சென்னைக்கு எப்போது மழை? வெப்பநிலை குறையுமா? தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்னது என்ன?

0
93

தமிழ்நாட்டில் பல இடங்களில் வெப்ப அலை வீசி வரும் நிலையில் எந்தப் பகுதிகளில் மழை பெய்யும், சென்னைக்கு மழைக்கு வாய்ப்பு உண்டா, வெப்பநிலை குறைவது எப்போது என்பது போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், “எல் நினோ ஆண்டு முடிந்த அடுத்த ஆண்டு வெப்பநிலை அதிகரிக்கும். கடந்த ஆண்டு எல் நினோ ஆண்டு. கடந்த ஆண்டு ஜூன், ஆகஸ்ட் மாதங்களிலேயே வெப்பநிலை அதிகமாக இருந்தது. அத்துடன் வெப்பச் சலன மழை குறைவாக இருப்பதும் வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளன.

ஏப்ரல் மாதம் வரை கிழக்கிலிருந்து (கடற்பகுதி) காற்று வீசும். தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது மேற்கிலிருந்து தரைகாற்று வீசத் தொடங்கும். வட ஆந்திரா, உள் கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மே 4 முதல் மே 28 வரை வறண்ட தரைக்காற்று வீசும், இதைத் தான் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என்கிறோம்.

அக்னி நட்சத்திரம் சமயத்தில் தான் அதிக வெப்பநிலை இருக்கும் என்று சொல்ல முடியாது, ஏனெனில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் அதிக வெப்பநிலை பதிவானது. பள்ளிகளுக்கும் 10 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை மே இறுதி முதல் ஜூன் 10 வரை கிழக்கில் இருந்து கடற்காற்று வர சிரமப்படும் போதுதான் அதிக வெப்பநிலை ஏற்படுகிறது.

உள் மாவட்டங்களில் ஏப்ரலில் தான் அதிக வெப்பநிலை இருக்கும். கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை கிழக்கிலிருந்து வருவது தான் தரைக்காற்று. மே மாதத்திற்கு பிறகு மேற்கிலிருந்து காற்று வரத் தொடங்கும் போது வெப்பநிலை குறையும். ஏப்ரல் மாதத்தில் அங்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. எனவே ஜூன் 15 வரை வெப்பநிலை அதிகமாக இருந்தது. இந்த முறை மே இறுதியில் அல்லது ஜூன் முதலிலேயே தொடங்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இன்னும் நாள்கள் நெருங்கும் போது தான் உறுதியாக சொல்ல முடியும்.

வெப்பச்சலன மழையை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமோ அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளோ பெய்யும். தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே வெப்பச்சலன மழை பெய்யலாம்.

ஆனால் சென்னையைப் பொறுத்தவரை வெப்பச்சலன மழைக்கு வாய்ப்பு இல்லை. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானாலோ, மேலடுக்கு சுழற்சி உருவானாலோ தான் மழை வரும், அடுத்த 15 நாள்களுக்கு அதற்கு வாய்ப்பு இல்லை. தொடர்ந்து வெப்பநிலை அதிகரிக்கத் தான் அதிக வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்