அமலாக்கத்துறை முன் ஆஜராகிறார் ராகுல்! அரசியல் செய்ய ஏதுமில்லை என்கிறது பாஜக!

0
192

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்கு பரிமாற்ற வழக்கில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றுள்ளதாக வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அமலாக்கத் துறையில் நாளை(ஜூன் 13) ஆஜராகவிருக்கிறார். இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை, நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 25 அமலாக்கத் துறை அலுவலகங்களின் முன்னர் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா, “அமலாக்கத் துறை சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டியது தானே. இது என்ன வகையான சத்தியாகிரகம். மகாத்மா காந்தி இருந்திருந்தால் இந்த போலி சத்தியாகிரகத்தைப் பார்த்து அவமானப் பட்டிருப்பார். இதில் காங்கிரஸ் அரசியல் செய்வதற்கு ஏதுமில்லை. இந்தப் பிரச்சினை முழுக்க முழுக்க சட்டம் சார்ந்தது” என்றார்.

Sambit Patra, National spokesperson – BJP 

அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தை (ஏஜெஎல்) சுதந்திரத்துக்கு முன்பு ஜவஹர்லால் நேரு தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர்.

இதன் சார்பில் நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட சில பத்திரிகைகள் வெளியாயின. இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடன் கொடுத்துள்ளது. இதை திருப்பிச் செலுத்தாத நிலையில், நஷ்டம் காரணமாக 2008-ல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, 2010-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ.50 லட்சத்துக்கு யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஏஜேஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறவில்லை. இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோர் வசமும், 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வசமும் வந்தன. 2016 முதல் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீண்டும் வெளியாகிறது.

இதனிடையே, ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் கூறி டெல்லி நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ராகுல் காந்தி நாளை ஆஜராகவுள்ள நிலையில், சோனியா காந்தி வரும் 23-ந் தேதி ஆஜராவார் எனத் தெரிகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா ஆஜராவாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry