
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா விரிவாக்கத்துக்காக, மேல்மா, குரும்பூர், காட்டுக்குடிசை உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் அளவுக்கு நிலத்தைக் கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை 2-ம் தேதியில் இருந்து மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் மேல்மா சிப்காட் தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்திற்கு விவசாயிகள் திரளாக சென்றபோது, வழியிலேயே போலீஸார் அவர்கள் மறித்து அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதமே, கலவரத்தில் ஈடுபட்டது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, சட்டத்துக்கு புறம்பாக கூடுவது, ஆபாசமாக பேசுவது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, அச்சுறுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் விவசாயிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையிலேயே கடந்த 04.11.2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மற்றும் 19 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இவர்களில் அருள் மற்றும் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வெவ்வேறு சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
கடுமையான எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக, பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகிய 6 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், அருள் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படவில்லை. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், “எந்தவித விசாரணையும் இல்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிப்காட் திட்ட விரிவாக்கத்துக்கு எதிராகப் போராட விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒன்று கூடவும், தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டம் நடத்தவும் அவர்களுக்கு உரிமை உண்டு. 2013ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி, வேறு வழியே இல்லை என்ற நிலையில்தான் பல் பயிர் நிலங்களை கையகப்படுத்தலாம், ஆனால், அரசு கையகப்படுத்தும் நிலங்கள் பல் பயிர் நிலங்கள். இதில் சுற்றுச்சூழல் அம்சங்களையும் அரசு கருத்தில்கொள்ளவில்லை” என்றார்.
இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா, “விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக முதலமைச்சர் அறிவித்தது ஒரு தற்காலிக சமாதான உடன்படிக்கைதான். இது விவசாயிகளையும் தமிழக மக்களையும் ஏமாற்றும் செயலாகும்.
ஏற்கெனவே எட்டு வழி சாலை, சிப்காட் நிறுவனம் செல்லும் சாலை அனைத்தையும் சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி குவித்துள்ளார் அந்தப் பகுதி அமைச்சர். சிப்காட் தொழிற்பேட்டை பயன்பாட்டுக்கு வரும்போது அந்த பகுதி அமைச்சருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு தொழிற்பேட்டை ஓரத்தில் அமைந்துள்ள நிலம் என்ற வகையில் மதிப்பு உயரும். பல ஆயிரம் கோடி ரூபாய் தனது சொத்தின் மதிப்பை உயர்த்தி கொள்வதற்காகவே சுயநலம் கருதி அந்த பகுதி அமைச்சர் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்துள்ளார்கள்.

நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின்படி எந்த நிலம், எதற்காக எடுக்கப்பட்டதோ அதற்கு பயன்படுத்தப்படவில்லை என்றால், அந்த நிலத்தை எடுத்த விவசாயிகளிடமே திருப்பிக் கொடுத்து விட வேண்டும். ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டைக்காக 2000 ஏக்கரில் நிலத்தை கையகப்படுத்தி அதில் 750 ஏக்கர் மட்டுமே பயன்படுத்தியுள்ளது. மீதமுள்ள 1250 ஏக்கர் அளவிலான நிலம் காலியாக உள்ளது. அந்த நிலத்தை விவசாயிகளுக்கு திருப்பிக் கொடுப்பதா? அல்லது அந்த பகுதி அமைச்சரே எடுத்துக் கொள்வார்களா? என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும்.
சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக கைது என்பதெல்லாம் ஒரு நாடகம். இதை வைத்து எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தவே அரசு முன்னெச்சரிக்கையின் பேரில் இவர்களை கைது செய்து உள்ளது. இதனால் ஒரு பெரிய போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்து விடக்கூடாது என்ற நோக்கத்தை கருத்தில் கொண்டு விவசாயிகளை ஒடுக்க பார்க்கிறது.
ஏற்கெனவே சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை, கட்டுமானப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலை ஆகியவற்றை உயர்த்தி தமிழக மக்களை வாழ முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்க வைத்துள்ளார்கள். தற்பொழுது விவசாயிகளையும் திமுக அரசு அந்த வகையில் ஒடுக்க பார்க்கிறது.” என்று அறிக்கையில் கூறியுள்ளார்.
இதனிடையே, மேல்மா உள்ளிட்ட கிராம மக்களிடம் கொந்தளிப்பு அதிகமாகியுள்ளது. அரசு நடவடிக்கை குறித்து அவர்களிடம் பேசியபோது, “அரசாங்கத்திற்கு எதிராகவும், திட்டங்களுக்கு எதிராகவும் செயல்பட மாட்டோம் என்று எங்கள் கிராம மக்கள் ஒப்புக்கொண்டதாக, உத்தரவாதம் தந்துள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்வதாக அரசு தெரிவித்துள்ளது. எங்கள் ஊரையே அப்புறப்படுத்துவோம் என்று கூறுபவர்களுக்கு ஆதரவாக நாங்கள் எப்படிச் செயல்படுவோம்?
எங்களுக்கு இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதுமே சிப்காட் தேவையில்லை. நர்மாபள்ளம், மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களும் நல்ல வளமான பூமி. மூன்று போகமும் விளையக்கூடிய நிலத்தைக் கையகப்படுத்தி சிப்காட் அமைக்க வேண்டுமா? எங்களுக்கு உதவிய அருள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும். எங்கள் போராட்டம் தொடரும். இப்போதுகூட எங்கள் வீடுகள் அனைத்திலும் கறுப்புக்கொடி கட்டி எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறோம். சிப்காட் அமைத்தே தீர வேண்டும் என்று எண்ணினால், எங்கள் அனைவரையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு அதில் சிப்காட் அமைக்கட்டும்.” என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry