
ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு எதிராக, அகில இந்திய சிவாச்சியாரிகள் சேவா சங்கம் சார்பில், வழக்கறிஞர் ஜி. பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.
அதில், “தமிழ்நாட்டில் உள்ள ஆகம கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம், பயிற்சி உள்ளிட்டவைக்கு, சேஷம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆகம கோவில்களிலும் கட்டாயமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படியே அர்ச்சகர்களை நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரப்பட்டது.
இந்த ரிட் மனுவை நீதிபதிகள் போபன்னா, எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜரானார். அவர் தனது வாதத்தில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து மீறி, ஆகம கோவில்களில் அர்ச்சகர் நியமனம் மற்றும் இடமாற்றங்களை செய்து வருகிறது. இது முற்றிலும் சட்ட விரோதமானது என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தற்போதைக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆகம கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம், இடமாற்றம் எதுவும் மேற்கொள்ளாமல் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த மனுக்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசும், இந்து அறநிலையத்துறையும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, அர்ச்சகர் நியமனம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry