித்து கருணாநிதி மகிழ்ந்தார்கள். உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் மூத்த அமைச்சர் க.பொன்முடி, ஜாக்டி-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற வரலாற்றால்தான் கட்சியில் அவருக்கு முக்கியத்துவமும், அரசியல் அங்கீகாரமும் கிடைத்தது.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி காலத்தில், டிட்டோஜாக் போராட்டத்தில் கோரிக்கைகளை அரசுக்கு நினைவுபடுத்தி போராடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற 100% தகுதி பெற்றிருந்தும், போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் அவர்களால் விருது பெற முடியவில்லை என்பதை எண்ணி நெஞ்சம் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே..!
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் காவல்துறையால் இன்னும் திரும்பப் பெறப்படாமல் உள்ளது. தங்களுடைய ஆட்சி காலத்தில் போராடுகின்ற ஆசிரியர்கள் மீது புதிய புதிய வழக்குகள் எல்லாம் அதிர்ச்சி அளிக்கிற வகையில் போடப்பட்டு வருகிறது. ஆசிரியர் சமுதாயத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கறையினை செயல்படுத்தி காட்டும் வண்ணம், காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற தாங்கள் உடனடியாக அனைத்து வழக்குகளில் இருந்தும் ஆசிரியர்களை விடுவித்திட வேண்டுமாறு ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தின் இதய குமுறலை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறோம்.
அரசாணை 243 ரத்து செய்யப்பட வேண்டும், அல்லது அதில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும்; பழைய ஓய்யூதியத் திட்டத்தை தங்கள் காலத்தில் அமல்படுத்திட வேண்டும்; வாக்குறுதி அளித்தபடி இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும்; பேரறிஞர் அண்ணா காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆசிரியர்களின் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு, அனைத்து நீதிமன்ற தீர்ப்புகளிலும் கூறியுள்ளபடி தொடர்ந்து அமல்படுத்தப்பட வேண்டும்; விதிகளை மீறி செயல்பட்டு வருகின்ற அனைத்து தணிக்கைத் தடைகளும் உடன் நீக்கம் செய்யப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கையின் மீது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தனிக் கவனம் மேற்கொண்டு தீர்வு காண அறிவுரை வழங்கி உதவிட வேண்டுமாய் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகன் ஆகியோரது அன்புப் பார்வையில் வளர்ந்தவன் என்ற முறையிலும், அமைச்சர் தங்கம் தென்னரசுடைய அணுகுமுறையால் கல்வித்துறையில் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டவன் என்ற முறையிலும், ஆசிரியர்கள் நடத்தும் போராட்டம் ஆட்சிக்கு எதிராக நடத்தக்கூடிய போராட்டம் அல்ல; கட்சிக்கு எதிரான போராட்டமும் அல்ல; கோரிக்கைகள் தீர்வு காணப்பட வேண்டும் என நினைவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்பதை தங்களின் கனிவான பார்வைக்கு மீண்டும் கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டு மாணவர்கள் கற்றல் திறனில் மிகவும் மோசம் என்று தமிழ்நாடு ஆளுநர் பேசியபோது, கல்விச் சிறந்த தமிழ்நாடு ஆசிரியர் தின விழாவில் தமிழ்நாட்டு ஆசிரியர்களை குறை கூறும் ஆளுநர் அவர்களே, பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், உத்தரப்பிரதேச கல்வித் தரம் பற்றி பட்டியல் போட்டு விவாதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், நீங்களோ அல்லது உங்களின் சார்பில் அனுப்பி வைக்கும் ஒருவரோ விவாதம் செய்யத் தயாராக இருக்கிறீர்களா? என்று மீடியாக்களை அழைத்து பேட்டி அளித்தவர்கள் நாம் என்பதை இவ்விடத்தில் அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Also Read : கல்வித்தரம் குறித்த விவாதத்துக்கு தயாரா..? ஆளுநர் ரவிக்கு பகிரங்க சவால் விடும் ஐபெட்டோ அண்ணாமலை!
ஆசிரியர் இயக்கங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஆசிரியர் மனசுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற ஒரு பதவியை ஏற்படுத்தி புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வரும் சிகரம் சதீஷ் என்பவரை நியமனம் செய்து, திருச்சி ஆசிரியர் இல்லத்தில் ஒரு அலுவலகமும் அமைத்து அவரை செயல்பட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அனுமதித்துள்ளார். மூன்று ஆண்டு காலம் அவர் பள்ளிக்கு செல்லாமல் மாதாமாதம் ஊதியத்தினை பெற்று வருகிறார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மனசாட்சியே தான்தான் என்று அவர் பிரகடனப்படுத்தி வருகிறார். மாவட்டம் தோறும் அலுவலர்களையும், ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பங்கேற்க செய்து வருகிறார். முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோரை நேரடி தொடர்பின் மூலம் இயக்கி வருகிறார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியை பலவீனப்படுத்துவதில் சிகரம் சதீஷ் முதன்மையாக செயல்படுகிறார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை தாங்கள் கனிவுடன் ஆய்வு செய்து, இத்துறையின் பெருமையினை பாதுகாத்திட வேண்டுகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry