
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, துணை முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித்துளை செயலாளர், மாநில திட்ட இயக்குநர் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில், “2024-2025 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி அளவில்/குறுவள அளவில்/வட்டார அளவில்/ மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இவ்வாண்டு 47,02,416 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை 24 போட்டிகளில் 55162 பள்ளிகளை சேர்ந்த 33,00,152 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதே போல் உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 60 போட்டிகளில் 11650 பள்ளிகளில் படிக்கும் 14,02,264 மாணவர்கள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். பல கட்டங்களாக போட்டிகள் நடைபெற்று, அவற்றில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு மட்டும் பரிசுகள், சான்றுகள், கலையரசன் மற்றும் கலையரசி விருதுகள் ஆகியவை சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அரங்கில் வரும் 24.01.2025 அன்று வழங்கப்படும் என மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறை கடிதம் அனுப்பி உள்ளார். இது மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் மனக்குமுறலை ஏற்படுத்தியுள்ளது.
முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு இடையே சிறிய புள்ளி இடைவெளிதான் இருக்கும். ஆனால் அவர்களில் முதலிடம் பிடித்தவர்களை மட்டும் சென்னைக்கு அழைப்பதும், மற்ற மாணவர்களுக்கு மாவட்டத்திலேயே முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பரிசுகள் வழங்குவதும் ஏற்புடையதாகுமோ? என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது மாணவர்களிடையே பாகுபாட்டையும், தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்குவதாக உள்ளது.
ஒவ்வொரு போட்டிகளிலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதில் மூன்றே பேர் அல்லது மூன்று குழு மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மொத்தமாக விழா எடுத்தால் அது மாணவர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பெருமையும் அடைந்து இருப்பார்கள்.

மாணவர்களை உற்சாகப்படுத்த வேண்டிய அரசு, மாணவர்களிடம் பாகுபாடு காட்டி இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்களை சென்னைக்கு அழைத்து விழா எடுக்காமல் இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. பாரபட்சம் காட்டுவதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மனநிலை, அழைத்து வந்த ஆசிரியர்களின் மனநிலை பாதிக்கப்படாதா?
எனவே, துணை முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் கனிவுடன் பரீசீலனை செய்து மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களை ஒரே இடத்தில் அழைத்து அவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், விருதுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டுமாய் பெரிதும் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry