விலையில்லா மடிக்கணினி திட்டத்துக்கு மூடுவிழா! கணினி ஆய்வகங்களுக்கு கூடுதலாக சில கம்ப்யூட்டர்களை வழங்க அரசு திட்டம்!

0
29
The DMK government has dropped the free laptop scheme implemented during the AIADMK regime.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூளையில் உதித்த விலையில்லா மடிக்கணினித் திட்டம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விலையில்லா மடிக்கணினி திட்டத்தின் கீழ் 2011-2012 முதல் 2019-2020 வரை (பிப்ரவரி வரை) ரூ.7,257.61 கோடி மதிப்பிலான 51.67 லட்சம் மடிக்கணினிகள் மாணவ / மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மடிக்கணினிக்காக காத்திருக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து பள்ளி மாணவர்களுக்கான விலையில்லா லேப்டாப் திட்டத்தை செயல்படுத்த இயலவில்லை. கொரோனா பரவல் காரணமாக, மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டது.

2021-ல், மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே கொரோனா பரவலின் தாக்கம் குறைந்தது. எனவே, விலையில்லா மடிக்கணினிகளை அரசு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு பள்ளி மாணவர்களிடம் ஏற்பட்டது. ஆனால், மடிக்கணினிகளை வழங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

Also Read : மின் கட்டண உயர்வால் கடும் நெருக்கடி! தொழிலாளர்களுடன் பீகாருக்கு இடம்பெயரும் திருப்பூர் பின்னலாடைத் தொழில்?

மடிக்கணினிக்கு பதிலாக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்குவதற்கு தமிழக அரசு பரிசீலிப்பதாக கூறப்பட்டது. ஆனாலும், ‘விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தி.மு.க அரசு கைவிடவில்லை, கொள்முதலில்தான் தாமதம் நிலவுகிறது. அந்தப் பணிகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகிக்கப்படும்’ என்று தமிழக அரசின் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால், சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 15 விதமான நலத்திட்டங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன. அதில், விலையில்லா மடிக்கணினி பற்றியோ, டேப்லெட் பற்றியோ குறிப்பிடப்படவில்லை. எனவே, மடிக்கணினி திட்டத்தை அரசு கைவிட்டதா என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பின. இந்த விவகாரம் சர்ச்சையானவடன், ‘விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது. கடந்த ஆட்சியில் வழங்கப்படாத மடிக்கணினிகளையும் சேர்த்து மொத்தம் 14 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும்’ என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த ஏப்ரல் மாதம் கூறினார். அதன் பிறகும் மடிக்கணினிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடங்கவே இல்லை.

Also Read : வினாத்தாள்களை காப்பியடித்துப் பிடிபட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்..! என்ன செய்யப்போகிறது உயர் கல்வித்துறை?

இந்தச் சூழலில் விலையில்லா மடிக்கணினி திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிக நிதி தேவைப்படுவதால், மாணவர்களின் கணினி தொடர்பான தேவைகளுக்கு மாற்று வழியை தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களை மேம்படுத்த உள்ளதாக டிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத பள்ளிக் கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “விலையில்லா மடிக்கணினித் திட்டத்தை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யவில்லை, நிதிச் சிக்கல்கள் காரணமாக சர்வதேசச் சந்தையில் இருந்து மடிக்கணினிகளை அரசால் கொள்முதல் செய்ய முடியவில்லை.

விலையில்லா மடிக்கணினி வழங்க இயலாததால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதுள்ள கணினி ஆய்வகங்களை மேம்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 6,200 கணினி ஆய்வகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆய்வகத்திற்கும் கூடுதலாக சில கணினிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

Also Read : மாணவர்களுக்கு APAAR ID CARD! ‘ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை’! மத்திய அரசின் திட்டத்திற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

மாணவ / மாணவிகள் எந்த நேரத்திலும் கணினிகளைப் பயன்படுத்தலாம். விடுமுறை நாட்களிலும் ஆய்வகத்தை திறந்துவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப தற்காலிகப் பயிற்றுநர்களை நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆய்வகங்களில் இணைய வேகத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி ஆய்வங்களில் உள்ள கணினிகளில், வினா வங்கி மற்றும் மாதிரி வினாத்தாள்கள் உள்ளிட்டவை பதிவேற்றப்பட உள்ளது. பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கூடுதல் கணினிகளின் எண்ணிக்கை தேவையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட உள்ளது.” என்றார்.

ஆனால் அரசின் இந்த மாற்றுத்திட்டம் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாது. சொந்தமாக அவர்களுக்கென மடிக்கணினிகளை வழங்கும்போது, தேவைக்கு ஏற்ப நேரம் ஒதுக்கி பயன்படுத்துவார்கள். ஆனால், ஆய்வகத்துக்கு வந்து கணினிகளை பயன்படுத்த வேண்டும் என்பது மாணவர்களுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும். பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள், 11,12ம் வகுப்புகளுக்கு பொதுவானதாக இருக்கும். உதாரணமாக இரண்டு வகுப்புகளிலும் சேர்த்து 50 மாணவர்கள் இருப்பார்கள் என வைத்துக்கொண்டால், எத்தனை மாணவர்களால் ஒரே நேரத்தில் கணணினிகளைப் பயன்படுத்த முடியும். கணினியை உபயோகப்படுத்தும் மாணவர், அடுத்துக் காத்திருக்கும் மாணவருக்காக பாதியிலேயே வெளியேற வேண்டுமா?

Also Read : Virat Kohli 50th Hundred: தலைவணங்கிய கோலி, உணர்ச்சிப் பெருக்கில் சச்சின்; ரசிகர்களின் முழக்கத்தால் அதிர்ந்த வான்கடே மைதானம்!

மேலும், மாணவ / மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு நடந்து வரும் தூரத்தில்தான் இருப்பார்களா? பொதுப் போக்குவரத்தை நம்பியுள்ள மாணவர்கள் அரசு திட்டமிடும்படி கணினிகளை எவ்வாறு பயன்படுத்த இயலும்? அரசு முயற்சிக்கும் மாற்றுத்திட்டம் மாணவர்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது. திட்டம் குறித்து எழும் கேள்வியை திசைத் திருப்ப மட்டுமே இது உதவும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம்தானே என்று, அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாகவே விமர்சனம் எழுந்துள்ளது. மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியில், அறிவுத்திறனை மேம்படுத்துவதில், உயர் கல்வியில், ஆன் லைன் கல்வியில் மடிக்கணினி பெருமளவில் உதவியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது. நிதிச்சிக்கல் என்று காரணம் கூறி விலையில்லா மடிக்கணினி திட்டத்தில் அரசியலைப் புகுத்தக் கூடாது என்பதே கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry