ஆதீனம் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு! பின் வாங்குகிறது தமிழக அரசு? சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு!

0
920

தருமபுரம் ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்‍கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஆன்மிகப் பேரவை அமைப்பினர் என பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் செயல்பட்டு வருகிறது. பழமையான சைவ ஆதீனமாக விளங்கும் அந்த ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி காலமானார்.

அதனை தொடர்ந்து ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அதே ஆண்டு டிசம்பர் 13 ம் ஆதீனகர்த்தராக பதவியேற்று ஞானபீடத்தில் அமர்ந்தார். அன்றைய தினமே தருமபுரத்தில் ஏற்பாடு மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழச்சி நடந்தது, வெள்ளிப் பல்லக்கில் புதிய ஆதீனகர்த்தர் அமரந்து வீதி உலாவந்தார்.

அந்த நிகழ்வை தொடர்ந்து டிசம்பர் 24 ம் தேதி தருமை ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு சென்றவரை, அங்கும் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, வெள்ளி பல்லக்கில் அமரசெய்து பட்டினப் பிரவேசம் செய்யவைத்தனர். அதே போலவே காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோயிலிலும் நடைபெற்றது. ஆதீனகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பிரவேசம் செய்வதற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று அதன் தலைவர் கி. வீரமணி கூறியிருந்தார்.

இந்த நிலையில் தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கி செல்வதற்கு தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆன்மிக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் உத்தரவுக்கு மதுரை ஆதீனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ள அவர், ஆளுநர் விவகாரம்தான் நிகழ்ச்சி ரத்துக்கு காரணம் எனவும், உயிரைக் கொடுத்தாவது, தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினம் குருமஹா சந்நிதானங்களின் பட்டிணப் பிரவேசத்தை தடை செய்ய உத்தரவிட்ட தமிழக அரசிற்கு அந்தணர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ராஜாளி ஜெயப்பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “தாமாக முன்வந்து சீடர்கள் பல்லக்கு தூக்குவதை தடை செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது?.

ராஜாளி ஜெயப்பிரகாஷ்

மயிலாடுதுறையில் இயங்கும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இருக்கும் இடம் தருமபுரம் ஆதினம் அரசுக்கு கொடுத்தது. தருமபுரம் ஆதினம் இல்லையெனில் மயிலாடுதுறை மாவட்டமும் இல்லை. எங்கள் குருமஹா சந்நிதானங்களின் தவ வலிமை ஆதினத்தின் சக்தி தங்களின் சூழ்ச்சியை வெல்லும். ஆதினங்களின் பட்டனப் பிரவேசத்தை தடுத்து ஆதினங்களை கட்டுப்படுத்தி பழமையான பாரம்பரிய முறைமைகளை மாற்றிவிட்டால் இந்து மதத்தையும், சனாதன தர்மத்தையும் அழித்துவிடலாம் என்ற பகல் கனவு ஒருநாளும் பலிக்கப்போவதில்லை. ஆதினகர்த்தரின் பட்டனப் பிரவேசத்தில் கலந்துகொண்டு குருவின் பல்லக்கை அந்தணர்கள் சுமப்போம்” இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதீனத்துடன் பேசி முதலமைச்சர் முடிவெடுப்பார்” என்று சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். தருமபுரம் ஆதீனம் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், பாரம்பரியமாக நடந்து வரும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதற்கு விதித்த தடையை நீக்க வேண்டும். ஆதீனத்தில் வசிக்கும் 72 பேரும் விருப்பப்படிதான் பல்லக்கு தூக்குவதாக கூறுகின்றனர். தோளில் தூக்கி செல்வதில் மரியாதை குறைவு என்று எதுவும் கிடையாது. மத சுதந்திர உரிமை அடிப்படையில் பல்லக்கில் தருமபுரம் ஆதீனம் பட்டனப்பிரவேசம் செய்ய தடை விதிக்க முடியாது” என்று கூறினார்.

மேலும், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “ஆதீனங்களுடன் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்கள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தனர். தருமபுரம் ஆதீனம் கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்துவிட்டு ஆன்மிக அரசு என பேட்டியளித்திருந்தார். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்க தடை விதித்ததை அரசியலாக்க பார்க்கிறார்கள். வரும் 22-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் தருமபுரம் ஆதீனத்துடன் முதலமைச்சர் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்” என்று கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry