ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மதுமதி ஐ.ஏ.எஸ்-க்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், எண்ணும் எழுத்தும் திட்ட மாவட்ட அளவிலான பயிற்சிக்கு கருத்தாளர்களாக நியமனம் செய்யும்போது, ஆசிரியர்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உறுதிமொழி பின்பற்றப்படவில்லை.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அளித்த செயல்முறை கடிதமும் பின்பற்றப்படவில்லை. விதிகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு, வட்டாரக் கல்வி அலுவலர்கள் விருப்பப்படியும், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் விருப்பப்படியும்; மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கருத்தாளர்களாக கலந்து கொள்வதற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்புகளுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 09,10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
நான்கு ஐந்தாம் வகுப்புகளுக்கான பயிற்சி 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயிற்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன முதல்வர்கள் செயல்முறைக் கடிதத்தினை அனுப்பி உள்ளார்கள்.
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இருக்கின்ற ஆசிரியர்கள் தான் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மாநில அளவில் கருத்தாளர்களாக DIET விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொள்ள வேண்டும் என விதிமுறைகள் வகுத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் மாநில கருத்தாளர்கள் பட்டியலிலும் இல்லை, மாவட்டக் கருத்தாளர் பட்டியலிலும் இல்லை.
பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களையே மாநில கருத்தாளர்களாகவும், மாவட்ட கருத்தாளர்களாகவும், ஒன்றிய கருத்தாளர்களாகவும் நியமனம் செய்யப்படும் நடைமுறைதான் இன்னமும் தொடர்கிறது. உடல்நல பாதிப்பு காரணமாக கலந்து கொள்ள இயலாது என கனிவாக கேட்டுக் கொண்டாலும், அவர்களை அச்சுறுத்தி கலந்து கொள்ளச் செய்து வருகிறார்கள்.
Also Read : குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் மற்றும் பழங்களை கொடுக்கலாமா? பெற்றோருக்கான யூஸ்ஃபுல் டிப்ஸ்!
தொடர்ந்து ஒருவரே பயிற்சியில் கலந்து கொள்வதற்கு கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரு சில வட்டாரக் கல்வி அலுவலர்கள், ஒருதலை சார்பாக உள்நோக்கத்துடன், பெண்ணாசிரியர்கள் சிலரை பழிவாங்குவதாகவும் ஆதாரப்பூர்வமாக மாநில இயக்கத்திற்கு கடிதம் வந்து கொண்டிருக்கிறது.
விருப்பம் இல்லாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வைக்கப்படும் ஆசிரியர்களை மாவட்ட கருத்தாளர் பயிற்சிப் பட்டியலில் இருந்து விடுவிக்குமாறு, SCERT இயக்குநர், SCERT இணை இயக்குநரை (பயிற்சி) தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
விருப்பமில்லாத நிலையில், பட்டியலில் இடம்பெற்று இருக்கக்கூடிய ஆசிரியர்கள் கருத்தாளர்களாக பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கை எடுத்தாலும், வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தி தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடக்கக்கல்வி இயக்குநரின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டுமென பெரிதும் வலியுறுத்துகிறோம். விதிகள் விதிகளை ஆள வேண்டும்; மாநில கருத்தாளர்களாக, மாவட்டக் கருத்தாளர்களாக DIET விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களை கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
கல்வித்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது? என்பதை புலனப்பதிவின் மூலம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். இதுவரை இதற்கான விடை கிடைக்கவில்லை. இதற்கு தாங்கள் ஒரு முடிவுகட்டுமாறு மீண்டும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry