பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 குறைகிறது! சிலிண்டருக்கு ரூ.200 மானியம்! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

0
423

பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலையையொட்டியே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது. ரஷ்யா- உக்ரைன் போரினால் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்தது. இதையடுத்து, சமையல் எண்ணெய், பெட்ரோல், டீசல் விலைகள் எகிறியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, சமையல் எரிவாயு விலை ஆயிரத்தை தாண்டியது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு மானியம் வந்து கொண்டிருந்தது. அரசு கொடுக்கும் மானியம் ஏழை, நடுத்தர மக்களுக்கு சற்று உதவியாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு மானியத்தை படிப்படியாக குறைத்து, தற்போது நிறுத்தியே விட்டது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , ”மத்தியில் பாஜக அரசு பதவியேற்றதில் இருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது. இதன் விளைவாக, பாஜகவின் தற்போதைய ஆட்சிக் காலத்தில் சராசரி பணவீக்கம் முந்தைய அரசாங்கங்களைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதன்படி, பெட்ரோலை பொறுத்தவரை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 6 ரூபாயையும் குறைத்துள்ளோம். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும்” என அவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் 12 சமையல் எரிவாயுக்கு ஒரு ஆண்டுக்கு தலா ரூ.200 மானியம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

“அனைத்து மாநில அரசுகளையும், குறிப்பாக நவம்பர் 2021ல் வரிக் குறைப்பு செய்யாத மாநிலங்களும், இதேபோன்ற குறைப்பைச் செயல்படுத்தி, சாமானியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அறிவுறுத்துவதாகவும் டிவிட்டரில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை குறைப்பு பல துறைகளில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உலக அளவில் பணவீக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதனால், மத்திய அரசுக்கு ஒரு நிதியாண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரியிழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது. கடந்த 40 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்தமாற்றமும் இல்லாமல் இருந்தச் சூழலில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பணவீக்கம் – விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை நடுத்தர மக்களையும், வாகன ஓட்டிகளையும் சற்றே ஆறுதல் படுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry