காவிரி விவகாரத்தை முன்வைத்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, திதி கொடுத்து, ஒப்பாரி வைத்து கன்னட வெறியர்கள் நடத்திய போராட்டம் பெரும் கண்டனத்திற்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் கர்நாடக அரசு 5000 கன அடி நீரை தமிழகத்திற்கு திறந்து விட்டுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட தரமாட்டோம் என கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
காவிரியில் தமிழ்நாட்டுக்கான பங்கை திறந்துவிடக் கூடாது என கர்நாடக பாஜக முதலில் போராட்டத்தைத் தூண்டிவிட்டது. இதனைத் தொடர்ந்து கன்னட விவசாய அமைப்புகள், கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. மண்டியா, மைசூரு, சாம்ராஜ் நகர் பகுதிகளில் தொடர் மறியல், முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இன்று பல்வேறு கன்னட அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த அறிவிப்பை முன்னிட்டு பெங்களூரு கல்வி நிறுவனங்கள், ஐ.டி நிறுவனங்கள் ஏற்கெனவே விடுமுறை அறிவித்துவிட்டன. சில அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரின் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. தடையை மீறி போராட்டம் நடத்தியவர்களை போலீஸார் உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர். பெங்களூருவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்துக்கு பொட்டு வைத்து, மாலை அணிவித்து, திதி கொடுத்து, உருவப்படம் முன்பாக ஆண்களும், பெண்களும் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.
காவிரிப் போராட்டத்தின் ஊடாக, தமிழக முதல்வரின் படத்தை வைத்து கன்னட வெறியர்கள் திதி கொடுக்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் அரசின் செயலை மன்னிக்கவே முடியாது. சித்தராமய்யா செய்வது கேவலத்தின் உச்சம். @CMOTamilnadu #Karnataka pic.twitter.com/O9TGdB1dc3
— VELS MEDIA (@VelsMedia) September 26, 2023
காவிரிப் போராட்டம் என்ற பெயரில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உருவப்படத்தை வைத்து கன்னட வெறியர்கள் செய்த இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழிசெயலைத் தடுக்காமல் பெங்களூருவில் போலீஸார் வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தது. மாநிலத்தை ஆளும் சித்தராமய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசும், அந்த வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராதது பெரும் கேவலமாகும். திமுக, காங்கிரஸ் இண்டி கூட்டணியில் இருக்கும் நிலையில், சித்தாரமய்யாவின் இந்தச் செயல் கூட்டணி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
நீண்ட காலமாக தமிழகத்திற்கும் கர்நாடாகவுக்காவுமான தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பருவ மழையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகாவும், காவிரி மேலாண்மை வாரியத்தின் ஆணைக்கிணங்க தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழகமும் வாதத்தை முன்வைத்து வருகின்றன. காவிரி நதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு விவசாயத்திற்காக குறிப்பிட்ட அளவு நீரை வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இது வெறும் தண்ணீர் பிரச்சனை இல்லை. அரசியல் பிரச்சனை என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேசிய அளவில் காங்கிரஸுடன் கைகோர்த்தும், மாநில அளவில் கர்நாடக காங்கிரஸுடனும் மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry