ஐங்கரன் திரை விமர்சனம்! விறுவிறுப்பு, பரபரப்புக்கு பஞ்சமில்லை! ரவி அரசு, ஜி.வி. பிரகாஷுக்கு ஷொட்டு!

0
690

அதர்வா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற “ஈட்டி” படத்தின் இயக்குனர் ரவிஅரசுவின் இரண்டாவது படம் “ஐங்கரன்”. ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகளம் நரேன், ஹரீஷ் பெராடி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் திரையரங்குகளில் நாளை (மே 5ம் தேதி ) வெளியாகிறது.

சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள நகைக்கடைகளில் கொள்ளையடித்து விட்டு வெளிமாநிலம் தப்பிச் செல்ல முயற்சிக்கிறது வடமாநில கொள்ளையர் கும்பல் ஒன்று. எதிர்பாராதவிதமாக அவர்கள் கொள்ளையடித்த நகை மூட்டை நாமக்கலில் உள்ள ஒரு ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிடுகிறது. அதனை எடுப்பதற்காக ஒரு குழந்தையை கடத்தி அந்த ஆழ்துளை கிணற்றில் போட்டுவிடுகிறது வில்லன் கும்பல்.

புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்தும் பட்டதாரியான நாயகன் ஜி.வி.பிரகாஷ் அந்த குழந்தையை மீட்க புதிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதைக்கொண்டு அவர் அந்தக் குழந்தையை மீட்டரா? கொள்ளை கும்பலை போலீஸ் பிடித்ததா? என்பதை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சொல்கிறது ஐங்கரன்.

படத்தின் மிகப்பெரிய பலம் இயக்குனர் ரவி அரசுவின் திரைக்கதை. சமூக அக்கறையுடன் கூடிய ஒரு கருத்தை கமர்ஷியல் பாணியில் மிக அற்புதமாக கொடுத்திருக்கிறார். நடுத்தர குடும்பத்தில் உள்ள ஒரு இளைஞர் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிடைக்கும் பொருட்களை வைத்து புதிய கருவிகளை கண்டுபிடித்து, அதற்கான அங்கீகாரம் பெறுவதற்காக உரிய அலுவலகத்துக்கு சென்று தனது கண்டுபிடிப்புகளை விளக்கினால் அவரை அலட்சியப்படுத்தி அனுப்புகிறார்கள். அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் இளைஞர்களின் முயற்சி வீணாக்கப்படுவதை மிக அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இந்த படத்திற்காக நிறைய ஆய்வுகளை மேற்கொண்டிருப்பது திரையில் தெரிகிறது. சபாஷ் ரவி.

ஒரு நடிகராக ஜி.வி.பிரகாஷின் கேரியரில் ஐங்கரன் மிக முக்கியமான படம். வழக்கமாக அவரது படங்களில் ஹீரோயினை துரத்திக்கொண்டே இருப்பார். ஆனால் இப்படத்தில் சமூக அக்கறையுள்ள இளைஞனாக வெரைட்டி காட்டியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் தன்னால் முடிந்தளவு மாஸ் கொடுத்திருக்கிறார். இது போன்ற படங்களையே தொடர்ந்து தேர்வு செய்து நடியுங்கள் ஜி.வி.

ஹீரோயின் மஹிமாவுக்கு பெரிய வேலை எதுவும் இல்லாததால் அவரது நடிப்பை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை. காளிவெங்கட், ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட மற்ற நடிகர்கள் தங்கள் பாத்திரங்களை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஜி.வி.யின் இசையில் பாடல்களை காட்டியிலும் பின்னணி இசை ஓங்கி ஒலிக்கிறது. இரண்டாம் பாதியில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் காட்சிகளில் ஹார்ட் பீட்டை அதிகரிக்கிறது பின்னணி இசை. படத்தின் மற்றொரு பலம் சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவு. அபாரமான உழைப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். தனது நேர்த்தியான எடிட்டிங்கால் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போயிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராஜா முகம்மது.

கோழிப் பண்ணை உரிமையாளர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் கோழியின் எடையை அதிகரிக்க இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதை காட்சிப்படுத்தி இருக்கும்விதம் அருமை. ஆனால் முதல் பாதியில் வரும் இதுபோன்ற காட்சிகள் படத்தின் வேகத்திற்கு ஸ்பீட் பிரேக்கராக அமைந்துவிட்டன. இருப்பினும் இரண்டாம் பாதியில் படம் வேகம் எடுத்துவிடுவதால் பார்வையாகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு செல்கிறது படம். கிளைமேக்ஸில் நியூட்டன் குறித்த இறுதி பன்ச் டயலாக் ‘கொல மாஸ் சாரே’. வித்தியாசமான ஒரு படைப்பை காண நம்பி போகலாம் ஐங்கரனுக்கு.

விமர்சனம் :- சத்யா, சினிமா விமர்சகர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry