கோவை சிறையில் சமூக ஊடக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சமூக ஊடக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஒருசில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம்சாட்டி கைது செய்துள்ளது காவல் துறை. அவர் தெரிவித்த கருத்துகள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை சந்தித்தப் பின் அளித்த பேட்டியில், சவுக்கு சங்கரை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நல்ல நிலையில் சிறைக்கு சென்றார்.
இந்நிலையில், கோவை சிறையில் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். எனவே, நீதிபதி ஒருவரை நேரில் அனுப்பி சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்ய வேண்டி மனு அளித்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பத்திரிகை சுதந்திரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை வாய்ச்சவடால் விடும் திமுக அரசில் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. மேலும், பெண்களை இழிவாகப் பேசிய, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட பல திமுகவினர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர்கள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர்.
சமூக ஊடக பத்திரிக்கையாளர்
திரு. @SavukkuOfficial ஒரு சில சர்ச்சைக் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டி கைதுசெய்துள்ளது காவல்துறை. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோவை சிறையில் அவரை…
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 7, 2024
சட்ட நடவடிக்கைகளும் நீதியும் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். சட்டத்தை காவல்துறையே கையில் எடுப்பது என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இத்தகைய தாக்குதல்கள் தவறான முன்னுதாரணமாகிவிடும். எனவே கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக ‘சவுக்கு சங்கர்’ மீது சேலம் சைபர் கிரைம் போலீசார் திங்கள்கிழமை (மே 6, 2024) இரவு வழக்கு பதிவு செய்தனர். இதே குற்றச்சாட்டின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட சங்கர், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கோவை சிறையில் சவுக்கு சங்கரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், சவுக்கு சங்கரை ஒரு அறையில் அடைத்து கண்களைக் கட்டி பத்துக்கும் மேற்பட்ட வார்டன்கள் பிளாஸ்டிக் பைப்களை துணியால் கட்டி அடித்துள்ளனர். அதில் அவருக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்ட கைக்கு இதுவரை எக்ஸ்ரே உள்ளிட்ட எந்த ஒரு சோதனைகளும் செய்யப்படவில்லை. அவருடைய விருப்பத்திற்கு மாறாக வலி நிவாரணி மாத்திரைகளை மட்டுமே உட்கொள்ள கூறுகின்றனர்.
அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி அளிக்க வேண்டும், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் மனு அளித்துள்ளோம். தற்போது கோவை சிறை கண்காணிப்பாளராக இருக்கக் கூடிய செந்தில்குமார், கடலூர் சிறையில் கண்காணிப்பாளராக இருந்த நேரத்தில் அவர் மீது வழக்குத் தொடர்ந்தது சவுக்கு சங்கர் தான் என்ற நிலையில் வேண்டுமென்றே கோவையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். செந்தில்குமார் தம்மை கொடுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதனை செய்திருக்கலாம் என்று சவுக்கு சங்கர் எண்ணுகிறார். கோவை சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. சவுக்கு சங்கர் சிறையில் மெண்டல் பிளாக் என்று சொல்லக்கூடிய இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே இதுகுறித்து உயர் நீதிமன்றத்தை தாங்கள் நாட இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry