கல்வித்துறையில் இன்னமும் அதிகாரம் செலுத்தும் நந்தகுமார் IAS? மனிதவள மேலாண்மைத்துறையில் சாதிப்பாரா? சறுக்குவாரா?

0
125
நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். & மனிதவள மேலாண்மைதுறை செயலாளர் கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.

2.40 Mins Read : சர்வ அதிகாரம் பொருந்திய, அதிகார மையங்களில் ஒருவரான நிதித்துறை செயலாளர் உதயசந்திரனின் தீவிர ஆதரவாளராகக் கருதப்படும் நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.க்கு அடுத்தடுத்து அளிக்கப்படும் முக்கியத்துவம், அதிகாரிகள் மட்டத்திலும், கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளராக நந்தகுமார் இருந்தபோது நடந்த முறைகேடு, அந்த அமைப்பின் நேர்மைத்தன்மையை கேள்விக்குறியாக்கியது. தற்போது டிஎன்பிஎஸ்சி உள்ளடக்கிய மனிதவள மேலாண்மைத்துறைக்கு அவர் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது.

நாமக்கல் மாவட்டம் மாமரத்தப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நந்தகுமார், எளிமையான குடும்பப் பின்னணி கொண்டவர். அவரது தந்தை கருப்பண்ணன் லாரி டிரைவர். தாயார் டெய்லர். யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியில் தோல்வியடைந்த நந்தகுமார், இரண்டாவது முயற்சியில் 350வது இடத்தைப் பிடித்தார். இந்திய ரயில்வே போக்குவரத்து அமைப்பில் (IRTS) அவருக்கு பணி வழங்கப்பட்டது. பணியில் சேர்ந்த அவர், மீண்டும் முழுவீச்சில் பயிற்சி எடுத்து மூன்றாவது முறையாக யுபிஎஸ்சி தேர்வெழுதி 30வது ரேங்க் எடுத்து ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். சாதாரண பின்புலத்தில் இருந்து வந்து சொந்த மாநிலத்தில் பணியாற்றினாலும், தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகளை மிகவும் மோசமாக நடத்துவார் என்றே கூறப்படுகிறது.

Also Read : பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு! ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், பார்வையாளராக கலந்துகொள்வது எப்படி?

டி.என்.பி.எஸ்.சி. செயலாளராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இருந்தபோது பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது. 2019 செப்டம்பர் 1-ம் தேதி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள், நவம்பர் மாதம் 15-ம் தேதி வெளியானது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இடங்களில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 35-க்கும் மேற்பட்டோர் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள்ளான தவரிசைப் பட்டியலில் இடம் பெற்றனர். இந்த மையங்களில் தேர்வு எழுதி மாநில அளவில் தேர்வு பெற்றவர்களில் பெரும்பாலான நபர்கள், வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் முறைகேடு நடந்தது உறுதியானது.

அப்போது குரூப் 4 தேர்வு மட்டுமின்றி, குரூப் 2ஏ உள்ளிட்ட பிற தேர்வுகளிலும் முறைகேடு நடந்தது. சிபிசிஐடி விசாரணையில், 52 நபர்கள், தேர்வு எழுதும் போது, ஒரு சில மணிநேரத்தில், மாயமாகும் மையால் பதில்களை எழுதினர் என்றும், டிஎன்பிஎஸ்சியில் பணிபுரியும் எழுத்தர் ஓம் காந்தன் உதவியால் இடைத்தரகர்கள் மூலம் விடைத்தாள்களை திரும்பப் பெற்று, சரியான விடைகளை எழுதினர் என்றும் தெரியவந்தது. செயலாளராக இருந்த நந்தகுமாரால் இவ்வளவு பெரிய முறைகேட்டை தடுக்க முடியவில்லை, தேர்வுகளை நேர்மையாக வெளிப்படையாக நடத்த இயலவில்லை என்று அப்போது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் பள்ளிக் கல்வித்துறை ஆணையராக நந்தகுமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். திமுக ஆட்சியின் அதிகார மையங்களில் மிக முக்கியமானவர் என திமுகவினரே கூறும் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்-ன் பரிபூரண ஆசீர்வாதத்துடன் செயல்படுவதாக நம்பப்படும் நந்தகுமார், பள்ளிக் கல்வித்துறையின் இயக்குநர்களை நடத்திய விதம் பெரும் சர்ச்சையானது. ஆணையரால் தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாக பல இயக்குநர்கள் மனம் நொந்து வேதனையை வெளிப்படுத்தியதாக டிபிஐ வட்டாரங்களில் கேள்விப்பட்டதுண்டு. இவர் ஆணையராக இருந்தபோதுதான், மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கையின்(NEP 2020) பல திட்டங்கள் வெவ்வேறு பெயர்களில் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டன.

Also Read : அண்ணாமலை திமுகவின் கைக்கூலி! நம்பர் கேம் மூலம் கட்சி மேலிடத்தை ஏமாற்றுகிறார்! தமிழக பாஜகவில் வலுக்கும் எதிர்ப்பு!

பொதுவாக மற்ற துறைகளை நிர்வகிப்பதற்கும், கல்வித்துறையை நிர்வகிப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நந்தகுமாரால், கல்வியாளராக செயல்பட இயலவில்லை. எந்தவொரு பிரச்னை குறித்தும் விவாதிக்க கல்வியாளர்களையோ, சங்கங்களின் பிரதிநிதிகளையோ, குழந்தைகள் செயற்பாட்டாளர்களையோ அழைக்காமல் அவராகவே முடிவெடுத்தார் என்ற குற்றச்சாட்டு உண்டு. மேலும், பள்ளிக் கல்வித்துறை ஆணையராக இருந்தபோது இவர் தனது அறையை, மக்கள் வரிப்பணம் 60 லட்சத்துக்கும் அதிகமாக செலவுசெய்து நவீனப்படுத்தியாக குறை கூறப்பட்டது.

கல்வி என்பது வெறுமனே நிர்வாகம் சார்ந்த விஷயமல்ல, இது மனிதவளத்தை மேம்படுத்துவதற்கான ஒரு செயல்பாடு. கல்வித்துறை ஆணையராக இவரது செயல்பாடுகள், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி கல்வியாளர்கள், சங்கங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்களிடம் முழுக்க முழுக்க அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே கூறப்பட்டது. இதையடுத்து, அதிகார மையத்தின் ஆசீர்வாதத்துடன் கடந்த ஆண்டு மனிதவள மேம்பாட்டுதுறைச் செயலாளராக நியமிக்கப்பட்ட நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.க்கு பொதுத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், பள்ளிக் கல்வித்துறையில் இன்னமும் இவரது தலையீடு தொடர்வதாகவே கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Also Read : இதுவரை வெளிவராத ரகசியங்கள்! பிரபாகரனுக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் போட்டுவிட்ட ராஜீவ்காந்தி! புலிகள் இயக்கத்துக்கு கொடுக்கப்பட்ட ரூ.5 கோடி நிதி! ‘The Rajiv I Knew’!

பொதுத்துறை செயலாளராக இவர் இருந்தபோது, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை தாறுமாறாக இடமாற்றம், துறை மாற்றம் செய்தார். இதனால் அனைத்துத்துறை பணிகளிலும் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நந்தகுமார் ஐ.ஏ.எஸ். வசம் இருந்த பொதுத்துறை செயலாளர் பொறுப்பு ரீட்டா ஹரீஷ் தாக்கரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நந்தகுமார் ஐ.ஏ.எஸ். மனிதவள மேலாண்மைத்துறையின் செயலராக நீடிக்கிறார். இந்தத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பொறுப்பில் உள்ளது. நிதித்துறை செயலாளராக இருப்பவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அதாவது, தனது சிஷ்யரை தன்னுடனேயே உதயசந்திரன் அழைத்துக் கொண்டுவிட்டார் என்றே தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

மனிதவள மேலாண்மைத்துறை என்பது, நியமனம், பயிற்சி, மேம்பாடு, ஊக்கம் அளித்தல், நெறிமுறைப்படுத்துதல் போன்ற அனைத்துப் பணிகளின் அங்கங்களாக இருக்கின்றன. இவற்றைத் தமிழகத்தில் இருக்கிற அரசுப் பணியாளர்களுக்கு நிகழ்த்துகின்ற நிறுவனங்கள் அனைத்தும் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளையே முறைகேடுகளின்றி நடத்த முடியாத நந்தகுமார் ஐ.ஏ.எஸ.-ஆல், முக்கியத்துவம் வாய்ந்த மனிதவள மேலாண்மைத்துறையை திறனுடன் நிர்வகிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், நிர்வாகம் எப்படி இருந்தாலும், திமுக அரசின் முக்கிய அதிகார மையாகக் கூறப்படும் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். தனது சிஷ்யரை விட்டுவிடமாட்டார், ஏனென்றால் அவரது வழிகாட்டுதல்படித்தான் நந்தகுமார் செயல்படுகிறார் என்று தலைமைச் செயலக ஊழியர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry