#cmcvellore | வசூல்ராஜா பட பாணியில் ராகிங்! சீனியர்கள் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்! குற்றவியல் நடவடிக்கைக்கு பரிந்துரை!

0
213

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை நிர்வாணமாக்கி விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்து ராகிங்கில் ஈடுபட்டதாக சீனியர் மாணவர்கள் ஏழு பேரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்பு கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை ஒரு இ-மெயில் மூலம் கடிதம் கிடைத்துள்ளது. அதில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படாத நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்தனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கடிதத்தை மாணவர்கள் சிலர் டிவிட்டர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் போஸ்ட் செய்துள்ளனர்.

Also Read : முன்னாள் ஐ.ஜி. ஜாபர் சேட், கருணாநிதியின் செயலாளர் குடும்ப சொத்துக்கள் முடக்கம்!அமலாக்கத்துறை அதிரடி!

இந்நிலையில் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்யும் அதிர்ச்சி வீடியோவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர் டாக்டர் கார்த்திக் சதார் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். கல்லூரி முதல்வரையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் அவர் டேக் செய்திருந்தார். அதன்பிறகே இந்த ராகிங் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவை கல்லூரி நிர்வாகம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த சம்பவம் விடுதியில் கடந்த 9ஆம் தேதி நடந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சீனியர் மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சாலமன் சதீஷ்குமார்,” ராகிங் புகார் குறித்து பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள் அடங்கிய ஆறு பேர் அடங்கிய சிறப்புக் குழு மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில் ஏழு மருத்துவ மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். ராகிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது” என்று கூறியுள்ளார்.

சிறப்பு குழுவானது சில நாள்களில் அறிக்கையை தாக்கல் செய்துவிடும், இந்த அறிக்கை, ராகிங் தடுப்புப் பிரிவு, கல்லூரி நிர்வாகம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக காவல்துறையினரிடமும் வழங்கப்பட உள்ளது என்று கல்லூரி இயக்குநர் டாக்டர் மேத்யூ கூறியுள்ளார்.

கல்லூரியில் உள்ள பல்வேறு துறை ஆசிரியர்களை உள்ளடக்கிய சிறப்புக் குழுவின் அறிக்கை, ராகிங் தடுப்புப் பிரிவு, கல்லூரிகளில் கட்டாயம் உள்ள பிரிவினருக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, குற்றவியல் வழக்குப் பதிவு செய்தல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும். எந்த வடிவத்திலும் ராகிங்கை நாங்கள் மன்னிக்க மாட்டோம். ராகிங் மீதான சகிப்புத்தன்மையும் எங்களிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry