
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “மாநில அளவில் நடைபெற்றது (SLAS) அடைவு திறன் தேர்வல்ல. நீட் தேர்வுக்கு ஒப்பான வினாத்தாள்களுடன் ஒத்திகை பார்த்துள்ள இன்னொரு தேர்வு. மாணவர்களின் கல்வித்திறனை சோதித்துப் பார்க்கும் தேர்வு அல்ல; தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உள்நோக்கத்துடன் சோதனை செய்துள்ள தேர்வு.
கல்விச் சிறந்த தமிழ்நாட்டில் சோதனையை ஏற்படுத்திய இந்தத் தேர்வின் அபாயம் குறித்து முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் செய்திகளை கொண்டு போய் சேர்க்கின்ற கடமை நமக்கு உள்ளது.

திருச்சியில் நடைபெற்ற சாரண சாரணியர் இயக்கம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் தமிழ்நாட்டிற்கு பெருமைகளை சேர்த்துள்ளார்கள் என்றால் மிகையாகாது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பாராட்டும் வகையில் விலை உயர்ந்த வெள்ளி யானையை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
இரண்டாம் தேதி நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், ‘அன்பில் மகேஷ் பொய்யாமொழியை தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பெற்றுள்ளதால் நாம் பெருமை கொள்கிறோம். இந்தப் பெருமையெல்லாம் காண்பதற்கு அவருடைய தந்தையார், என்னுடைய சகோதரர் பொய்யாமொழி இல்லையே என்ற கவலை இருந்தது. ஆனால் அவர் இடத்திலிருந்து நான் பெருமை கொள்கிறேன்’ என்று பேசி உள்ளார்கள். இதே போன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை, முதலமைச்சர் பாராட்டி வருகிறார்கள்.
Also Read : மாணவர்களின் சாபம் சும்மா விடாது..! பள்ளிக் கல்வித்துறைக்கு ஐபெட்டோ எச்சரிக்கை!
பெற்றோர்களை கொண்டாடுகிற நிகழ்வு, கனவு ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பெருமைப்படுத்துகிற நிகழ்ச்சி எல்லாம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பெருமையினை கொண்டு வந்து சேர்த்துள்ளது. அதேநேரம், கல்வித்துறையில் கள ஆய்வை செய்கிற போது அமைச்சர் மீதான விமர்சனங்கள் அடுக்கடுக்காக பெருகி வருவதை கேட்க முடிகின்றது.
குரூப் தேர்வு நடத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை போன்ற அமைப்புகள் நடத்துவதைப் போன்று மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்பு பிள்ளைகளுக்கு எதிர்பார்க்காத, எளிதில் எழுத முடியாத பல கேள்விகளைக் கேட்டு அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்கள். ஒரு வகுப்புக்கு 20 மாணவர்கள் வீதம் நான்கு விதமான வினாத் தாள்களை கொடுத்து விடை அளிக்கச் செய்துள்ளனர். அவர்கள் கற்பனை உலகில் மிதந்து வருகிறார்கள்.

பள்ளிக்குச் சென்று பாடம் நடத்தாதவர்கள், மாணவர்களின் கற்றல் கொள்திறன் பற்றி அறியாதவர்களால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்கள் இது. இந்த விடைத்தாள் முழுவதையும் திருத்தி சோதித்துப் பார்த்து, அதை உண்மைத் தன்மையுடன் வெளியிட்டால், ஆளுநர் தமிழ்நாடு ஆர்.என். ரவி, கல்வித்துறையை பற்றி எவ்வாறு தரம் தாழ்த்தி பேசி வருகிறாரோ, அதற்கு வலு சேர்க்கும் அபாயமாக தான் அமையும். ஏசெர்(ASER) அறிக்கையை விட இது மோசமாக இருக்கும். நாம் என்னதான் நீட் தேர்வை எதிர்த்தாலும், மத்திய அரசின் கல்விக் கொள்கையை திணிப்பதில் இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் சிலர் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள்.
Also Read : கண் இமைகளின் அமைப்பு வெளிப்படுத்தும் ஆளுமைப் பண்புகள், குணாதிசயங்கள்!
இந்த வினாத்தாள் தயாரித்தவர்களை, இதை வெளிக்கொண்டு வந்தவர்களை இனம் கண்டு களை எடுக்க வேண்டுமாய் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பொதுநோக்கத்துடன் வலியுறுத்துகிறோம். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 234 தொகுதிகளிலும் பள்ளிகளைப் பார்வையிட்டிருக்கிறார் என்பது எதார்த்தமான உண்மையாகும். ஆனால் பள்ளிக் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்று சில நிமிடமாவது தெரிந்து கொண்டு செயல்படுமாறு அக்கறை உணர்வுடன் வேண்டுகிறோம்.
எந்தப் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாத ஒரு கல்வி அமைச்சர் தமிழ்நாட்டுக்கு தேவையா? என்று அரசியல் கட்சித் தலைவர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்கள். ஆசிரியர் சங்கங்களும் இதே கேள்வியை கேட்டு வீதியில் போராடி வருகிற போது நெஞ்சு பொறுக்கவில்லை. அக்கறை உணர்வுடன் வேண்டுகிறோம், ஆய்வு செய்யுங்கள்..! தீர்வு காண முன் வாருங்கள்..! விளம்பரத்தை விட உண்மைத்தன்மையை அறிய பாடுபடுவோம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry