அரசு ஆதரவில் சைபர் தாக்குதல்! எதிர்க்கட்சி எம்.பி-க்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அலெர்ட்! ஒட்டுக்கேட்கிறதா மத்திய அரசு?

0
33
‘Not afraid of phone tapping’: Rahul Gandhi targets govt over Apple’s warning

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்களில் ‘ஹேக்கிங்’ முயற்சி நடந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களின் செல்போன் மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றை மத்திய அரசு உளவு பார்ப்பதாக சில அரசியல் கட்சித் தலைவர்களும், எம்.பி.க்களும் தங்களின் எக்ஸ் வலைதள பக்கங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

அரசின் ஆதரவில் செயல்படும் சைபர் தாக்குதல்காரர்களால் ஆப்பிள் ஐடியுடன் தொடர்புடைய உங்கள் ஐபோன், குறிவைக்கப்படுகிறது என்று ஆப்பிள் நம்புகிறது. இந்த சைபர் தாக்குதல் காரர்கள் ‘நீங்கள் யார் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்’ என்பதன் அடிப்படையில் உங்களைத் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை தகவல்

அவர்கள் உங்கள் ஐ-போன் பாதுகாப்பு அமைப்பைத் தாக்கினால் உங்களின் தகவல்கள், உரையாடல்கள், கேமரா, மைக்ரோபோன் உள்ளிட்டவற்றை அணுகி உங்களைக் கண்காணிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, இது தவறான அலாரமாக இருக்கலாம். இருப்பினும் தயவுசெய்து இந்த எச்சரிக்கையை மிகுந்த கவனத்துடன் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பி-க்களான மஹுவா மொய்த்ரா, பிரியங்கா சதுர்வேதி, ராகவ் சாதா, சசி தரூர், அசாதுதீன் ஓவைசி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டவர்களுக்கும், சித்தார்த் வரதராஜன் போன்ற சில முக்கிய பத்திரிகையாளர்களுக்கும் இந்த எச்சரிக்கை வந்துள்ளதாக அவர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். இது குறித்து மத்திய பா.ஜ.க அரசை விமர்சித்துள்ள அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல. குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல். ஏகபோக நிறுவனங்களின் அடிமைகளாக இளைஞர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். ஏகபோக முதலாளிகளிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டியது அவசியம்.

பாஜகவினர் இளைஞர்களின் கவனத்தை திசைத் திருப்ப முயற்சிக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதற்கு எதிராக போராடுகின்றனர். ஆனால், நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். உங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ ஒட்டுக்கேட்டுக் கொள்ளுங்கள்.

எனக்கு கவலையில்லை, வேண்டுமென்றால் என் போனையே தருகிறேன். செல்போன்களை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயலல்ல. குற்றவாளிகளும், திருடர்களும் செய்யும் செயல். பிரச்சினைகளை திசைத் திருப்பவே மத்திய அரசு இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டு வருகிறது” என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கையை இதற்கு முன் பல நாட்டின் தலைவர்களுக்கு, பிரபலங்களுக்கு அனுப்பியுள்ளது. தற்போது, இந்தியாவில், அதுவும் குறிப்பாக எதிர்க் கட்சித் தலைவர்களுக்கு ஆப்பிள் தரப்பிலிருந்து இது முதன்முறையாக வந்திருப்பதால் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அக்கறை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, ஆப்பிள் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. சுமார் 150 நாடுகளில் உள்ள மக்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை அறிவிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது. நாடு முன்னேறுவதைக் காண விரும்பாத மக்கள் இதுபோன்ற அரசியலில் ஈடுபடுகின்றனர்” என்றார்.

கடந்த 2021-ல் ‘பெகாசஸ்’ என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல முக்கியத் தலைவர்கள், பிரபலங்கள், பத்திரிகையாளர்களின் லேப்டாப், ஸ்மார்ட்போன்களில் ஊடுருவியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தற்போது வந்திருக்கும் இந்த ஆப்பிளின் எச்சரிக்கை சைபர் தகவல் பாதுகாப்பு அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கி உள்ளதாகவும், அரசே எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry