ஜூலை 3-ந் தேதி முதல் தொடக்கக் கல்வித் துறையில் நடத்துவதாக அறிவித்துள்ள ஆசிரியர்களின் மாறுதல் கலந்தாய்வினை நிறுத்திட வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின்(டிட்டோஜாக்) மாநில உயர்நிலை குழு கூட்டம் கடந்த 26ம் தேதி சென்னையில் நடந்தது. டிட்டோஜாக் அமைப்பில் இணைந்துள்ள அனைத்து இயக்க நிர்வாகிகளும் இதில் கலந்து காண்டனர். தொடக்க கல்வித்துறையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வர உள்ள நிலையில், கவுன்சலிங்கை நிறுத்தி வைக்கவும், இதனையும் மீறி கவுன்சலிங்கை நடத்தினால், டிட்டோஜாக் அமைப்பு கடந்த மே 15ம் தேதி நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தொடர் போராட்டங்களை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி இன்று மாவட்ட தலைநகரங்களில், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 29ம் தேதி(நாளை) ஆசிரியர்கள் சந்திப்பு இயக்கம், ஜூலை 3ம் தேதி கவுன்சலிங் நடக்கும் மையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஜூலை 4ம் தேதி டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூடி அடுத்தகட்ட தொடர் போராட்டத்தை நடத்துவது தொடர்பாக முடிவெடுத்து அறிவிக்க உள்ளது.
இதுதொடர்பாக, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவரும், ஐபெட்டோ தேசியச் செயலாளருமான அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 38 மாவட்டத் தலைநகரங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு இன்று மாலை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறவிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, “தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜேக்) அறைகூவலை ஏற்று தொடர் போராட்டம் தொடரட்டும்.
90% பெண் ஆசிரியர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய மாநில அளவிலான முன்னுரிமையினை அமல்படுத்த உள்ள பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 243 நாள் 21.12.2023க்கு திருத்திய ஆணையினை வெளியிடும் வரையிலும், ஜூலை 3-ந் தேதி முதல் தொடக்கக் கல்வித் துறையில் நடத்துவதாக அறிவித்துள்ள ஆசிரியர்களின் மாறுதல் கலந்தாய்வினை நிறுத்திட வலியுறுத்தியும் உணர்ச்சிமிகு போராட்டம் நடைபெறும்.
ஒன்றிய அளவில் மட்டும் மாறுதல் கலந்தாய்வு நடத்திடுவோம் என்ற உறுதியினை தொடக்கக் கல்வித் துறை வெளியிட வேண்டும், தொடக்கக் கல்வித் துறை பிடிவாத உணர்வுடன் கலந்தாய்வு நடத்தினால், மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் மையங்களில் பெருந்திரளான ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் மறியல் போராட்டம் அன்றாடம் தொடரும்.
தமிழ்நாடு அரசே! பள்ளிக் கல்வித் துறையே..! பள்ளிக் கல்வித்துறையை கலவரத் துறையாக மாற்ற வேண்டாம்! ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தலைமை ஆசிரியர் பணி நிறைவு காலிப் பணியிடங்களில் பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். ஜூலை மாதம் உச்சநீதிமன்றத்தில் பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வருகிறது, அதற்குள் அவசரப்படுவானேன்?
மாணவர்களுக்கு கல்விச் செல்வத்தை அளிப்பதில் காட்டும் அக்கறையினை விட ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் முனைப்பு காட்டுவதேன்? மாறுதல் கலந்தாய்வினை அறிவித்துவிட்டு அன்றாடம் நிர்வாக மாறுதலும் ஓசைப் படாமல் நடைபெற்று வருகிறதே! அரசாணை எண் 243 கல்வித்துறைக்கு சம்பாத்தியம் பெற்றுத் தரும்அரசாணையா? மாறுதல் கலந்தாய்வில் மாற்றம் வரும் வரை, மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் இடத்தை மறியல் போராட்டக் களமாக நடத்திட டிட்டோஜேக் ஆயத்தமாவோம்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரே! பள்ளி கல்வித்துறை செயலாளரே..! கள்ளக்குறிச்சியின் அழுகுரல் இன்னமும் ஓயவில்லை, பதற்றம் தொடர்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டாம்! அழைத்துப் பேசுங்கள்! கலந்தாய்வினை நிறுத்துங்கள்! நல்ல முடிவினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry