இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகளின் கவனம் மைலேஜ் தரும் வாகனங்களின் பக்கம் திரும்புகிறது. மேலும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்துவது எப்படி என்பதையும் யோசிக்கின்றனர். எனவே, புதிதாக வாகனம் வாங்கும் போது அதிக மைலேஜ் தரும் பைக்குகளை தேர்வு செய்யவே விரும்புகிறார்கள்.
எரிபொருள் சிக்கனம் தேவை இக்கனம் என்பதற்கேற்ப, மாத பட்ஜெட்டில் எரிபொருள் செலவை மிச்சப்படுத்த எத்தனிக்கின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் மைலேஜ் அதிகமாக இருக்கும் வாகனங்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. சமீப காலமாக பாதுகாப்பு விஷயத்திலும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கிறார்கள் என்றாலும், மைலேஜ்தான் பிரதானமான விஷயமாக இருக்கிறது.
Also Read : கப்பலைப் போல இருக்கும் BMW எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! முழு சார்ஜில் 130 கி.மீ. பயணிக்கலாம்! ஆனா விலைதான்….!
பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதன் காரணமாக ஸ்கூட்டர் வாங்கும் பலர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதேநேரம் பெட்ரோல் பைக்கை வாங்கும் பலர் அதிக மைலேஜ் தரும் பைக்கை தேடி வருகிறார்கள். இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் இரண்டு பைக்குகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
பஜாஜ் பிளாட்டினா 100: பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா, இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த பைக்கில் 102 சிசி சிங்கிள் சிலிண்டர் டிடிஎஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7.79 பிஎச்பி பவரையும் 8.34 என்னும் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மைலேஜைப் பொறுத்தவரை லிட்டருக்கு 72 கிலோ மீட்டர் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இன்ஜின் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக் அம்சத்தை பொருத்தவரை முன்பக்கமும், பின்பக்கமும் டிரம் பிரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பைக் 61 ஆயிரம் ரூபாய் முதல் 66 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிவிஎஸ் ஸ்போர்ட்: டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்போர்ட் பைக்கை பொறுத்தவரை பிஎஸ் 6 இன்ஜினுடன் தற்போது விற்பனையாகி வருகிறது. இந்த பைக்கில் 109.7 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது. 8.07 பிஎஸ் பவரையும் 8.4 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக் 70-80 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இன்ஜின் 4 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் பிரேக்கை பொறுத்தவரை முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் பிரேக்குகள் தான் வழங்கப்பட்டுள்ளன. 10லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்கும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் ரூ.59 ஆயிரம் முதல் ரூ.71 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ்: இந்த 110cc பைக்கானது, லிட்டருக்கு 83.09 கிமீ மைலேஜைத் தரும் பிரிவில் மிகவும் சிக்கனமானது ஆகும். இது டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் என இரண்டு வகைகளில் வழங்கப்படுகிறது. இந்த பைக்கில் இருக்கும் 110சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக்கில் அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லலாம். இது பெட்ரோல் டேங்க் 10 லிட்டர் கொள்ளளவு கொண்டது. மேலும், டிஜிட்டல் டிரிப் மீட்டர், யூ.எஸ்.பி மொபைல் சார்ஜர், எல்இடி ஹெட்லேம்ப்கள் போன்ற பிற அம்சங்களையும் இது பெற்றுள்ளது.
ஹீரோ ஸ்பெலெண்டர் பிளஸ் XTEC: ஹீரோ நிறுவனத்தின் ஸ்பெலெண்டர் பிளஸ் XTEC அதிக மைலேஜ் தரும் பைக்குகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த பைக்கில் 100 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 8.02 பிஎச்பி பவரையும் 8.05 என்னும் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைலேஜைப் பொறுத்தவரை லிட்டருக்கு 83 கிலோ மீட்டர் வரை தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அலாய் வீல்களுடன் ட்யூப்லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் 80 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
டிவிஎஸ் ரேடியான்: டிவிஎஸ் நிறுவனத்தின் ரேடியான், 110சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது ஸ்டார் சிட்டிக்கு ஒத்த புள்ளி விவரங்களைக் கொண்டுள்ளது. இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 73.68 கிமீ என்று கூறப்படுகிறது. இது மூன்று வகைகள் மற்றும் 6 வண்ணங்களில் விற்பனையாகிறது. இந்த பைக்கின் விலை ரூ.70,683 (எக்ஸ்-ஷோரூம் விலை) முதல் தொடங்குகிறது. இந்த பைக் கடந்த ஆண்டுகளில் ‘கம்யூட்டர் ஆஃப் தி இயர்’ விருதையும் பெற்றுள்ளது.
ஹீரோ பேஷன் ப்ரோ: ஹீரோ நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகும். தற்போது, இந்த பைக் எக்ஸ்டெக் வேரியண்ட்டில் கிடைக்கிறது, முழு டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஸ்மார்ட்போன் இணைப்பு, குறைந்த எரிபொருள் இணைப்பு மற்றும் யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட் போன்ற கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது. பேஷன் ப்ரோ பைக்கில் இருக்கும் 113சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 9 பிஎச்பி பவரையும், 9.89 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் தான் டிரான்ஸ்மிஷன் பணிகளை மேற்கொள்ளும். மைலேஜை பொறுத்தவரை 58 கிலோ மீட்டர் வரை கிடைக்கும்.
டிவிஎஸ் ரைடர்: நீங்கள் பல அம்சங்களைக் கொண்ட Funky தோற்றமுடைய பைக்கை வாங்க விரும்பினால், ரைடர் உங்களுக்கு சரியான தேர்வாகும். ரெய்டர் அதன் 125 சிசி எஞ்சினுடன் கணிசமான செயல்திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11.38 பிஎச்பி பவரையும், 11.2 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. டிவிஎஸ் ரெய்டர் பைக்கின் விலை ரூ.85,941 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 67 கி.மீ. வரை மைலேஜ் கிடைக்கும்.
பெரும்பாலும் அதிக மைலேஜ் கொண்ட பைக்குகள் என்றால் அது எடை குறைவாகத் தான் இருக்கும். அப்போதுதான் அதிக மைலேஜ் கிடைக்கும். அதே நேரம் இந்த பைக்குகளில் பொருத்தப்பட்டிருக்கும் டயர்களும் சிறியதாகவே இருக்கும். அதன் காரணமாக தான் இந்த பைக்கின் எரிபொருள் செலவு குறைவாகவே இருக்கிறது.
அதிக மைலேஜ் கொண்ட பைக்கை விரும்பும் மக்கள் பல்வேறு விதமான சமரசம் செய்து கொள்ள வேண்டிய தேவையும் இருக்கும். ஆனால் இந்த பைக்குகளில் எல்லாம் தினம் 35 கிலோமீட்டர் வரை பயணம் செய்யும் நபர்கள், மாதம் ஒருமுறை முழு டேங்க் பெட்ரோல் போட்டால் போதும். அந்த பெட்ரோலை வைத்தே முழு மாதமும் ஓட்டிவிட முடியும். அதிக மைலேஜ் விரும்பும் பைக் விரும்பிகளுக்கு இந்த பைக்குகள் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஆனால் இதில் அதிக நபர்களை ஏற்றி செல்லும் போதும் மிக மோசமான சாலைகளில் செல்லும்போதும் போதுமான டிரைவிங் அனுபவம் இல்லாமல் செல்லும் போதும் இதன் மைலேஜ் குறைய வாய்ப்பு இருக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry