மு.க. ஸ்டாலினை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரதம்! ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பரபரப்பு!

0
501

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த சிலர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் சேவாதள மாநிலத் தலைவர் கோவை ஆர்.சரவணன் உட்பட, அந்த அமைப்பைச் சேர்ந்த 6 பேர் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்திற்கு இன்று காலை சென்றனர். பேரறிவாளன் விடுதலையை கொண்டாடியதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிரான வாசஙகங்கள் அடங்கிய பதாகைகளுடன் இவர்கள் உண்ணாவிரதத்தில் அமர்ந்தனர்.

நுழைவு வாயில் அருகிலேயே இவர்கள் உண்ணாவிரதம் இருந்ததால் அஞ்சலி செலுத்த வருபவர்கள் இவர்களைச் சந்திக்காமல் செல்ல முடியவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கே.வீ. தங்கபாலு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மேலும் பிற மாநில முன்னாள் முதலமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

கே.எஸ். அழகிரி, ராஜீவ் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடம் பேசிவிட்டுச் சென்றார். அடுத்தடுத்து வந்தவர்களும் அவர்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

6 பேர் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து அங்கு வந்த காவலர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். நாங்கள் எங்கள் இடத்தில் உண்ணாவிரதம் இருக்கிறோம். யாருக்கும் தொந்தரவு ஏற்படாது என உண்ணாவிரதம் இருந்த காங்கிரஸார் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு காவல்துறையினர் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இதைத்தொடர்ந்து மாலை 5 மணி அளவில் 6 பேரும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry