முடிவ நீங்க எடுக்கறீங்களா, இல்லை நாங்களே எடுக்கட்டுமா? பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்!

0
312

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பல ஆண்டுகளாக பேரறிவாளன் சிறையிலிருக்கிறார். அவருடைய நடத்தை நன்றாக இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது? அமைச்சரவை முடிவெடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அமைச்சரவை முடிவுக்கு முரணாக ஆளுநர் எப்படி முடிவெடுக்க முடியும்? அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் கூட்டாட்சிக்கான அர்த்தம் என்ன? நாங்கள் குடியரசுத் தலைவரின் முடிவுக்காக காத்திருக்க மாட்டோம்.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் பல இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறோம். அதன் நிலை என்ன? பேரறிவாளன் விவகாரத்தில் மேற்கொண்டு வாதிட ஒன்றுமில்லை என மத்திய அரசு சொன்னால், பேரறிவாளனை உடனே விடுவிக்க உத்தரவிடுகிறோம். அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சித் தத்துவம் தொடர்புடைய முக்கிய விஷயமாக இந்த வழக்கை கருதுகிறோம். மத்திய அரசு மே 10-ம் தேதிக்குள் முடிவெடுக்காவிட்டால் அரசியலமைப்பின்படி நீதிமன்றமே முடிவெடுக்கும்” என திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry