ஒருவரை இளமையாகக் காட்டுவதில் முக்கியப் பங்கு வகிப்பது சருமமும் தலைமுடியும்தான். நரை வந்து முடி வெளுத்துப் போகும்போது கருமை நிறம் வேண்டும் எனப் பலரும் நாடுவது `டை’ எனப்படும் தலைமுடிச் சாயத்தை! உலகம் முழுக்க விதவிதமான கலர்களில் ஹேர் டை கிடைத்தாலும், கறுப்பு நிற டைதான் நம்மவர்களுக்கு ஃபேவரைட்.
முடியின் வலிமையானது, அதன் உள் அடுக்குச் செல்களைப் பொறுத்துதான் அமைகிறது. மெல்லிய உள் அடுக்குச் செல்களைக் கொண்டவர்களுக்கு நீண்ட நேரான கூந்தலும், அடர்ந்த உள் அடுக்கு செல்களைக் கொண்டவர்களுக்கு கூந்தல் சுருண்டும் இருக்கும். இந்த இரு தரப்பினருக்குமே 40 வயதைத் தாண்டியதும் ஏற்படும் முக்கியமானப் பிரச்னை நரை முடி.
‘மெலனின்’ (Melanin) எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின் (Eumelanin), பயோ மெலனின் (Bio-melanin) ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன. இந்த நிறமிகளின் உற்பத்திக் குறைவதால், கருமையான முடிகள் நரைமுடிகளாக மாறுகின்றன.
முதுமையின் காரணமாகப் பொதுவாக, 40 முதல் 50 வயதுகளில் நரை முடி தோன்றும். ஆனால், இன்றையச் சூழலில் இளம் வயதிலேயே பலருக்கும் நரை முடிகள் எட்டிப் பார்க்கின்றன. மரபியல் காரணங்கள், புகைப்பிடித்தல், மது அருந்துதல், துரித உணவு உண்பது, புரதச்சத்துக் குறைபாடு மற்றும் `பயோட்டின்’ (Biotin) எனும் ஊட்டச்சத்து குறைதல், வேதிப்பொருட்களை அதிகமாகக்கொண்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்துதல் போன்றவை இளம் வயதிலேயே நரை முடியை ஏற்படுத்திவிடுகின்றன.
ஹேர்டையில் பெரும்பாலும் அம்மோனியா மற்றும் பெராக்ஸைடு கலந்திருக்கும். இது தலைமுடியை உடைத்து, முடி வளர்ச்சியைத் தடுக்கிறது. அரிப்பு, தோல் எரிச்சல், சிவத்தல், உச்சந்தலையில் எரிச்சல், வீக்கம், இளஞ்சிவப்பு கண் வெண்படல கண்நோய், கண்களில் வீக்கம், இருமல், மூச்சுத்திணறல், நுரையீரல் வீக்கம், தொண்டை அசெளகரியம், நாளமில்லா சுரப்பிகளின் செயலிழப்பு, சுவாசக் கோளாறுகள், சிறுநீரகப் பிரச்னைகள் மற்றும் ஆஸ்துமா தாக்குதல்களை தூண்டலாம். இதை நாள்பட்டு பயன்படுத்தும்போது சிலருக்கு புற்றுநோய் ஏற்படவும் இது வழிசெய்கிறது.
கிராமத்துப் பெட்டிக்கடைகளில் கூட பாக்கெட் ஹேர்டைக்கள் விற்பனையாகின்றன. இவற்றில் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு, பினலின், டயமின் மற்றும் பாராபெனிலெனிடமைன் (PPD ) என்ற ஆபத்து நிறைந்த கெமிக்கலை பயன்படுத்துகின்றனர். அதை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் நரை முடி கூடுதலாக உருவாகுதல், தலைமுடி உதிர்வு, முகக் கருமை, இளமையிலேயே வயதான தோற்றம், சரும அலர்ஜி போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கும்.
அலர்ஜியில் தொடங்கி சருமத்தின் வழியாக உள் நுழைந்து நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதில் இருக்கும் அமோனியா, போன்றவை படிப் படியாக உடல் உறுப்புகளிலும் பாதிப்பை உண்டாக்குகிறது. ஹேர் டையில் மட்டுமல்ல, தற்காலிகமாகக் குத்திக்கொள்ளும் டேட்டூக்கள், அடர்ந்த நிறம் கொண்ட மேக்கப் சாதனங்களிலும் பிபிடி கலந்திருக்கிறது. பிபிடி பெட்ரோலியத்திலிருந்து எடுக்கப்பட்டு, உடன் ஹைட்ரஜன் பெராக்ஸைட் கலந்து ஹேர் டை தயாரிக்கப்படுகிறது.
சிலருக்கு ஆஸ்துமாவோ, மூச்சுத்திணறலோ, வீஸிங் பிரச்னையோ இருக்கலாம். சிலருக்கு தும்மல் பிரச்னை இருக்கும். வாசனை ஏற்றுக்கொள்ளாது. இந்த பாதிப்புகள் உள்ளவர்களுக்கு ஹேர் டை ஏற்றுக்கொள்ளாமல் அலர்ஜியை உருவாக்கலாம். எனவே நாம் பயன்படுத்தும் ஹேர் டை, கெமிக்கல் கலந்த டையா, பாதி கெமிக்கல் கலந்ததா, இயற்கையான டையா என்பது. இயற்கையான டை என்றாலும் அது எல்லோருக்கும் ஏற்றுக் கொள்ளும் என்று சொல்ல முடியாது. வீஸிங், தும்மல் பாதிப்பு உள்ளவர்களுக்கு இயற்கையான டை பாதிப்பை கொடுக்கலாம். அவர்களுக்கு டை உபயோகித்ததும் இருமல் அதிகரிக்கும். தூங்கும்போது அதன் தீவிரம் அதிகமாக இருக்கும்.
சிலருக்கு கெமிக்கல் டை ஏற்றுக்கொள்ளும். குறிப்பிட்ட நேரம் அதை வைத்திருந்துவிட்டு கூந்தலை அலசிவிடுவதால் பெரிய பாதிப்புகள் இருக்காது. அதுவே, இயற்கையானதென நினைத்து உபயோகிக்கும் மருதாணி பெரிய அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே, இயற்கையான டையாக இருந்தாலும் `வைர ஊசி என்பதற்காக கண்ணைக் குத்திக்கொள்ள முடியாது’ என்பது போலதான் அதை அணுக வேண்டும்.
நரை முடியைத் தடுப்பதற்கான உணவுகள்:
- பாலில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம், பயோட்டின் (Biotin), வைட்டமின் டி நிறைந்திருக்கின்றன. எனவே, தினமும் இருவேளை பாலை தவறாமல் குடிக்கலாம்.
- ஒரு நாளைக்கு இரு முட்டைகளைச் சாப்பிடுவதன் மூலம் பயோட்டின் (Biotin) மற்றும் இரும்புச்சத்து போன்ற கேச வளர்ச்சியைத் தூண்டும் சத்துக்களை எளிதில் பெறலாம்.
- வஞ்சரம் மீனில் உள்ள ஒமேகா-3 (Omega-3 Fatty Acid) முடியின் கருமை நிறத்தைப் பராமரிக்க உதவும்.
- உயிர்ச் சத்துக்கள் நிரம்பிய பசலைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை போன்ற கீரை வகைகளும் கேச பராமரிப்புக்குச் சிறந்தவை.
Also Read : இந்தியாவின் தேசிய ஸ்வீட் எது தெரியுமா? பலரும் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்!
கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை ஹேர் டையை பயன்படுத்திப்பாருங்கள். எந்த ஒவ்வாமையும் ஏற்படாதபட்சத்தில் இதை தொடர்ந்து பயன்படுத்தலாம். இரசாயன பாதிப்புகளில் இருந்து தப்பிக்க இது கைகொடுக்கும்.
இயற்கை டை 1:
தேவையானவை: தேயிலைப் பொடி, கொட்டைப் பாக்குப் பொடி, கறுப்பு வால்நட் பொடி – தலா 3 டீஸ்பூன்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான மூன்று பொருட்களையும் கொட்டி, வெந்நீர் சேர்த்துப் பசைபோலத் தயாரிக்கவும். இதைக் கேசத்தில் தடவி, 30 நிமிடங்கள் ஊறவைத்து அலசவும். பிறகு கேசத்தை நன்றாக உலர்த்தி, இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைப் பூசிவரவும். விரைவிலேயே நரை முடியிலிருந்து விடுபட்டு கருமையான முடிகளைப் பெறலாம். இந்தச் செய்முறையில் வெந்நீருக்குப் பதிலாக, பொடிகளை நன்றாகக் காய்ச்சி வடிகட்டி, தேநீர்போலவும் தயாரித்து கேசத்தில் பூசலாம்.
இயற்கை டை 2:
தேவையானவை: மருதாணி இலை – கைப்பிடி அளவு, நெல்லிக்காய் – 2, காபிக் கொட்டை – சிறிதளவு, கொட்டைப் பாக்குப் பொடி – 3 டீஸ்பூன்.
செய்முறை: அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து இரவு முழுக்க ஒரு பாத்திரத்தில் ஊறவிடவும். காலையில் இந்த விழுதைக் கேசத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு ஊறவைத்து, இளஞ்சூடான நீரில் கூந்தலை அலசவும். இரவில் சிறிது ஆமணக்கு எண்ணெயைத் தலைமுடியில் பூசி வரவும்.
இயற்கை டை 3:
தேவையானவை: வால்நட் பொடி – 3 டீஸ்பூன், அவுரி இலை – சிறிதளவு, சாமந்திப் பூ – சிறிதளவு, ரோஸ் மேரி இலைகள் (உலர்ந்தது) – சிறிதளவு. இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
செய்முறை: அனைத்தையும் நன்றாக உலர்த்திப் பொடி செய்து, தேநீர் போன்று காய்ச்சி வடிகட்டவும். இந்த நீரை கேசத்தில் தடவி, வெயிலில் நன்றாக உலர்த்தவும். பிறகு கேசத்தை அலசிவிடவும். கருமை நிறம் அப்படியே நீடித்திருக்க, 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த நீரைத் தலைக்குப் பயன்படுத்தலாம்.
இயற்கை டை 4:
தேவையானவை: ஆற்றுத்தும்மட்டி பழச் சதை – 1 கப், நெல்லிப்பழச் சதை – 1 கப், கரிசாலை இலை – 1 கப், தேங்காய் எண்ணெய் – 500 மி.லி.
செய்முறை: பழச் சதைகளையும், கரிசாலை இலை விழுதையும் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாகக் காய்ச்சவும். இந்த விழுது கரகரப்பாக மாறும் பதத்தில் இறக்கி, வடிகட்டி, ஆறவைக்கவும். தினமும் இந்த எண்ணெயை கேச பராமரிப்புக்குப் பயன்படுத்தினால், நாளடைவில் இள நரை குறைந்து, கூந்தல் கருமையாக வளரும். கேசத்தை அலச சீயக்காய் பொடி அல்லது `உசில்’ என்னும் அரக்குப் பொடியைப் பயன்படுத்த வேண்டும்.
இயற்கை டை 5:
தேவையானவை: செம்பருத்தி இலை, கரிசலாங்கண்ணி இலை, மருதாணி இலை, அவுரி இலை – தலா கைப்பிடி அளவு, வெந்தயம் – 3 டீஸ்பூன்.
செய்முறை: அனைத்தையும் சேர்த்து, நன்றாக அரைத்து, சிறிய வில்லைகளாகத் தட்டி வெயிலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு இவற்றைத் தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து, அந்த எண்ணெயைக் கேசத்தில் பூசிவர கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry