சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற பரிசீலிக்க வேண்டும்! சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

0
90
Consider plea to shift ‘Savukku’ Shankar from Coimbatore central prison to any other prison: Madras High Court

யூடியூபர் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதான யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை சிறையில் தாக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தக் கோரியும், சவுக்கு சங்கருக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிடக் கோரியும் அவரது தாய் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தாக்குதல் தொடர்பாக விசாரித்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது.

Also Read : சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது குறித்து நீதிபதி மூலம் விசாரணை – ஈபிஎஸ் வலியுறுத்தல்! சேலத்திலும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு!

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (May 9) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

பின்னர், அரசுத் தரப்பில், “சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிக்கையின் அடிப்படையில், சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சை அவசியம். எனவே, அவருக்கு உரிய சிகிச்சை வழங்க கோவை சிறை நிர்வாகத்துக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், இன்று அவர் புறநோயாளியாக சிகிச்சைக்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.

Also Read : ஒருதலைப்பட்சமாக எல்லையை அளக்கும் கேரளா! சலனமின்றி வேடிக்கைப்பார்க்கும் தமிழக அரசு! உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ள விவசாயிகள்!

அப்போது சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில், “தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. அவரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி சிறைத் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க அனுமதி வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கெனவே நீதி விசாரணை நடத்தப்பட்டு விட்டதாகக் கூறி, சங்கரின் தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கை முடித்து வைத்தனர். மேலும், சிறையை மாற்றக் கோரி சவுக்கு சங்கரின் தாய் அளித்த விண்ணப்பத்தை இரண்டு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீது பதிவான வழக்குகள் 5 ஆக அதிகரித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry