ரூ.4,730 கோடி மணல் குவாரி ஊழல்! அதிகாரிகள் – ஒப்பந்ததாரர்கள் இடையே கூட்டு! DGPக்கு அமலாக்கத்துறை ஆதாரத்துடன் கடிதம்! பெரும் சிக்கலில் தமிழக அரசு!

0
144
TN Govt failed to take adverse action against the illegal activity that allegedly caused a massive revenue loss to the government exchequer : The Enforcement Directorate | Representative Image.

2.50 Mins Read : ரூ.4,730 கோடி மணல் குவாரி ஊழலில் அரசு அதிகாரிகளுக்கும், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே கூட்டு இருப்பதாக தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை அனுப்பியிருக்கும் அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டவிரோதமாக 23.6 லட்சம் யூனிட் மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66(2)இன் கீழ் (Section 66(2) of the Prevention of Money Laundering (PMLA) Act) சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை இயக்குநரகம் டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “ஒன்பது மாத விசாரணைக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளில் அதிகப்படியான சட்டவிரோதமாக அகழப்பட்டுள்ள மணல் 23.64 லட்சம் யூனிட் (66.21 லட்சம் கன மீட்டர்) ஆகும். ஐந்து மாவட்டங்களில் 28 இடங்களில், ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த குத்தகைப் பகுதி சுமார் 190 ஹெக்டேர் ஆகும். ஆனால் மணல் அள்ளப்பட்டுள்ள மொத்த பரப்பளவு 987 ஹெக்டேர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Enforcement Directorate

ரூ.4,730 கோடி மணல் குவாரி ஊழலில் அரசு அதிகாரிகளுக்கும், தனியார் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே கூட்டு உள்ளது. அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. அகழ்வு இயந்திரங்களை வைத்திருக்கும் ஒப்பந்ததாரர்கள், பொதுப்பணித் துறையால் மணல் குவாரிக்காக குத்தகைக்கு விடப்பட்ட பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மணலை அள்ளி உள்ளார்கள்.

நான்கு மணல் குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 10-30 மடங்கு அதிகமாக ஒப்பந்ததாரர்கள் மணல் அள்ளியுள்ளனர். இந்த நான்கு குவாரிகளில், 4.9 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே மணல் அள்ள தமிழக அரசு அனுமதித்திருந்தாலும், அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு அருகிலுள்ள பகுதிகள் உள்பட 105 ஹெக்டேர் பரப்பளவில் சுரங்கம் தோண்டப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அகல அளவு மட்டுமின்றி ஆழத்தின் அடிப்படையிலும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

Also Read : திமுகவுக்கு சவால்விடும் கம்யூனிஸ்ட்! முல்லைப் பெரியாறு உள்பட 9 அணைகளை கட்ட கேரளா முடிவு! தமிழகத்திற்கு வரும் தண்ணீரைத் தடுக்க 4 ஆறுகளின் குறுக்கே தடுப்பணை!

ஐந்து மாவட்டங்களில் 28 இடங்களில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த குத்தகைப் பகுதி சுமார் 190 ஹெக்டேர் ஆகும். ஆனால் மணல் அகழப்பட்ட மொத்த பரப்பளவு 987 ஹெக்டேர் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஐ.ஐ.டி-கான்பூரால் அடையாளம் காணப்பட்ட நிறுவனமான டெர்ராகுவா யுஏவி சொல்யூஷன்ஸ் (Terraqua UAV Solutions) சமர்ப்பித்த தொழில்நுட்ப அறிக்கையின் அடிப்படையில் இது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சுரங்கங்கள் குத்தகைக்கு விடப்படுவதற்கும் முன்பும், குத்தகைக்கு விட்டு மணல் அள்ளப்பட்ட பின்பும் அளவை பகுப்பாய்வு செய்ய HD திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை அந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. அதேபோல், ட்ரோன்கள் மூலம் உயர் தெளிவுத்திறன் (HD) படங்கள், LIDAR Data மற்றும் பாத்திமெட்ரிக் ஆய்வுகள் உள்ளிட்ட முறைகளிலும் அந்நிறுவனம் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோபெல்கோ மற்றும் ஜேசிபி(M/s Kobelco and JCB) நிறுவனத்தால், தமிழ்நாட்டில் 16 வாடிக்கையாளர்களுக்கு விற்கப்பட்டு, மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட 273 இயந்திரங்களின் ஜி.பி.எஸ். கருவிகளை பகுப்பாய்வு செய்ததன் மூலம், அதிகப்படியான மணல் அள்ளப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களின் புவிஇருப்பிட தரவு(Geolocation Data) ஒரே நேரத்தில் பல இயந்திரங்கள் ஒரு இடத்திலிருந்து மணலை தோண்டி எடுத்ததைக் காட்டியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு இயந்திரங்கள் மட்டுமே ஒரு குவாரியில் வேலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு விதிகள் கூறுகின்றன. இயந்திரங்களின் வேலை நேரம், செயலற்ற நேரம் மற்றும் பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் அளவு ஆகியவை கூடுதல் ஆதாரங்களாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

Also Read : சென்னையை மீட்டுத் தந்த சிலம்புச் செல்வர் ம.பொ.சி.! இன்றைய அரசியலுக்கும் பொருந்தும் சிலம்புச் செல்வரின் கருத்துகள்!

இந்நிலையில், மணல் குவாரி மற்றும் மணலை கிடங்கிற்கு கொண்டு செல்வதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட நான்கு நிறுவனங்களின் பட்டியலையும், கோபெல்கோ மற்றும் ஜேசிபி நிறுவனங்களிடமிருந்து அகழ்வு இயந்திரங்களை வாங்கிய 16 பேர் யார் என்பதையும் அமலாக்கத்துறை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதோடு அல்லாமல், ஒப்பந்தக்காரர்கள் சட்டவிரோதமாக பெரும் செல்வத்தை குவித்துள்ளதாக அமலாக்கத்துறை இயக்குநரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் ரூ.128.34 கோடி மதிப்புள்ள 209 மணல் அகழ்வு இயந்திரங்கள் உள்பட ரூ.130 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே தற்காலிகமாக முடக்கியுள்ளது. சண்முகம் ராமச்சந்திரன், கருப்பையா ரெத்தினம், பன்னீர்செல்வம் கரிகாலன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 35 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.2.25 கோடி மதிப்பிலான டெபாசிட்களும் முடக்கப்பட்டுள்ளன. அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்கள்.

தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி விசாரணை குழுவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி இருந்த நிலையில், தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கும் (டிஜிபி) அமலாக்கத் துறை மணல் குவாரி முறைகேடு குறித்து ஆதாரத்துடன் கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் குவாரிகள் மூலம் ரூ.4,730 கோடி மதிப்புக்கு ஊழல் நடந்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு மணல் குவாரி மூலம் ரூ.36.45 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை, வேலூர், புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மணல் குவாரிகள் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், இடைத்தரகர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. மணல் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும், பினாமி பெயர்களில் சில ஆவணங்கள் இருந்ததும், போலி பில்கள் மூலம் மணல் விற்பனை செய்து ஜி.எஸ்.டிக்கு வரி இழப்பை ஏற்படுத்தி இருந்ததையும் அமலாக்கத்துறை கண்டறிந்தது.

With Input The New Indian Express

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry