புதிய உச்சம் தொட்டது தங்கம் விலை! ஒரு பவுன் ரூ.51,600ஐத் தாண்டியதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

0
22

தங்கம் விலை (ஏப்ரல் 1) மீண்டும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த வார ஏற்றங்களின் நீட்சியாக சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ.51,640க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குறைந்த தங்கம் விலை, அக்டோபர் 4-ம் தேதி ஒரு பவுன் ரூ.42,280 என்றளவில் விற்பனையானது. இதன் பின்னர் இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்த தங்கம் விலை, தொடர்ச்சியாக உயர்ந்து கடந்த டிசம்பர் 4-ம் தேதி பவுன் ரூ.47,800 என்னும் புதிய உச்சத்தை அடைந்தது.

இதைத் தொடர்ந்து நடப்பாண்டில் தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.50 ஆயிரம், ரூ.51 ஆயிரம் என்று அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக இன்று பவுனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.51,640 என்னும் அடுத்த புதிய உச்சத்தை அடைந்தது. ஒரு கிராம் ரூ.6455-க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளி விலையும் அதிகரித்து ஒரு கிராம் 81.60 காசுகளுக்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.60 ஆயிரம் வரை எட்டலாம் என்றும், வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.100 வரை உயர வாய்ப்புள்ளதாகவும் சந்தை நிபுணர்கள் கணிக்கின்றனர்.