ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்தத் தலைவருமான வா.அண்ணாமலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், “தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் சார்பாக 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை இயக்ககத்தின் (DPI) முன்பு 29, 30,31 ஆகிய தேதிகளில் முற்றுகைப் போராட்டத்தினை அறிவித்து நடத்தி வருகிறார்கள்.
முதல் நாள் முற்றுகைப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 13 மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களை எட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் எல்லோரும் இப்பொழுது அவரவரது ஊர்களுக்கு செல்கிறார்கள். இன்று 30.07.2024, 13 மாவட்டங்களிலுள்ள ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள இருந்தார்கள்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் டெஸ்மா சட்டத்தை கொண்டுவந்து ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டவர்களையும், சிறையில் இருந்தவர்களையும் சட்டத்தின் துணை கொண்டு கருணாநிதி எங்களை பாதுகாத்தார்கள். ஆட்சிக்கு வந்தபின் டெஸ்மா சட்டத்தை நீக்கினார்கள்.
ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் டெஸ்மா சட்டம் அமல்படுத்தப்படாமலேயே, டெஸ்மா சட்டத்தின் கூறுகளை காவல்துறை நடைமுறைப்படுத்துகிறது. திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர் இயக்கங்களின் பொறுப்பாளர்களின் இல்லத்திற்கு காவல்துறையினர் சென்று சிலரை இரவு முழுவதும் வீட்டு காவலில் வைத்துள்ளார்கள். சிலரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்கள். போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது! எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்! என்று டெஸ்மா சட்டத்தைவிட கொடுமையாக அச்சுறுத்தி அவர்கள் கட்டுப்பாட்டில் மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களை கொண்டு வந்துள்ளார்கள்.
Also Read : கூகுள் மேப்ஸ்-ல் அட்டகாசமான அப்டேட்! ஒத்தையடி பாதை, ஃப்ளைஓவர் பிரச்சனைகளுக்குத் தீர்வு!
பேருந்து, வேன் பயணம் மேற்கொண்டவர்களையும் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். ஆசிரியர் என்று ஒருவரை நினைத்தால் உடனடியாக அவரை காவல்துறை தங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். திராவிட மாடல் அரசில் கருத்து சுதந்திரத்துடன் போராடும் ஆசிரியர்களுக்கே இந்த நிலைமையா?அழைத்துப் பேசி பிரச்சனைகளை தீர்வு காண வேண்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அலுவலர்களும் காவல்துறை மூலம் அச்சுறுத்துவது சரியானதா? மத்திய அரசின் சர்வாதிகாரத்தை அன்றாடம் எதிர்த்து வருகிறோம். மாநில அரசில் ஆசிரியர்கள் கருத்து சுதந்திரத்துடன் போராடுவதற்கு இவ்வளவு கெடுபிடியா?
ஆங்கிலேயர்கள் காலத்து அடக்குமுறையை இது நினைவுக்குக் கொண்டுவருகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியவர்கள், எமர்ஜென்சியை எதிர்த்து போராடியவர்கள், சமூக நீதிக்கு எதிராக எந்த சக்திகள் திரண்டு வந்தாலும் எதிர்த்து போராடுகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சியில் ஆசிரியர்கள் கருத்து சுதந்திரத்துடன் போராடுவதற்கு கூட உரிமை இல்லையா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு கெடுபிடியினை கண்டு நாங்கள் வேதனையுகிறோம். கெடுபிடிகளைத் தாண்டி நாளையும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
உடனடியாக முதலமைச்சர் தனிக்கவனம் மேற்கொண்டு நான்கு மாவட்டங்களைச் சார்ந்த வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சங்கங்களுடைய பொறுப்பாளர்களை விடுவித்து கருத்து சுதந்திரத்துடன் போராடுவதற்கு உதவிடுமாறு, இயக்கங்களின் மூத்த தலைவர் என்ற முறையிலும்… ஆட்சியின் மீது முழு அக்கறை கொண்டு கொண்டவன் என்ற முறையிலும் பெரிதும் வேண்டுகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry