விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை உனடியாக திருப்பெறாவிட்டால் மிகப்பெரும் போராட்டம்! தமிழக அரசுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை!

0
21
Edappadi K Palaniswami urged the government to immediately withdraw the Goondas Act against seven farmers.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டமன்றத் தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மா, தேத்துறை, குறும்பூர், நர்மா பள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம் ஆகிய 9 ஊராட்சிகளைச் சேர்ந்த சுமார் 3,300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய விளை நிலங்களை `சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கம்’ என்ற பெயரில் கையகப்படுத்துவதற்கான அரசாணையை இந்த திமுக அரசு பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும், வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்றும், அப்பகுதிகளில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்கள் கடந்த சில மாதங்களாக அறப் போராட்டத்தைக் கையிலெடுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயப் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4.10.2023 அன்று, அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Also Read : விலையில்லா மடிக்கணினி திட்டத்துக்கு மூடுவிழா! கணினி ஆய்வகங்களுக்கு கூடுதலாக சில கம்ப்யூட்டர்களை வழங்க அரசு திட்டம்!

போராட்டத்தில் பங்கெடுக்கும் விவசாயிகளுடைய தீவிரத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை ஒடுக்க வேண்டும் என்றும், அந்தப் பகுதிகளில் இருக்கக்கூடிய இளைஞர்கள் மீதும், விவசாயப் பெருங்குடி மக்கள் மீதும் திமுக அரசு தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வழக்குகளைக் காரணம் காட்டி, எந்தவிதமான முன்வழக்குகளும் இல்லாத விவசாயிகள் மீது தொடர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளதோடு, அவர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பார்கள் என்ற காரணத்தைக் காட்டி, தற்போது 7 விவசாயிகள் மீது குண்டர் தடுப்புக் காவலை இந்த திமுக அரசு போட்டிருக்கிறது.

Villagers protesting against land acquisition

மேல்மா கூட்டு ரோடு, கூழமந்தல் போன்ற பகுதிகள் போர்க்களம் போல் காட்சி அளிக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போட்டிருக்கக் கூடிய முள் வேலிகளைப் போல, அங்கே முள் வேலிகளைக் கொண்டுவந்து தடுப்புகளை அமைத்து, பெரும் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய வஜ்ரா வாகனங்களையெல்லாம் கொண்டுவந்து நிறுத்தி, விவசாயப் பெருங்குடி மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த இந்த அரசு முயல்கிறது.

எனது தலைமையிலான அதிமுக அரசு பல்லாயிரக்கணக்கான போராட்டங்களை சந்தித்திருக்கிறது. இல்லாத காரணங்களையெல்லாம் சொல்லி திமுக பல அமைப்புகளைத் தூண்டிவிட்டபோதிலும், அந்தப் போராட்டங்களுக்கெல்லாம் அதிமுக அரசு அனுமதி வழங்கி, காவல் துறை பாதுகாப்பையும் வழங்கியது. நியாயமான காரணங்கள் இருந்தபட்சத்தில் அவைகளை அதிமுக அரசு நிறைவேற்றியும் தந்திருக்கிறது.

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுப்பதற்கு துப்பில்லாத; போராட்டம் உருவாவதற்குண்டான காரணத்தைக் கண்டறிந்து அதைத் தீர்த்து வைப்பதற்கும் வக்கில்லாத இந்த திமுக அரசு, காவல் துறையை தன்னுடைய ஏவல் துறையாக பயன்படுத்துவதை மட்டும் கனக் கச்சிதமாக செய்துகொண்டு வருகிறது.

Also Read : மின் கட்டண உயர்வால் கடும் நெருக்கடி! தொழிலாளர்களுடன் பீகாருக்கு இடம்பெயரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில்?

அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்கும், தங்கள் விவசாய நிலங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில் வேளாண் பெருங்குடி மக்கள் நியாயமான அகிம்சை வழியில் போராடி வருவதை ஒடுக்குவதற்கும், திமுக அரசு காவல் துறையை தொடர்ந்து பயன்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது. விவசாயப் பெருங்குடி மக்கள் 7 பேர் மீதான குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்.

இல்லையெனில், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ஆதரவாக, அதிமுக போராட்டத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். அதிமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தபோது, சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருபோக விவசாயம் நடைபெற்று வந்ததாலும், அந்நிலங்கள் விவசாயப் பணிகளுக்கு பயன்படக்கூடிய நிலமாக இருப்பதாலும், நிலம் கையகப்படுத்தும் நிலைப்பாட்டை அதிமுக அரசு கைவிட்டது.

என்றைக்கும் பொதுப் பிரச்சினைகளில் அரசியல் செய்ய முன்வராத இயக்கம் அதிமுக. மாறாக, எந்தப் பிரச்சினையானாலும் அதில் அரசியல் செய்யும் இயக்கம் தான் திமுக. இதுபோன்ற வன்முறை அரசியலை நிறுத்திவிட்டு, விவசாயப் பெருங்குடி மக்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்புக் காவல் சட்டம் மற்றும் இதர பிரிவுகளின் கீழ் போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், அவர்களது நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றிட வேண்டும் என்றும் இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry