ஆந்திர நீட்டு மிளகாயால் புற்றுநோய் ஆபத்து! அதிக அளவு சேர்க்கப்படும் பூச்சிக்கொல்லிகள், நிறமிகள்..! சர்க்கரை நோய், மலட்டுத்தன்மையும் ஏற்படலாம் என எச்சரிக்கை!

0
100
Andhra chillies are highly pesticide susceptible |Representative Image | Image courtesy: iStock

3 Mins Read : சமையலில் நிறம் மற்றும் காரத் தன்மைக்காக மக்கள் பயன்படுத்தும் ஆந்திர நீட்டு மிளகாய் வற்றல் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொடி வகைகளால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா, சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், எத்தியோப்பியா உட்பட பல்வேறு நாடுகளில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1.37 லட்சம் டன் மிளகாய் உற்பத்தியாகிறது. உள்நாட்டு தேவைக்குப் போக பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. நம் நாட்டில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மிளகாய் உற்பத்தி அதிகமாக நடக்கிறது.

அதேநேரத்தில், நாட்டின் ஒட்டு மொத்த மிளகாய் உற்பத்தியில் ஆந்திரா 44 சதவீதமும், தெலுங்கானா 12 சதவீதமும் பங்களிப்பு செய்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில விவசாயிகள் மூன்று பருவங்களாக மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவின் குண்டூர் சந்தை தான், ஆசியாவிலேயே மிகப்பெரிய மிளகாய் வற்றல் சந்தையாக திகழ்கிறது. இங்கிருந்து தான், மிளகாய் வற்றலுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Also Read : காலையை விட மாலையில் நடப்பதுதான் ரொம்ப நல்லதா..? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

நடவு செய்யப்பட்ட மிளகாய் செடிகளில் இருந்து 75 நாட்களிலும், விதைப்பு செய்யப்பட்ட செடிகளில் இருந்து 105 நாட்களிலும் மிளகாய் அறுவடை செய்யலாம். மற்ற பயிர்களை காட்டிலும் மிளகாய் பயிர்களை பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன. எனவே, நடவு முதல் அறுவடை வரை, நான்கு முறைக்கு மேல் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து அளிப்பதற்காக யூரியா கரைசல் தெளிக்கப்படுகிறது. இலைப்பேன், காய் துளைப்பான், தேமல் நோய், பழ அழுகல் நோய், சாம்பல் நோய், இலைப்புள்ளி நோய், நாற்றழுகல் நோய், மஞ்சள் சிலந்திகள் ஆகியவற்றால் மிளகாய் பயிர்கள் பாதிப்பை சந்திக்கின்றன; பூக்கள் மற்றும் பிஞ்சுகளும் உதிர்கின்றன.

எனவே, நடவு முதல் அறுவடை வரை பல்வேறு காலகட்டங்களில், ‘குளோரிபைரிபாஸ், குயிலான் பாஸ், டைமித்தோயேட், மீத்தைல் டெமட்டான், டைக்கோபாஸ், எத்தியான், மேங்கோசெப், தாமிர ஆக்சிகுளோரைடு, கார்பென்டாசிம்’ உள்ளிட்ட பல பூச்சிக்கொல்லி மருந்துகளையும் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். பூச்சிகளை அழிப்பதற்கும், அதிக மகசூல் பெறுவதற்கும், தடை செய்யப்பட்ட அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை, மிளகாய் சாகுபடிக்கு பயன்படுத்துவது ஆந்திராவில் அதிகரித்துள்ளது.

Also Read : குத்தகைக் காலம் முடிந்தும் சுங்கச்சாவடிகளை மூட மறுக்கும் மத்திய, மாநில அரசுகள்! மூன்று மடங்கு லாபம் சம்பாதிக்கும் குத்தகைதாரர்கள்!

அறுவடை செய்யப்பட்ட மிளகாய் காய்ந்து வற்றலான பின், அவற்றின் வண்ணத்தை கூட்டுவதற்கும், பொலிவிற்காகவும் சில ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் காய்ந்த மிளகாய் எனப்படும் மிளகாய் வற்றல்களில், பூச்சிக்கொல்லியின் பாதிப்பு அதிகம் உள்ளது. இவற்றை சாப்பிடுவதால், சில வகை புற்று நோய்களும் உருவாகின்றன.

இதுபற்றி சென்னை பேட்டர்சன் புற்றுநோய் சிகிச்சை மைய நிறுவனர் மருத்துவர் விஜயராகவன் கூறும்போது, காய்ந்த மிளகாய் மீது பூஞ்சை வளர்ந்து அவற்றை கருப்பாக மாற்றுவது ஆபத்தானது. இது கல்லீரலால் நச்சுத்தன்மையை நீக்க முடியாத அஃப்லா நச்சுகள் போன்ற நச்சுகளை வெளியிடுகிறது, இது சாதாரண செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றுகிறது” என்கிறார். ஆனால் இது எதையும் உணராமல், நிறத்திற்காகவும், சுவைக்காகவும் ஆந்திர மாநில மிளகாய் வற்றல்களை பல்வேறு மாநில மக்களும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள நல்லகீரை நிறுவனர் ஜெகன், “உலகம் முழுதும் நீட்டு, குண்டு என, இரண்டு ரகங்களில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் குண்டு மிளகாய் சாகுபடி அதிகம் நடக்கிறது. ராமநாதபுரம் குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மழையை பயன்படுத்தி மிளகாய் சாகுபடி அதிகம் நடக்கிறது. எனவே, விவசாயிகள் நினைத்தாலும், அதிக உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால், பாசனத்திற்கு அதிகமான நீர் தேவைப்படும்.

Also Read : குடம்புளி…கேள்விப்பட்டிருக்கீங்களா? வியக்கவைக்கும் மருத்துவத்தன்மை! உடல் எடை குறையும், சீரணம் சீராகும்!

ஆனால், ஆந்திராவில் நிலத்தடி நீர் ஆதாரங்கள், ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீரை பயன்படுத்தி சாகுபடி நடக்கிறது. அதிக மகசூல் பெறுவதற்கு பலவகை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கட்டுப்பாடின்றி அம்மாநில விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். நீட்டு மிளகாய் தான் அதிகம் மகசூலும் செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மிளகாய் காய்ந்த பின், மிளகாய் வற்றலில் தயாரிக்கும் பொடிகளை, இறைச்சிகள், கடல் உணவுகளில் பயன்படுத்தும் போது நிகழும் வேதி மாற்றத்தால், புற்று நோய் பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

உணவில் நிறத்தை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். இதற்காக, பல தனியார் நிறுவனங்களும், வண்ணமயமான மிளகாய் பொடிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. நாட்டில் பெரும்பாலான மசாலா நிறுவனங்களும், ஆந்திராவில் இருந்து தான் மிளகாய் வற்றல்களை வாங்கி, பல வகை பொடிகளை தயாரித்து விற்பனை செய்கின்றன.

இது போன்ற மிளகாய் பொடிகளைப் பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்; இது குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மிளகாய் வற்றல் பொடிகளை, உணவுகளில் பல்வேறு நாட்டினர் பயன்படுத்துவது கிடையாது.
பெயின்ட் உள்ளிட்டவற்றில் நிறத்தை கூட்டுவதற்காக பயன்படுத்துகின்றனர். மிளகாய் வற்றல் விற்பனை வாயிலாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. இதனால், அம்மாநில அரசுகளும், உணவு பாதுகாப்பு துறையும், இதை கண்டு கொள்ளாமல் உள்ளன.” இவ்வாறு அவர் கூறினார்.

Also Read : இன்ஸ்டன்ட் இட்லி! சைட்டிஷ் கூட இல்லாம அப்படியே சாப்பிடலாம்! புளிக்க வைக்க வேண்டாம்; மாவு அரைக்கிற வேலை மிச்சம்!

தமிழக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறும்போது, “தமிழகத்தில் மாவட்ட வாரியாக நியமன அலுவலர்கள் உள்ளனர். மேலும், உணவுப்பொருட்களின் மாதிரிகளை ஆய்வு செய்யக்கூடிய ஆய்வகங்களும் உள்ளன. தற்போது, பயன்பாட்டில் உள்ள மிளகாய் வற்றல் மற்றும் மிளகாய் பொடிகளில், எவ்வித நஞ்சு பொருட்களும் இருப்பதாக ஆய்வகங்களில் கண்டறியப்படவில்லை. சந்தேகம் ஏற்படும் போது, மிளகாய் உள்ளிட்ட ஒவ்வொரு உணவுப்பொருளும் ஆய்வகத்தில் சோதனை செய்யப்படும். புற்று நோய் ஏற்படுத்தும் நச்சு இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளனர்.

இதுபற்றி கூறும் பொது சுகாதாரத்துறை நிபுணர் க.குழந்தைசாமி, “காற்று, தண்ணீர், உணவுப்பொருட்கள் வாயிலாக, மனித உடலுக்குள் செல்லும் வேதிப்பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்தும். பயிரிடும் போது அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தினால், அந்த மிளகாயில் இயற்கையாகவே புற்று நோய் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் காரணிகள் இருக்கும். அவற்றை சாப்பிடுவதன் வாயிலாக புற்று நோய் பாதிப்பு ஏற்படும். மிளகாய் வற்றலை சிவப்பாக மாற்ற கலர் பூசும் வாய்ப்பு உள்ளது. அந்த கலருடன் சாப்பிடும் போது, புற்று நோய், சர்க்கரை நோய், மலட்டுத் தன்மை பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக, ஆணுக்கு பெண்ணின் தன்மையையும், பெண்ணுக்கு ஆணின் தன்மையையும் ஏற்படுத்தி, ஹார்மோன் மாற்றத்தையும் ஏற்படுத்தும். இது பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் வாயிலாகவும், பொதுமக்களுக்கு பிரச்னை வராமல் மத்திய, மாநில அரசுகளால் தடுக்க முடியும்.”

Courtesy – Dinamalar

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry