ஆகம விதி தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

0
46
GETTY IMAGE

சேலம், சுகவனேஸ்வரர் சாமி கோயிலில் அர்ச்சகர்கள் நியமனத்துக்காக விண்ணப்பங்கள் கோரி கோயில் நிர்வாக அதிகாரி கடந்த 2018 ஜனவரியில் அறிவிப்பு வெளியிட்டார். ’இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை’ என அர்ச்சகர் முத்து சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ’உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோயில் அர்ச்சகராக நியமிக்க, பரம்பரை உரிமையை மனுதாரர் கோர முடியாது. சுகவனேஸ்வரர் கோயில் ஆகம அடிப்படையிலானது என்பதால், அதில் குறிப்பிட்டப்படியே அர்ச்சகர் நியமனமும் இருக்க வேண்டும். குறிப்பிட்ட கோயில்களின் ஆகமம் குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை என்றால், அந்தக் கோயில்களில் அர்ச்சகர்களை அறங்காவலர் அல்லது தக்கார் நியமிக்கலாம்.

ஆகமத்தில் கூறியுள்ளபடி தேர்ச்சி பெற்றவர்களாக, முறையான பயிற்சி, பூஜை செய்வதற்கான தகுதி பெற்றவர்களாக, தேவையான அம்சங்களை பூர்த்தி செய்திருந்தால், அவர்களின் நியமனத்தில் ஜாதி அடிப்படையிலான பரம்பரைக்கு எந்தப் பங்கும் இல்லை. இருப்பினும் சுகவனேஸ்வரர் சாமி கோயிலில் அர்ச்சகர்களை நியமிக்கும்வரை பூஜை காரியங்களை மனுதாரர் மேற்கொள்ளலாம். அர்ச்சகர் தேர்விலும் அவர் பங்கேற்கலாம்’ என உத்தரவிட்டிருந்தார். இதை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதி கொண்ட அமர்வும் உறுதி செய்திருந்தது.

Also Read : Madras Day 2023! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மீனவ கிராமமா சென்னை? வந்தாரை வாழவைக்கும் நகருக்கு 384 வயது!

இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பரிதிவாலா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் குமணன், ’இந்த விவகாரம் மாநில அரசின் அறநிலையத் துறைக்கு உட்பட்டது. மேலும் கோயில்களில் அர்ச்சகரை நியமிக்கும்போது பரம்பரை உரிமையைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றமே முன்னதாக உத்தரவிட்டுள்ளது’ என தெரிவித்தார்.

இந்த வாதத்தை ஏற்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், ’இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எந்தத் தடையும் விதிக்க முடியாது. மேலும் ஆகம விதிகளின்படி தேர்ச்சி பெற்றவர்களாக, முறையான பயிற்சி, பூஜை செய்வதற்கான தகுதி பெற்றவர்கள் யாரை வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யலாம்’ என உத்தரவிட்டு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry