டெங்கு, சிக்குன் குன்யா பயம் வேண்டாம்! புதுவை பூச்சி கட்டுப்பாட்டுத்துறை அசத்தல் கண்டுபிடிப்பு!

0
223

மழைக்காலம் தொடங்கி விட்டால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. மழைக்காலத்தில் உருவாகும் கொசுக்களால் பலவித நோய்கள் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், இந்த கொசுக்களை ஒழிக்கவும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள பூச்சி கட்டுப்பாட்டுத் துறையினர் டெங்கு, சிக்குன் குனியாவை பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்து கடந்த 4 ஆண்டாக தீவிர ஆராய்ச்சி செய்து வந்தனர். அந்த தொடர் ஆராய்ச்சியின் விளைவாக டெங்கு, சிக்குன் குனியாவை கட்டுப்படுத்தும் சிறப்பு பெண் கொசுக்களை இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது.

இந்த பெண் கொசுக்கள் ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும் போது வைரஸ்களை சுமக்காத லார்வாக்களை உருவாக்குகின்றன. இதனால் கொசு மூலம் வைரஸ் பரவுவது தடுக்கப்படும். இந்த கொசுக்களை ஒவ்வொரு பகுதியாக விடுவித்து பரவ விட மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டும்.

இதுகுறித்து பேசிய பூச்சி கட்டுப்பாட்டு நிறுவன இயக்குநர் அஸ்வனிகுமார், “டெங்கு, சிக்குன் குனியா கொசுக்களுக்காக பெண் கொசுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுவெளியில் விடுத்தால், ஆண் கொசுக்களுடன் இனச்சேர்க்கை செய்யும். இந்த கொசுக்களில் இருந்து வெளிவரும் முட்டை, லார்வாக்களில் வைரஸ்கள் இருக்காது. இதற்காக கொசு முட்டைகளை தயாரித்துள்ளோம். 4 ஆண்டு ஆய்வுக்கு பின் இப்போது இந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளோம். இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. இதற்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

விரைவில் அனுமதி கொடுக்கப்பட்டு அவ்வகை கொசுக்கள் புதுவையில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் பரவ விடப்பட்டால் எதிர்வரும் மழைக்காலத்தில் ஏற்படும் டெங்கு, சிக்குன் குனியா ஆகிய நோய்கள் ஏற்படாமலும், பரவாமலும் தடுக்க முடியும். தமிழக அரசும் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry