திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலில், தலைவர் பதவியை ராஜினாமா செய்த திமுக வார்டு உறுப்பினர் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வார்டு உறுப்பினர் கலாராணி பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி 8வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அடைக்கப்பன் போட்டியின்றி தேர்வான நிலையில், 14 வார்டுகளுக்கு கடந்த பிப். 19 தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 12 இடங்களிலும், 1வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.கலாராணியும், 4வது வார்டில் பாஜக வேட்பாளர் ப.விஜயகுமாரும் வெற்றி பெற்றனர்.
புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த திமுகவினர் அக்கட்சியைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக தேர்ந்தெடுத்தனர். கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்ய தலைமை வலியுறுத்தியதை அடுத்து கடந்த மார்ச் 8 ஆம் தேதி தலைவர் பதவியை புவனேஸ்வரி ராஜினாமா செய்தார்.
Also Read : அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு! சுரேஷ் ரெய்னா அறிவிப்பு!
இதையடுத்து கடந்த மார்ச் 26 ஆம் தேதி புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கலாராணி உள்ளிட்ட 3 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்த நிலையில் கோரம்(குறைவெண்) இல்லாததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கடந்த மே 25ம் தேதி தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் கலாராணி, பாஜக வார்டு உறுப்பினர் விஜயகுமார், 10வது வார்டு திமுக உறுப்பினர் ஆனந்தன் ஆகிய 3 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்ததால் கோரம் (குறைவெண்) இல்லாததால் தேர்தல் மீண்டும் 2வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் 4வது முறையாக இன்று (செப். 6) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகத்திற்கு 15 வார்டு உறுப்பினர்களும் வந்திருந்த நிலையில் முதல் முறை தலைவராக தேர்ந்தெடுக்கபட்டு ராஜினாமா செய்திருந்த புவனேஸ்வரி மறைமுக தேர்தல் மூலம் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து தேர்தல் நடைபெற்ற பேரூராட்சி அலுவலகத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே இறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1வது வார்டு உறுப்பினர் க.கலாராணி தரைத்தளத்தில் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு நியாயம் வேண்டும். ஏற்கெனவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ராஜினாமா செய்த புவனேஸ்வரியையே துணைத்தலைவர் அம்மையப்பன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வைத்துள்ளார். இதுதான் கூட்டணி தர்மமா? திமுக தலைவர் யார் ஸ்டாலினா? இல்லை அம்மையப்பனா? மாவட்ட அமைச்சர், ஒன்றிய செயலாளர், துணைத்தலைவர் ஆகியோர் ஜாதி ரீதியில் செயல்படுகின்றனர்” என்றார்.
இதுவாங்க கூட்டணி தர்மம்! திமுகவின் சாதி ஆதிக்கம்! முதல்வரையே மதிக்கல! குமுறும் கரூர் மாவட்டம் புலியூர் கம்யூனிஸ்ட் தோழர்! @EPSTamilNadu @annamalai_k @SeemanOfficial @tncpim @kbcpim @sreeramjvc pic.twitter.com/eIqQ3Tirr2
— VELS MEDIA (@VelsMedia) September 6, 2022
ஏடிஎஸ்பி கீதாஞ்சலி கலாராணியிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்ந்தார். கலாராணிக்கு ஆதரவாக நுழைவாயில் கேட் வெளியே அவரது கணவர் கதிர்வேல், மகள் சுசீலா, மகன் அருள் ஆகியோர் நின்றனர். போலீஸார் அவர்களை அங்கிருந்து நகர கூறவே போலீஸாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட புவனேஸ்வரி, துணைத்தலைவர் அம்மையப்பன் மற்றும் திமுக, பாஜக, சுயேட்சை கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்திலிருந்து வெளியேறினர். கலாராணி போராட்டத்தைத் தொடர்ந்தார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry