
சென்னை மாவட்டத்தில் பிப்ரவரி 4ந் தேதி அதிமுக கள ஆய்வு குழு ஆலோசனை நடைபெறும் என்று கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தென்சென்னை தெற்கு(கிழக்கு) மாவட்டத்தில், மாவட்ட கழகச் செயலாளர் வேளச்சேரி எம்.கே. அசோக் தலைமையில், முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாருமான செ. செம்மலை கள ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனைகளை வழங்கினார்.
வேளச்சேரியில் நடைபெற்ற, வேளச்சேரி, மயிலாப்பூர் தொகுதிகளுக்கான கள ஆய்வு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செ. செம்மலை, உறுதியோடு இங்கு அமர்ந்திருக்கும் அனைத்து நிர்வாகிகளின் இலக்கு எதுவாக இருக்கிறது என்று சொன்னால், கழக பொதுச்செயலாளர், மக்களின் முதல்வர், நமக்கெல்லாம் என்றென்றும் முதல்வராகவும், தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராகவும் பொறுப்பேற்க இருக்கிற மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டும் என்ற ஒன்றையே லட்சியமாகக் கொண்டு இருப்பதை உணர முடிகிறது.

நீங்கள் நினைத்தால் நிச்சயமாக அது நடக்கும். அதிலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நம்முடைய கழகத்துக்கென்று ஒரு சிறப்பு உண்டு. தமிழ்நாட்டிலே இருக்கிற, ஏன் இந்தியாவிலே இருக்கிற கட்சிகளில் இருந்து இது மாறுபட்ட இயக்கம். அதிமுகவை ஒரு அரசியல் கட்சியாக ஆரம்பிக்கவில்லை. இது ஒரு மக்கள் இயக்கமாக மாறியது. நம்முடைய இயக்கத்தை பொறுத்தவரை, இது ஒரு சுயம்பு. அரசியல் இயக்கம் மட்டுமல்ல, இது ஒரு மக்கள் இயக்கம். இன்னும் சொல்லப்போனால், இது உருவாக்கப்பட்ட கட்சி அல்ல, தானாகவே உருவான கட்சி.
பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை திமுகவில் இருந்து நீக்கியவுடன், மக்களாகவே முன்வந்து துவங்கிய இயக்கம். மற்ற கட்சிகளை பொறுத்தவரை, ஒரு தலைவர் கட்சியை ஆரம்பிப்பார், அதை பதிவு செய்வார், அதன்பிறகு உறுப்பினர் சேர்ப்பார். இதுதான் மற்ற கட்சிகளின் வழக்கம். ஆனால், மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கத்திற்கு, மக்களின் வற்புறுத்தல் காரணமாக பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அதுதான் வரலாறு. அப்படித்தான் இந்த இயக்கம் உருவானது.

மற்ற கட்சிகளிலே தலைவர் இருப்பார், அவர்களுக்குத் தொண்டர்கள் இருப்பார்கள். ஆனால், அதிமுகவில் மட்டும்தான் அரசியல் ரீதியாக தொண்டர்கள் என்று சொன்னாலும், நாமெல்லாம் எம்ஜிஆர்-ன் பக்தர்கள். அதுதான் இந்த இயக்கத்திற்கு இருக்கின்ற சிறப்பு. எம்ஜிஆர்-ன் பக்தர்கள் ஆகிய நாம், புரட்சித் தலைவி அம்மாவின் பிள்ளைகள். நம்முடைய பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடியாரின் சகோதரர்கள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட தம்பிகளை பெற்று இருக்கிற நம்முடைய பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியாருக்கு இனி தோல்வியே இல்லை.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதைப்போல, அண்ணன் உடையான் எதற்கும் அஞ்சான். நாம் மாண்புமிகு எடப்பாடியாரை அண்ணனாக பெற்று இருக்கிறோம். நமக்கு அச்சம் தேவையில்லை. 2026 சட்டமன்ற தேர்தலிலே, நிச்சயமாக தொண்டர்களின் சக்தியாக மாண்புமிகு எடப்பாடியார் விளங்குவார் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். ஆளுகிற பொறுப்பிலே இருக்கின்ற முதலமைச்சர் ஸ்டாலின் எந்த கூட்டங்கள் என்றாலும் ஒரு கருத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார். 2026 தேர்தலிலே 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் என்று சொல்லி வருகிறார்.


இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் ஒன்றை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அதிமுக இதுவரை 7 முறை திமுகவை தோற்கடித்திருக்கிறது. 1977, 1980, 1984, 1991, 2001, 2011, 2016 ஆகிய 7 தேர்தல்களில் திமுகவை தோற்கடித்த இயக்கம்தான் அஇஅதிமுக. அதை ஸ்டாலின் மறந்துவிடக்கூடாது. இங்கு உங்களுடைய உற்சாகத்தைப் பார்த்து, உங்களுடைய உணர்வுகளை மதிப்பீடு செய்து சொல்கிறேன், மாவட்ட கழகச் செயலாளர் எம்.கே. அசோக் அவர்களை வைத்துக்கொண்டு சொல்கிறேன், 2026 தேர்தலிலே 8வது முறையாக திமுகவை அதிமுக தோற்கடிக்கும். இது நிச்சயமாக நடக்கும்.
ஸ்டாலின் வேண்டுமானால் சொல்லிக்கொண்டு இருக்கலாம், ஆனால், மக்களிடம் இருக்கும் மாற்றம் நமக்கு சாதகமாக இருக்கிறது. உங்கள் உழைப்பை மதிக்கிறேன், உங்கள் உழைப்புக்கு தலைவணங்குகிறேன். உழைக்கக் கூடியவர்கள், இதுவரை உழைத்தவர்கள், இந்த இயக்கத்துக்காக பாடுபட்டவர்களாகிய உங்களால்தான் ஆர். நட்ராஜ் ஐபிஎஸ் வெற்றி பெற்றார், டாக்டர் ஜெயவர்தன் வெற்றி பெற்றார். இந்த இயக்கம் பல வெற்றிகளைப் பெற்றதற்கு காரணம் உங்கள் உழைப்புதான்.
உங்களிடம் அன்போடு கேட்டுக்கொள்வது, உங்களிடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்பதுதான். ஒத்துழைப்பு மிகவும் அவசியம். நம்முடைய பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் எல்லாவற்றையும் அறிந்து வைத்துள்ளார். அவர் யாரையும் பழிவாங்கவோ, பகைத்துக்கொள்ளவோ விரும்புவதில்லை. எல்லோருடனும் வேலைபார்க்க வேண்டும் என நினைக்கிறார். நம்முடைய தலைவரை நாம் ஏமாற்றக் கூடாது. நம் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தலைவனிடம் நடிக்கக் கூடாது. அவருக்கு உண்மையான தொண்டர்களாக நாம் இருக்க வேண்டும், பணியாற்ற வேண்டும்.
அப்போதுதான் நாம் இலக்கை அடைய முடியும். நமது இலக்கு 2026 தேர்தல். நமது லட்சியம் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை முதலமைச்சர் ஆக்குவது. இந்த ஒரே நோக்கத்தோடு நாம் ஒருங்கிணைந்து உழைப்பை கொடுத்து பணியாற்றினால் நிச்சயமாக இலக்கை அடைய முடியும். நாம் செய்த சில தவறுகளால் வெற்றி வாய்யை இழந்திருக்கிறோம். மெத்தனம் இருக்கக்கூடாது. 2026 தேர்தல் ஒரு சவாலான தேர்தல். அதை மனதில் எண்ணி செயல்பட வேண்டும்.
Also Read : மாணவர்களின் சாபம் சும்மா விடாது..! பள்ளிக் கல்வித்துறைக்கு ஐபெட்டோ எச்சரிக்கை!
பலமான கூட்டணி நிச்சயம் அமையும். அதில் உங்களுக்கு ஐயப்பாடே வேண்டாம். அதற்கான சூழ்நிலை, சந்தர்ப்பம், வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி நடத்துகிற திமுகவுக்கு மாற்று என்று சொன்னால் அது அஇஅதிமுக ஒன்றுதான். மற்றவர்கள் ஏதேதோ பேசுவார்கள், பேசட்டும். அந்தக் கட்சிகளின் உயரம் அவர்களுக்குத் தெரியும். திமுக மீது, இந்த ஆட்சியின் மீது எதிர்ப்பு மன நிலையிலே இருக்கின்ற அரசியல் கட்சிகள் தமிழகத்தில் நிறைய இருக்கின்றன.
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு மரண தைரியம் என்னவென்று சொன்னால், அவர்களுக்கு எதிர்ப்பாக இருக்கின்ற, எதிர்ப்பு மன நிலையிலே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாக நின்று வாக்குகளை சிதறவிட்டால், கூட்டணியின் தயவால் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தோடு இருக்கிறார். ஆனால் நான் இந்த கூட்டத்தின் வாயிலாக, சென்னை பெருநகரில் நின்று கொண்டு சொல்கிறேன், தயவுசெய்து, திமுக ஆட்சிக்கு எதிரான மன நிலையில் இருக்கிற கட்சித் தலைவர்கள், திமுகவுக்கு எதிராக இருக்கின்ற வாக்குகளை சிதற வைத்துவிடாதீர்கள். இதுதான் எனது அன்பான வேண்டுகோள்.

திமுக மீது எதிர்ப்பு உணர்வுள்ள, இந்த ஆட்சி மீது எதிர்ப்பு உணர்வுள்ள கட்சிகள் அதிமுகவோடு கரம் கோர்த்து, இணைந்து இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் பின்னால் அந்தக் கட்சிகள் அணிவகுக்க வேண்டும். அப்போதுதான், மக்கள் எதிர்க்கிற, மக்கள் விரோத ஆட்சியை நம்மால் வீழ்த்த முடியும் என்பதை திமுக எதிர்ப்பு உணர்வுள்ள கட்சிகளிடம் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் பேசினார்.
திமுக எதிர்ப்பு உணர்வுள்ள கட்சிகள் அதிமுகவோடு கரம் கோர்க்க வேண்டும். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதை தடுக்கலாம் – முன்னாள் அமைச்சர் செம்மலை. @EPSTamilNadu @AIADMKOfficial @AdmkStudentWing @VELACHERYASHOK pic.twitter.com/xq6vjaEAu3
— ADMK TODAY – Say No To Drugs & DMK (@AdmkToday) February 6, 2025
கழக மகளிர் அணி இணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் வி. சரோஜா, முன்னாள் எம்.பி.யும், புரட்சித் தலைவி அம்மா பேரவை இணை செயலாளருமான டாக்டர் ஜெ. ஜெயவர்தன், முன்னாள் எம்.பி.யும், கழக அமைப்புச் செயலாளருமான டாக்டர் வா. மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஆர். நட்ராஜ் ஐ.பி.எஸ்., கழக செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோர் இந்தக் கள ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள். மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கள ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry