பள்ளிக் கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது? திராவிட மாடல் அரசு என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிந்து வைத்துள்ளாரா? என ஐபெட்டோ கேள்வி?

0
399
Minister Anbil Mahesh Poiyamozhi unveiled a transformative measures for the School Education Department during Tamil Nadu Legislative Assembly session.

பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ஆசிரியர்கள் சங்கங்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தீர்வு காண்பதாக ஒப்புதல் அளித்துள்ள 12 கோரிக்கைகளில் கணினி பணியாளர் நியமனத்தைத் தவிர வேறு எதையும் அறிவிக்கவில்லை, பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாடு எவரிடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை என்று ஐபெட்டோ தேசியச் செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மூத்தத் தலைவருமான வா. அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 24ந்தேதி, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பதிலுரையில் 25 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகளில் 158 அறிவிப்புகளில் 143 அறிவிப்புகளை செயல்படுத்திக் காட்டியுள்ளோம் என்கிறார். இந்தியப் பெருநாடே புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் போன்றவற்றை வரவேற்று பாராட்டுகிறார்கள். பின்பற்ற தொடங்கியுள்ளார்கள்.

ஐபெட்டோ அண்ணாமலை

திராவிடல் மாடல் ஆட்சிப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. எனக்கு இரண்டு கண்கள், ஒன்று கல்வி, இரண்டு சுகாதாரம் என்கிறார் முதலமைச்சர், மனம் நெகிழ வரவேற்கிறோம். பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறபோது நான்கு கால் பாய்ச்சல் என்கிறார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டுகிறபோது, அமைச்சரின் தந்தை இருந்தால் என்ன மகிழ்ச்சி அடைவாரோ அதைவிட மகிழ்ச்சி அடைகிறேன் என்கிறார்.

Also Read : கல்வித்துறையில் இன்னமும் அதிகாரம் செலுத்தும் நந்தகுமார் IAS? மனிதவள மேலாண்மைத்துறையில் சாதிப்பாரா? சறுக்குவாரா?

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்றதற்குப் பிறகு சட்டப்பேரவையில் பதிலுரை பேச்சுத் தொகுப்பு வரவேற்று மகிழக் கூடியதாக உள்ளது. ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாகம் பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பல ஒன்றியங்களில் 50 முதல் 70 இடங்கள் வரை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

எண்ணும் எழுத்தும் பயிற்சி என்ற பெயரால் இணையதள வழியைத் தவிர பள்ளி வேலை நாள், விடுமுறை நாட்களில் பயிற்சி இருக்காது என்றார் கல்வி அமைச்சர். ஆனால் ஆசிரியர்கள் இல்லாத ஒன்றியப் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றக் கூடிய பள்ளிகளில், பள்ளி வேலை நாட்களில் ஓர் ஆசிரியர் உள்ள பள்ளிகளில் 1,2,3 என மூன்று வகுப்புகளுக்கும் 4,5ம் வகுப்புகளுக்கும் அவரே பயிற்சியில் கலந்து கொள்ளும் நிலைமை தொடர்கிறது. மாற்றுப் பணிக்கும் ஆசிரியர்கள் பள்ளிகளில் இல்லை.

எதையும் கண்டு கொள்ளாத பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அரசாணை எண்.243, நாள் 21.12.2023 திருந்திய தெளிவுரை பள்ளிக் கல்வித்துறை மான்யக் கோரிக்கையில் இடம் பெறும் என்று எதிர்பார்த்தோம். எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்பதற்கான உறுதி அறிக்கையில் இடம் பெறவில்லை. தொண்டு நிறுவனங்களை எல்லாம் பள்ளிகளை பார்வையிடும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படும் அறிவிப்பு இடம் பெறவில்லை.

Also Read : சந்துருவின் பரிந்துரைகள் நடுநிலையாக இல்லை! அபத்தமான, தான்தோன்றித்தனமான கருத்துகள் என KSR விமர்சனம்!

எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்வதால் மாணவர்களில் கல்வி நலனில் பெருத்த பாதிப்பு ஏற்படும் என்பதை வலியுறுத்தியும், எவ்வித தெளிவும் அறிவிப்பில் இடம் பெறவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாநிலம் முழுவதும் பள்ளி வாரியாகச் சென்று வருவாய் துறை, ஊராட்சித் துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை அழைத்துச் சென்று மாணவர்ளை படிக்கச் சொல்லி மதிப்பீடு செய்யச் சொல்லுகிற நிலைமை கல்வித் துறையில் திராவிட மாடல் அரசினைத் தவிர சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து எந்த ஆட்சி காலத்திலும் இந்த சோதனை கல்வித் துறைக்கு வந்ததில்லை.

அறிஞர் அண்ணா அறிமுகப்படுத்திய ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு அறிவிப்பினை பழைய நடைமுறைப்படி அமுல்படுத்துவோம் என்ற அறிவிப்பினை வெளியிடாதது ஏன்? பயிற்சி முடித்து வந்த ஆசிரியர் நடத்தும் பாடத்தினை யார் சரிபார்ப்பது? என்ன அவமானம் கல்வித் துறைக்கு? தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்களே..! கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களை, மாவட்டக் கல்வி அலுவலர்களையும், ஏனைய துறைகளை பார்வையிடும் வாய்ப்பினை அளித்து ஒருமுறை அதிகாரம் அளித்து சுற்றறிக்கை அனுப்புங்கள். நெறிப்படுத்தச் செய்வார்கள்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இதைப்பற்றியெல்லாம் கவலையுறாது மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமித்து அவர்தான் அவரது மனசாட்சி என்று அதிகாரபூர்வமாக அறிவித்து திருச்சி ஆசிரியர் இல்லத்தில் அலுவலகம் தந்து செயல்படுத்தி வருகிறார்? பெருமைபட்டு வருகிறார்? பள்ளிக் கல்வித்துறை எங்கே போய்க் கொண்டிருக்கிறது? பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சரியாக இருந்திருந்தால், பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக செயல்பாடுகள், ஆசிரியர்களின் நிலைமை, மாணவர்களின் கல்வி நலனுக்கு இவ்வளவு பெரிய சோதனை ஏற்பட்டிருக்காது?

Also Read : செயற்கைப் பேரழிவால் தலைகுனிந்து நிற்கிறது `திராவிட மாடல்’ தி.மு.க அரசு! மக்களின் உயிர்களை அடகு வைப்பதற்குப் பெயர் அரசு அல்ல… எமன்!

பள்ளிக் கல்வித்துறை மான்யக் கோரிக்கை என்றால், புதிய தொடக்கப் பள்ளிகளை கிராமத்தில் தொடங்கும் அறிவிப்பினை வெளியிடுவார்கள். தமிழ்நாட்டில் சுமார் 30 கிராமங்களுக்கும் மேலாக பள்ளிகள் இல்லாத கிராமங்களாக உள்ளன என்று தெரிகிறது? பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் அறிவிப்பும் எதுவும் இல்லை!
தொடக்கப் பள்ளிகளைக் கூட தொடங்கும் அறிவிப்பு மானியக் கோரிக்கையில் இடம் பெறாதது திராவிட சத்தியம்! திராவிட மாடல் அரசு என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிந்து வைத்துள்ளாரா?

தீர்வை நோக்கி பயணங்கள் தொடரட்டும்! நீட் தேர்வினை எதிர்க்கிறோம், நியமனத் தேர்வினை தொடர்கிறோம்… என்ன நீதி? பள்ளிக் கல்வித் துறையினையும், பள்ளியில் ஆசிரியர்களை, மாணவர்களின் வாசிப்பு திறனை எவர் வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்பதை தடுத்து நிறுத்திட முதலமைச்சரிடம் வேண்டுகிறோம். பள்ளிக் கல்வித் துறையின் மாண்பினையும் ஆசிரியர் பணியின் மேன்மையினை பெருமையினையும் பாதுகாத்திட வேணுமாய் பெரிதும் வேண்டுகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry