ஈ.வெ. ராமசாமி நாயக்கர், சி.என். அண்ணாதுரை போன்றவர்கள் தோற்றுவித்த, ‘அரசியலில் தனி நபர் தாக்குதல்’ இப்போது வரையிலும் தொடர்கிறது. நாகரீகமற்ற அரசியல் போக்கையே, தற்போதைய தலைமுறை அரசியல்வாதிகளும் பின்பற்றும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஈ.வெ. ராமசாமியின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி, 1949-ல் திராவிட முன்னேற்ற கழகத்தை தோற்றுவித்தர், ராமசாமியின் அணுக்கத் தொண்டரான சி.என். அண்ணாதுரை. அண்ணாதுரை தலைமையில் வெளியேறியவர்களை ‘கண்ணீர்த்துளிப் பசங்க’ எனவும், அண்ணாதுரையை குள்ளநரி என்றும் விமர்சித்தார் ராமசாமி. 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே திராவிட அரசியலில் தனி நபர் விமர்சனங்கள் தொடங்கிவிட்டிருந்தன.
என்மீதும், என்னுடன் கூடிப் பணிபுரியும் தோழர்கள் மீதும்.
துரோகிகள்! ஜூடாசுகள்!
தேவதத்தர்கள்! பொதுவாழ்வினால் பிழைப்புத் தேடுவோர்!
வயிறு வளர்ப்போர்! சுயநலமிகள்! எத்தர்கள்
இப்படி ‘அர்ச்சனைகள்’ அனந்தம், நித்தநித்தம், அது மட்டுமா? பழங்காலத்துத் தவசிகள், ‘சாபம்’ கொடுப்பார்கள் என்று கதை கூறுவார்களே, அதுபோல, பகுத்தறிவுத் தந்தை, பலப்பல சாபமிடுகிறார்!
என்று ராமசாமி நாயக்கரைப் பற்றி 09-10-1949 அன்று அண்ணாதுரை எழுதியுள்ளார்.
ராமசாமி நாயக்கரின் சீடன் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதி, ராமசாயின் உண்மையான தந்தை யார் என்று கேட்டதுடன், 1966-ல் சட்டசபையில் ‘ஈவெரா–வை பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யாதது ஏன்?’ எனவும் கேட்டுள்ளார்.
மதுரையில் இந்திரா காந்தி பயணித்த காரின் மீது கற்கள் வீசப்பட்டன. அவர் மீது படாமல் அதை தன் தலையில் தாங்கிக்கொண்டார், அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பழ. நெடுமாறன். அவர் தலையில் கொட்டிய ரத்தம் இந்திராவின் புடவையில் கசிந்தது. ‘அது பெண்களுக்கே ஏற்படக்கூடிய மாதவிடாய் ரத்தம்’ என்றனர் திமுக–வினர். அப்போது இந்திரா காந்தி அறுபது வயதை கடந்திருந்தார்.
அதன் நீட்சிதான் இப்போதும் தொடர்கிறது. தன்னைப் படிக்க வைத்த, சென்னையில் தனக்கு உள்ளூர் பாதுகாவலராக(Local Guardian) இருந்த, வழிகாட்டியாக இருந்த எம்.ஜி.ஆரை சர்வ சாதாரணமாக ’துரோகி’ என இன்றைய தலைமுறைக்கு அடையாளப்படுத்துகிறார் திமுக பொதுச் செயலாளர் துரை முருகன். கல்லாக இருந்த தன்னை சிலையாக மாற்றியவர் எம்ஜிஆர் என திமுக முதன்மை செயலாராக இருந்தபோது பேசியவர், பொதுச் செயலாளர் ஆனவுடன் துரோகி என்கிறார். இவரை மட்டுமல்ல, திமுக–வுக்காக உழைத்த, கட்சியில் இருந்து சில காரணங்களால் வெளியேற்றப்பட்ட வைகோ–வுக்கும் துரோகிப் பட்டம் கொடுக்கிறார் துரை முருகன்.
தலைவர்கள் வரும்வரை கூட்டம் கலையாமல் இருக்க திமுக பேச்சாளர்கள்தான் மேடைகளில் அநாகரீகமாக பேசுவார்கள். ஆனால், திமுக பொதுச்செயலாளரே அந்த நிலைக்கு வந்துவிட்டார். இவரைப்போலத்தான் நிதியமைச்சராக இருக்கும் பழனிவேல் தியாகராஜனும். சொந்தக் கட்சி நிர்வாகி தொடங்கி, எதிர்க்கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் வரை அனைவரையும் ஒருமையில் பேசுவது, கண்ணியக்குறைவாக விமர்சிப்பது என தான்தோன்றித்தனமாக செயல்படுகிறார். திராவிட வழித்தோன்றலான இவர், எப்போதுமே ஏகாதிபத்திய மனோபாவம் மேலோங்கவே இருக்கிறார்.
இவர்கள்தான் இப்படி என்றால், ஒழுக்கத்தை போதிக்கும் இயக்கமாகப் பார்க்கப்படும் ஆர்.எஸ்.எஸ்.இல் இருந்து பா.ஜ.க.வுக்கு அனுப்பப்பட்ட ஹெச். ராஜா, திராவிட இயக்கத்தவர்களே வாய்மேல் விரல் வைக்கும் அளவுக்கு வாய்க்குவந்தபடி பேசுகிறார். கொள்கை ரீதியான விமர்சனம் என்பதே இவரிடம் இல்லையோ எனும் அளவுக்கு எதிர்க்கட்சியினரை வசைபாடுகிறார். வைரமுத்து தொடங்கி சீமான் வரை, அவர்களது கருத்துகளிலே முரண் இருந்தால், அதை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். ஆனால், அவர்களது குடும்பத்தை இழுத்து விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஹெச். ராஜா. இவரது இந்தப் போக்கு, பாஜக–வில் உள்ள இளைஞர்களை இவரது வழியில் அழைத்துச் சென்றுவிடக்கூடும். இது ஆரோக்கியமான அரசிலாக இருக்காது.
கொள்கை ரீதியான விமர்சனங்கள், கருத்தியல் ரீதியான வாதப் பிரதிவாதங்கள் குறைந்து வருவதற்கு இந்தச் சம்பவங்கள் கடுகளவுக்கான சான்றுகளே. சமூக ஊடகங்கள் முழுவதுமாக வியாபித்திருக்கும் தற்போதைய அரசியலில், தங்களது முன்னோர்களின் பாதையையே இளைஞர்களும் பின்பற்றுவது தெளிவாகத் தெரிகிறது. திமுக, அதிமுக, பாஜக உள்பட அனைத்துக் கட்சியினருக்குமே இது பொருந்தும். விமர்சனங்கள் என்ற பெயரில், அருவருக்கத்தக்க ஏச்சுகள்தான் சமூக ஊடகங்களில் நிரம்பியிருக்கின்றன. ஈ.வெ. ராமசாமி, சி.என். அண்ணாதுரை போட்ட விதை, இன்று விருட்சமாகி, அதன் நிழலில் ஒதுங்குவோருக்கு ஒழுங்கீனத்தையே போதிக்கிறது. அது முகம் சுளிக்க வைக்கிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry