
ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், “ஏசெர்(ASER) அறிக்கையில் தமிழ்நாடு பீகாரை விட பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்று சில கட்சித் தலைவர்கள் பள்ளிக் கல்வித்துறையின் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள். எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவன் இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட படிக்க தெரியவில்லை என்கிறார்கள். இதற்கு ஆசிரியர்களை பொறுப்பாக்குகிறார்கள்.

12 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனம் நடைபெறவே இல்லை. மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள்தான் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு 12,000 ரூபாய் ஊதியம். வேலை பார்த்த நாட்களுக்கு மட்டும்தான் ஊதியம் என அந்த ஆசிரியர்களை தினக்கூலிகளாக மாற்றி வருகிறார்கள்.
ஈராசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் தான் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. எந்த ஆசிரியர்களையும் அன்றாடம் மாணவர்களுக்கு பாடம் நடத்த அனுமதிக்காத பள்ளிக்கல்வித்துறை, விளம்பரத்திற்காகவும், புள்ளி விவரத்திற்காகவும் புதுப்புது பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளை செய்ய வைக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், ஏசெர்(ASER) அறிக்கையில் இப்படிப்பட்ட புள்ளி விவரங்கள் வராமல் என்ன செய்யும். சரி அது போகட்டும்..! எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனுக்கு இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தை படிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் ‘ஸ்லாஸ்’ (SLAS – State Level Achievement Survey) தேர்வு பிப்ரவரி 4ந் தேதி தொடங்கி 6ந் தேதி வரை நடக்கிறது. இந்தத் தேர்வுக்கான வினாத்தாளை முதல் நாள் மாலை பெற்றுக்கொள்ள வேண்டுமாம், அல்லது காலையில் பெற்று செல்ல வேண்டுமாம்.
Also Read : வாழ்க்கையில் எளிதாக வெற்றிபெற வேண்டுமா? உங்களுக்கு கைகொடுக்கும் காலை நேர பழக்கவழக்கங்கள்!
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தேர்வினை நடத்துகிறார்கள். 3-ம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ம் வகுப்புக்கு 45 கேள்விகள், 8-ம் வகுப் புக்கு 50 கேள்விகள். ஒவ்வொரு நாளும் தேர்வு முடிந்த பிறகு, வினாத்தாள்கள், ஓஎம்ஆர் விடைத் தாள்களை பெற்று வட்டார வள மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு என நீட் தேர்வை போல மூன்று பாடத்திற்கும் மூன்று வகையான வினாத்தாள்கள். இரண்டாம் வகுப்பில் இருந்தும் வினாக்கள் இருக்குமாம். மூன்றாம் வகுப்பு மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்க கூடியவர்கள் பத்தியை படித்து புரிந்து கொள்வதற்கே சிரமப்படுவார்கள் என்ற நிலையில், அவர்களால் ஆங்கிலம், தமிழ் படித்துப் பார்த்து எங்கிருந்து எழுதுவார்கள் எப்படி எழுதுவார்கள்?
தேசியக் கல்விக் கொள்கையில், மாநில அரசுகளே மூன்றாம் வகுப்பு அடைவு தேர்வுக்கு விலக்கு அளிப்பதில் இருந்து முடிவு எடுத்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையோ, மத்திய அரசின் வழிகாட்டுதலில் மூன்றாம் வகுப்புக்கும் SLAS எனப்படும் திறனறி அடைவுத் தேர்வு நடத்துகிறார்கள்.
தேர்வு தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம், பள்ளிக் கல்வித்துறை, வினாத்தாள்களை தயாரித்தவர்கள் என எல்லோரும் ஒரு இடத்தில் அமர்ந்து, ‘ஆசிரியர் இல்லாத, தலைமை ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், நீட் தேர்வு போல நடத்தப்படும் இந்த தேர்வுக்கான வினாத்தாளை வைத்து மாணவர்கள் எப்படி பதில் எழுதுவார்கள் என்பதைச் சிந்தித்திருக்க வேண்டாமா?
ஏசர் (ASER) அறிக்கையைவிட, இந்த SLAS தேர்வு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தும். எண்ணும் எழுத்தும் திட்டம் நடத்தி பயனில்லை. ஆறாம் வகுப்பிற்கும் எண்ணும் எழுத்துத் திட்டத்தினை தொடரலாம்; புத்தகத்தை அச்சடிக்கலாம்; நிர்வாகம் வணிக நோக்கோடு செயல்படுகிறது என்றால், பள்ளிக் கல்வித்துறையும் வணிக நோக்கத்தோடு செயல்படலாமா?
ஏசர் (ASER) அறிக்கையைவிட SLAS தேர்வு முடிவு மோசமாக வந்தால், கற்றல் கற்பித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததே அதற்கான காரணமாக இருக்கும். கற்பித்தல் கொள்ளளவை பற்றி பள்ளிக்கல்வித்துறை அறியவில்லை. ஊடகங்களை அழைத்து எங்களது வேதனையை தெரிவித்திட உள்ளோம். SLAS பற்றிய முழு விவரங்களையும் அவர்களிடம் பேச உள்ளோம். அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் வெளியிடுவோம்.
Also Read : குழந்தைகளை எந்த வயது வரை உங்களுடன் தூங்க வைக்கலாம்? பெற்றோருக்கான முக்கிய டிப்ஸ்!
04.02.2025 அன்று நடைபெறும் SLAS தேர்வில் மூன்றாம் வகுப்புக்கு 35 வினாக்கள், 05.02.2025 அன்று ஐந்தாம் வகுப்புக்கு 45 வினாக்கள், 06.02. 2025 அன்று எட்டாம் வகுப்புக்கு 50 வினாக்கள் என்ற அடிப்படையில், அனைத்து அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது.
இதே நிலை நீடித்தால் ‘கல்விச் சிறந்த தமிழ்நாடு’ என்பது கேள்விக்குறியாகும். பாடத்தை பள்ளி ஆசிரியர்கள் நடத்துகிறார்கள், ஸ்லாஸ் தேர்வு நடத்துவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பது தலைமையாசிரியர் பணி. தொடர்ந்து ஆசிரியர்களுக்கு அழுத்தத்தையும், குருநிந்தனையினையும் செய்து வரும் பள்ளிக் கல்வித்துறையை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது. மாணவர்களின் சாபம் சும்மா விடாது..! விடியலை ஏற்படுத்துவோம்..!” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry