ஐடி ஊழியர்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சனைகள்! ஊழியர்களின் ஆரோக்கியத்தை உறிஞ்சும் ஐ.டி. நிறுவனங்கள்! Vels Exclusive!

0
100
Health Problems in IT Professionals - Causes and Prevention | Getty Image

4.20 Minutes Read : இந்தியா முழுவதும் 60 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள். இவர்களில் 90% பேர் அதிக ஊதியத்துக்காக ஆரோக்கியத்தை, மகிழ்ச்சியைத் தொலைப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

பெரும்பாலான தனியார் மற்றும் அரசுத்துறைகளில் பணி அழுத்தம் இருந்தாலும், ’கை நிறைய சம்பளம்’, அமெரிக்க நிறுவனத்தில் பணி; ஐரோப்பிய நிறுவனத்தில் பணி எனப் பெருமையாக கூறிக்கொள்ளும் இந்த ’ஒயிட் காலர் ஜாப்’காரர்கள், இதற்காக இழப்பது மிக அதிகம்.

அலுவலகத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து என எந்த வகையில் பணி செய்தாலும் 12 மணி நேரமாவது ஐ.டி. ஊழியர்கள் கணினியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். குளிர்சாதன அறையில் வேலை, ஐந்து இலக்க சம்பளம், சொகுசு வாழ்க்கை என்பது இங்கே அடிபட்டுப்போகிறது. முன்பெல்லாம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 15 சதவிகித ஐ.டி. ஊழியர்கள் வேலையிழந்தனர். அது, தற்போது 30 சதவிதமாக அதிகரித்திருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் ஐ.டி. துறையில் 22 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்று வெளியாகி இருக்கும் ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியைத் தருகின்றன.

பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை மிரட்டியும், அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்ய வைக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் விருப்பப்படி ஆட்குறைப்பு செய்ய முடியாத அளவுக்குச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படியொரு சட்டம் இல்லாதது கசப்பான உண்மை. ஐ.டி. நிறுவனங்களின் நடைமுறையானது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறை இளைஞர்களின் ஆரோக்கியத்தை, குடும்ப மகிழ்ச்சியை வழித்து முழுங்கியிருக்கிறது. கிட்டத்தட்ட 43% ஐ.டி. ஊழியர்கள் ஆரோக்கிய குறைபாட்டால் தவிக்கின்றனர்.

Getty Images

45 கிலோ எடையுள்ள 20 – 22 வயது இளைஞர், ஐ.டி. நிறுவனத்தில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு 70 கிலோ வரை எடை அதிகரித்து பருத்துப்போகிறார். 12 – 13 மணி நேர வேலை, தூக்கத்தைத் தொலைக்க வைக்கிறது. உடல்பருமனும், தூக்கமின்மையும் தொற்றா நோய்களுக்கான கதவைத் திறந்துவிடுகிறது. வாழ்க்கை முறை மாற்றத்தால், ஐ.டி. ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களிடம் பேசியபோது கிடைத்த தகவல்கள் பகீர் ரகம்.

ஐ.டி. ஊழியர்களில் பெரும்பாலானோர் 40 – 45 வயதிலேயே முதிர்வு நிலையை அடைந்துவிடுவதாகக் கூறுகிறார் பிரபல மனநல மருத்துவர் டாக்டர் ஜெயந்தினி. ’அதிக சம்பளம் நிரந்தரம்’ என்ற எண்ணத்திலும், சமூக அந்தஸ்துக்காகவும் மாதத் தவணையில் வீடு – கார் என வாங்கிவிட்டு, திடீரென வேலையை இழந்து தவணை கட்ட முடியாமல் போகும்போது அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பொருளாதார இலக்கில் மட்டும் கவனம் செலுத்தும் அவர்கள், சமூகத்தோடு ஒன்றிணையாமல் விலகி நிற்பது பெரும் பலவீனம். அலுவலகத்தில் கொடுக்கப்படும் அழுத்தம், அதிக வேலை நேரம் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி இல்லாத நிலை ஏற்பட்டு, 40 வயதிற்குள்ளாகவே ஐ.டி. ஊழியர்கள் பலரும் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற குறைபாடுகளுக்கு ஆளாகின்றனர்.

டாக்டர் ஜெயந்தினி

மடிக்கணினியை அதிகநேரம் மடியில் வைத்து பணியாற்றும்போது குழந்தைப்பேறில் பிரச்சனை ஏற்படுகிறது. கணவன் – மனைவி இருவரும் ஐ.டி. துறையில் பணியாற்றும்போது குடும்பத்தினருடன் நேரம் செலவிட வழியில்லாமல், குழந்தைகளை அன்புடன் அவரவணைத்து வளர்க்க முடியாமல், மன உளைச்சலுக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாகின்றனர். தாயின் ஸ்பரிசம் முறையாகக் கிடைக்காத அடுத்த தலைமுறை, மன ரீதியாக பலவீனமாகி, ஒழுக்கக் குறைபாட்டுக்கு ஆளாக நேரிடுகிறது’ என்கிறார் டாக்டர் ஜெயந்தினி.

ஐ.டி. ஊழியர்கள் உட்காரும் முறையே தவறாக இருக்கிறது என்று கூறும் பிரபல பிசியோதெரபிஸ்ட் ராஜேஷ், ‘தண்டுவடம் 90 டிகிரி இருப்பது போல் உட்கார வேண்டும். ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் ஐ.டி. ஊழியர்கள் இவ்வாறு உட்காருவது கிடையாது. இதனால் நாளடைவில் தண்டுவடத்தில் சவ்வு அழுத்தம் உருவாகி, பின்னர் பேக் பெயின் எனப்படும் முதுகுவலி ஏற்படுவதுடன், கழுத்து வலியும் உருவாகும். இதைத் தவிர்க்க, சேரில் உட்காரும்போது தண்டுவடம் நேராகவும், கால் பாதம் தரையில் படியும்படி உட்கார வேண்டும்; கால் மீது கால் போட்டுக்கொண்டோ, கால்களை தொங்கபோட்டுக்கொண்டோ உட்காருவது கூடாது. அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சில நிமிடங்கள் நடக்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்கிறார்.

ராஜேஷ், பிசியோதெரபிஸ்ட்

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணனோ, ‘இந்தக் காலத்து ஐ.டி. ஊழியர்கள் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தைத் தவிர வேறு என்ன சாப்பிடுகிறார்கள் என்று கேள்வியுடனேயே தொடங்குகிறார். பீட்சா, பர்கர் தேவைப்படும் அளவுக்கு, அவர்களுக்கு காய்கனிகள், புரதம், மினரல்ஸ், வைட்டமின் போன்றவை தேவையில்லாததாகிவிட்டது. ஐ.டி. துறையில் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடு, வைட்டமின் – டி குறைபாடு இருக்கிறது. எளிய உடற்பயிற்சிகளுடன், சத்தான உணவுகளை உரிய நேரத்துக்கு சாப்பிடுவதை அவர்கள் வழக்கமாக்கிக்கொள்ளாவிட்டால், அது அவர்கள் வாரிசுகளையும் பாதிக்கும்’ என எச்சரிக்கிறார்.

டாக்டர் தாரிணி கிருஷ்ணன்

சென்னையில் உள்ள பிரபல கருத்தரிப்பு மையத்தின் நிறுவனரும், தாய்மை மற்றும் மகப்பேறு மருத்துவருமான செந்தாமரைச் செல்வி, ’ஐ.டி. ஊழியர்கள் அமர்ந்திருக்கும் நேரமும், கணினித் திரையைப் பார்க்கும் நேரமும் மிக அதிகமாகி வருகிறது. இதனால் கண்களில் வறட்சி ஏற்படுகிறது. மேலும், உடல் உழைப்பு கணிசமாகக் குறைந்துள்ளதுடன், ஊழியர்கள் அவர்களையறியாமல் தவறான உணவுப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். துரித உணவுகளை விரும்பிச் சாப்பிடும் அவர்கள், இயற்கையில் இருந்து விலகுகிறார்கள். ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. வளர்சிதை மாற்றம் முறையாக நடப்பதில்லை.

டாக்டர் செந்தாமரைச் செல்வி

பணி அழுத்தம், ஷிஃப்ட் முறை உள்ளிட்ட காரணங்களால் ஐ.டி. துறையில் இருக்கும் இருபாலருக்கும் தாம்பத்திய வாழ்க்கையில் நாட்டம் குறைந்து வருகிறது. கருவுறுதலை அவர்களாக தள்ளிப்போடுகிறார்கள் அல்லது வாழ்க்கை முறை மாற்றத்தால் தானாக தள்ளிப்போகிறது. இளைஞர்களுக்கு விந்தணு உற்பத்தித்திறன் குறைகிறது. தூக்கத்தின் தன்மையில் இரவுப் பணி எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தூக்கத்தின் தன்மை மாறினால் பெண்களுக்கு கரு முட்டை உருவாக்கும் திறன் குறையும். பிசிஓடி எனப்படும் பாலிசிஸ்டிக் எவரி சின்ட்ரோம் பாதிப்பு ஏற்படும். உடல் பருமன் ஏற்பட்டு கருவுறாமை என்ற பிரச்சனை வரை ஏற்படலாம்’ என்று விரிவாகக் கூறுகிறார்.

ஐ.டி. ஊழியர்கள் தவறான நேரத்தில் தவறான உணவை உண்பது குறித்து சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றும் இரைப்பை குடல் மருத்துவரும், ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஸ்ரீவத்சனிடம் பேசியபோது, ’அமிலச் சுரப்பு காரணமாக, வாயுப் பிரச்சனை மற்றும் வயிற்றுப் புண் சிகிச்சைக்காக ஐ.டி. ஊழியர்கள் பலரும் சிகிச்சைக்காக வருகின்றனர். இரவு ஷிஃப்ட்டில் அவர்கள் பணியாற்றும்போது மெலட்டோனின் சுரப்பி சரியாக வேலை செய்யாது. இதனால் ஐ.பி.எஸ் எனப்படும் இர்ரிடபிள் பவுல் சிண்ட்ரோம் (மலக்குடல் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் பெருங்குடல் குறைபாடு) பிரச்சனை ஏற்படும். நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், மலச்சிக்கல், மூல நோய் போன்றவையும் ஏற்படலாம்.

டாக்டர் ஸ்ரீவத்சன்

மேலும், குடல் – மூளை இணைப்பு பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். மன அழுத்தம் ஏற்படும்போது அமிலச் சுரப்பு அதிகமாகி வயிற்று உபாதையை ஏற்படுத்தும். முறையற்ற உணவுப்பழக்கம், தூக்கக் குறைபாடு போன்ற காரணங்களால் மனச்சோர்வு ஏற்படும். மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவை நீடிக்கும்போது ஜி.இ.ஆர்.டி. எனப்படும் உணவு எதுக்களித்தல் பிரச்சனை அதிகமாகும். எளிமையான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சிகளுடன், சத்தான உணவை சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும். புகைப்பிடித்தல், மது போன்ற பழக்கங்கள் வயிற்றுப் பிரச்சனைகளை மேலும் அதிகமாக்கிவிடும் என்பதால் அவற்றை அறவே தவிர்க்க வேண்டும்’ என்று அறிவுரை கூறினார்.

Getty Image

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக அறிக்கையின்படி, ஒரு ஊழியர் வாரத்துக்கு 50 மணிநேர வேலை செய்யும்போது உற்பத்தித்திறன் குறைவதாகவும், அதுவே 55 மணி நேரமாகும்போது உற்பத்தித்திறன் மேலும் மோசமடைவதாகவும் கூறுகிறது. இதை மனதில்கொள்ளாமல், இரவுப் பணியை மறுத்தால், அல்லது கூடுதல் நேரம் வேலை செய்யாவிட்டால், வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்திலேயே பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் ஊழியர்களை வைத்துள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் ஐ.டி. ஊழியர்கள் எந்தவொரு நிறுவனத்தையும் விட்டு வெளியேறுவதற்கு குறைந்தபட்சம் 1 நாள் முதல் அதிகபட்சம் 4 வாரங்கள் வரை அறிவிப்பு காலத்தை (நோட்டீஸ் பீரியட்) வழங்கினால்போதும். ஆனால் இந்தியாவிலோ, 90 நாள் அறிவிப்புக் காலமாக உள்ளது. அறிவிப்புக்காலத்தில், சம்பந்தப்பட்ட ஊழியர் மிகவும் மோசமாக நடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. அனுபவக் கடிதம் மற்றும் பிற முக்கிய ஆவணங்களைத் தராமல் பல நிறுவனங்கள் இழுத்தடிக்கவும் செய்கின்றன. இதனால் ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் பற்றி நிறுவனங்கள் கவனத்தில் கொள்வதில்லை.

அதிக பணிச்சுமை காரணமாக உடல் களைப்படையும்போது மிகுந்த சோர்வு, தலைவலி மற்றும் தூக்கமின்மை போன்றவை ஏற்படும். கவலை, சோகம், எரிச்சல் உணர்வு போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். கவனம் செலுத்துதல் மற்றும் முடிவு எடுத்தல் ஆகிய திறன்களிலும் பிரச்சனை ஏற்படலாம். ஊழியர்கள் ரோபோக்கள் அல்ல, அவர்களும் சக மனிதர்கள்தான் என்பதை ஐ.டி. நிறுவனங்கள் உணர வேண்டும். ஒருவரது ஆரோக்கியத்தையும், குடும்ப மகிழ்ச்சியையும் பறித்துக்கொண்டு அதற்கு ஈடாக சில ஆயிரங்கள் அல்லது லட்சங்கள் விலை கொடுப்பதை ஐ.டி. நிறுவனங்கள் நிறுத்த வேண்டும்.

https://amzn.in/d/bHjTqDk