2026ம் ஆண்டு சனவரி மாதத்துக்குள் 19,260 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட 76,803 அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என சூன் 25 அன்று, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளதை தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பாராட்டி வரவேற்று மகிழ்கின்றோம் என்று அந்த அமைப்பின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், தேர்தல் கால வாக்குறுதியினை சட்டப் பேரவையில் பதிவு செய்யவில்லையே என்ற கவலை உணர்வு நாளுக்கு நாள் மேலோங்கிக் கொண்டு வந்து கொண்டே இருந்தது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 26.6.2024 அன்று சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசுகிறபோது, பழைய ஒய்வூதியத் திட்டம் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள்-பணியாளர்களுக்கு அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனையில் உள்ளது என்பதை பதிவு செய்துள்ளார்கள்.
மத்திய அரசு அகவிலைப்படியினை உயர்த்துகிற போதெல்லாம், தமிழ்நாடு அரசும் அறிவித்து அதே தேதியில் அமல்படுத்தப்படும் என்பதை அறிவித்து உறுதிபடுத்தியுள்ளது போல், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு அமல்படுத்துவது குறித்து அரசின் கொள்கை முடிவில் பரிசீலனையில் உள்ளது என்று நிதி அமைச்சர் சட்டப்பேரவையில் மட்டுமல்ல, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் என சுமார் 21 லட்சம் நெஞ்சங்களில் பதிவு செய்துள்ளார்கள்.
மாணவர்களின் கல்வி நலனை பாதுகாத்திட ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நியமனம் வேண்டி தொடர்ந்து களத்தில் நின்று போராடி வருகிறார்கள். தற்காலிக ஆசிரியர்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வேலை வாய்ப்பக பதிவு முன்னுரிமை அல்லது அரசு கொண்டு வருகிற விதிகளுடன் நியமனத் தேர்வினை கைவிட்டு, இடைநிலை ஆசிரியர்கள் – பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து மாணவர்களின் கல்வி நலனை பாதுகாத்திட வேணுமாய் முதலமைச்சரையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரையும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பெரிதும் வேண்டி கேட்டுக் கொள்கிறோம். நீட் வேண்டாம், நியமனத் தேர்வும் வேண்டாம்.” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry