
புகைப்பிடிப்பதை வெற்றிகரமாக நிறுத்துவதற்கான அடித்தளம் உங்கள் மன உறுதியில் தான் உள்ளது. புகைப்பிடித்தல் தீங்கு விளைவிக்கும் என்பதை ஏற்றுக்கொள்வது முக்கியம். சிகரெட் அல்லது பீடி பிடிப்பதை நிறுத்துவது என்ற முடிவை எடுத்தவுடன், அதில் உறுதியாக இருங்கள், இந்த பயணத்தை ஏன் தொடங்கினீர்கள் என்பதை நீங்களே நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். இது புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர உதவும்.
புகைப்பிடிப்பது நாளுக்கு நாள் ஆரோக்கியத்தை சேதப்படுத்தி மெதுமெதுவாக மரணத்தை ஏற்படுத்தும் ஒரு விஷம் ஆகும். புகைப்பிடிப்பதை நிறுத்துவது உங்கள் வாழ்க்கையை மாற்றும். மேலும் இது நுரையீரல் புற்றுநோய், இருதய நோய்கள், பக்கவாதம் மற்றும் சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
Also Read : நீங்க சிகரெட் பிடிப்பவரா? புற்றுநோயில் இருந்து தப்பிக்க இந்த 7 டெஸ்ட்டும் உடனே செஞ்சுக்கோங்க..!
சிகரெட், பீடி அல்லது கஞ்சா புகைப்பதை விட்டுவிடுவது கடினமாக இருக்கலாம், ஆனால் சரியான உத்தியுடன் அணுகினால் அது சாத்தியமாகும். புகைப்பிடிப்பதை நிறுத்த முடிவு செய்தால் மன உறுதியுடன் அதனை முன்னெடுக்க வேண்டும். புகைப்பிடிப்பதை விட்டுவிட்டு உங்கள் ஆரோக்கியத்தை நிரந்தரமாக மேம்படுத்த உதவும் வழிகளை தெரிந்துகொள்வோம்.
சிகரெட், பீடி அல்லது கஞ்சா புகைப்பது உங்கள் மீதான அபிமானத்தை சக மனிதர்களிடமிருந்து துடைத்துப் போட்டுவிடுகிறது. ஆரோக்கியம்தான் விலைமதிப்பற்ற செல்வம் என்று உலகின் அத்தனை மொழி இலக்கியங்களும் கூறுகின்றன. உங்கள் ஆரோக்கியம் குறித்து நீங்கள் கொள்ளும் அக்கறை; உங்களால் உயர்ந்து செழிக்கும் உங்கள் குடும்பத்துக்கு அரணாக மாறும். ’குழந்தைகளுக்காக’, ‘மனைவிக்காக’, ‘கணவருக்காக’, ‘பெற்றோருக்காக’ எனும் இந்த ஒரு ஒரு காரணம் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சிகுரியதாக மாற்றிவிடும்.

புகைப்பதை நிறுத்த ஒரு தேதியை முடிவுசெய்தபின் அதைப் பின்பற்ற எந்த மனத்தடை வந்தாலும் அதை உடைத்தெறியுங்கள். புகைப்பதை நிறுத்துவதால் வரும் வேதனைகள் உங்களை வருத்தினாலும், அவற்றைச் சமாளிக்க மன உறுதியே முதன்மையாகத் தேவைப்படும். உதாரணத்துக்கு, உங்கள் பற்களில் நிக்கோடின் கறை படிந்திருக்குமானால், பல் மருத்துவரைச் சந்தித்து அதை நீக்கும் சிகிச்சையை எடுத்துகொள்ளுங்கள். புகையிலை நாற்றம் தங்கியிருக்கும் உங்கள் ஆடைகள் அனைத்தையும் சலவைக்குப் போடுங்கள்.
புகைப்பதை நிறுத்தியபின் அதை நினைவூட்டும் எதுவொன்றையும் உங்கள் வீட்டிலோ அலுவலத்திலோ வைத்திருக்காதீர்கள். உதாரணத்துக்கு ‘ஆஷ் ட்ரே’, ‘சிகரெட் ஹோல்டர்கள்’, ‘சிகரெட் லைட்டர்’ என எதுவாக இருந்தாலும் அதை குப்பைத்தொட்டியில் வீசியெறியுங்கள்.
நிகோடினுக்கு முழுமையான விடுதலை அளிக்க முடிவு செய்துவிட்ட நிலையில், அலுவலகம், ஷாப்பிங், திரையரங்கம், பார்ட்டி ஹால் போன்ற பொது இடங்களில் புகை நிறைந்த சூழ்நிலையையும், புகைபிடிக்கும் நண்பர்களையும் அடியோடு தவிர்த்திடுங்கள். நூல் நிலையங்கள், அருங்காட்சியங்கள் போன்ற புகைப்பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்லுங்கள்.
Also Read : சிகரெட் புகைப்பவர்கள் கட்டாயம் படிங்க! சிகரெட் தயாரிக்க ஆண்டுக்கு 4 லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிப்பு!
சிகரெட், பீடி, கஞ்சா, பான், குட்கா, மெல்லும் புகையிலை என புகையிலைப் பொருட்களுக்காக நீங்கள் அன்றாடம் செலவழித்து வந்த பணத்தைத் தனியே சேமித்து, ஒரு மாதத்துக்குப் பிறகு அந்தத் தொகையினைக் கணக்கிடுங்கள்! அந்தப் பணத்திலிருந்து உங்களுக்குத் தேவைப்படும் பொருள் ஒன்றை வாங்குங்கள். அல்லது உங்களது அன்புக்குரிய குடும்ப உறுப்பினருக்கு அந்தப் பணத்தில் பயனுள்ள பரிசுப்பொருளை வாங்கிக் கொடுங்கள்.
சிகரெட், பீடி புகைப்பது நெடுநாள் பழக்கம் எனில், அவைகளைத் தேடும் உணர்வு தோன்றும்போது உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள். புகைக்க வேண்டும் என்கிற வேட்கை உங்களை வருத்தும் போது தீங்கற்ற ‘சூயிங்கம்’ ஒன்றை வாயில் போட்டு மெல்லுங்கள். அது நிகோடீன் கொண்ட சூயிங்கமாக இருக்கக் கூடாது என்பது மிக மிக முக்கியம்.
சூயிங்கம் மெல்லப் பிடிக்காது என்றால், உங்களுக்கு சர்க்கரை நோய் போன்ற உபாதை இல்லை என்றால் ‘மின்ட்’ மிட்டைகளையோ அல்லது மின்ட் இலைகளையோ (புதினா) வாயில் போட்டு மென்று சுவையுங்கள். உணவருந்தியபின் புகைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திகொண்டிருக்கிறீர்களா? உணவருந்திய பிறகு புகைப்பதற்கு பதிலாக பற்களைத் துலக்கி சுத்தப்படுத்துங்கள். வேறு வேறு வேலைகளில் உங்களை மடை மாற்றிக்கொள்ளுங்கள்.

புகைப்பதை நிறுத்தி வெற்றிகரமாக சில நாட்களைக் கடந்துவிட்டீர்கள். ஆனால், பணி அழுத்தம், கடமைகள் என பலவித அழுத்தங்களால் நீங்கள் உந்தப்படும் நேரங்களில், ஒரு ஐந்து நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்து உங்கள் சுவாசத்தை சீராகவும், ஆழமாகவும் மாற்றுங்கள். இப்படி எண்ணம் தோன்றும்போதெல்லாம் நீங்கள் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம், நிக்கோடீனால் பலகீனப்பட்ட நுரையீரலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கமுடியும். மனம் சிகரெட்டை தேடும் நேரத்தில், அதற்கு பதிலாக தண்ணீரையும் பழச்சாறுகளையும் அருந்துங்கள். தண்ணீரும் பழச்சாறுகளும் உங்கள் உடலை மீட்டுகொண்டுவருவதை உணர்வீர்கள்.
புகைப் பழக்கத்தின் மூலம் பலகீனப்பட்டுக் கிடக்கும் உடலை ஒரு ஸ்திரத் தன்மைக்குக் கொண்டுவர, தினசரி 45 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். நடைப்பயிற்சியும், அதன் முடிவில் 15 மூச்சுப் பயிற்சியும் உங்கள் உடலை உறுதியாக்க உதவும். புகைப்பதை நிறுத்தியபின் என்னென்ன பயிற்சிகளைச் செய்யலாம் என்பதை மருத்துவரிடமும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் உடல் மெல்ல மெல்ல முன்னேறி வரும்போது அந்த ஆரோக்கியம் கொண்டுவரும் உற்சாகம் தலைசிறந்த விடுதலை உணர்வைக் கொடுக்கும்.

புகைப்பழக்கத்துடன் மது அருந்தும் பழக்கமும் கொண்டவராக இருந்தால், இரண்டையும் ஒரே நேரத்தில் விட்டுவிடுவது சிறந்த முடிவு. ஏனென்றால், உங்களுடைய புகைக்கும் ஆசையை மதுபானம் எளிதில் தூண்டிவிடலாம். மது அருந்தவும், பார்ட்டிக்கு அழைக்கும் நண்பர்கள் கூட்டத்தை தவிருங்கள். புகையிலை எதிர்ப்பு, பாதிப்பு விளம்பரங்களை கூர்ந்து கவனியுங்கள். அவை அனுபவப் பாடங்கள்.
Also Read : நீங்க புகைப்பிடிப்பவரா? இந்த 9 உணவும் உங்க ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்! A Diet to Support Smokers!
சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதால், நிகோடின் பசி, எரிச்சல், பதட்டம், தூக்கமின்மை, எடை கூடுதல் போன்ற சில தற்காலிக பக்கவிளைவுகள் ஏற்படலாம், ஆனால் அவை சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ மறைந்துவிடும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வது புகைப்பிடிப்பதை நிறுத்துவதை எளிதாக்கும். மன அழுத்தத்தைக் குறைக்கவும், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் நடைபயிற்சி, ஓடுதல் அல்லது யோகா போன்ற உடல் பயிற்சிகளை செய்யுங்கள். உங்கள் உடல் குணமடைய உதவும் பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களுடன் கூடிய சீரான உணவை உட்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிக்கவும். புகைப்பிடிக்கும் எண்ணத்தை தூண்டக்கூடும் என்பதால், முதலில் மது மற்றும் காஃபினைத் தவிர்க்கவும்.
புகைப்பிடிப்பதை வெற்றிகரமாக விட்டுவிட்டவர்களுடன் கலந்துரையாடுங்கள். அவர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்பது ஊக்கமளிக்கும் மற்றும் உளவியல் ரீதியாக உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். இறுதியாக புகைப்பதற்கு மாற்றாக ஒரு நல்ல பழக்கத்துக்கு அடிமையாக முயற்சி செய்யுங்கள். வாசிப்பது, பாடுவது, வரைவது என உங்களுக்குப் பிடித்தமான நல்ல விஷயத்தில் கவனத்தை திசை திருப்புங்கள். புகையின் பாதையிலிருந்து உங்கள் கால்கள் விலகி மகிழ்ச்சியின் பாதையில் செல்லட்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry