6 வாரங்களில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும்! எச்சரிக்கையாக இருக்குமாறு டெல்லி எய்ம்ஸ் அறிவுறுத்தல்!

0
13

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் தாக்கக்கூடும் என்று டெல்லி எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். 2-வது அலையில் பாதிக்கப்படாதவர்கள், 3-வது அலையில் பாதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில், “நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்திலிருந்து தளர்வுகள் கொடுத்து வருகின்றன. இச்சூழலில், மக்கள் முதல் இரண்டு அலைகளிலும் எவ்விதப் பாடமும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிப்பதில்லை. முக கவசம் முறையாக அணிவதில்லை. அதனாலேயே, மூன்றாவது அலையை இந்தியா எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி எழலாம்.

2-வது அலையின் தாக்கத்தில் இருந்து நாடு மீண்டு வருகிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், தொற்று அதிகரிக்கக்கூடும். மூன்றாவது அலையின் பாதிப்பு ஆரம்பித்திருக்கலாம் என்றே கருதுகிறேன். தேசிய அளவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெளிப்படையாகத் தெரிய சிறது காலமாகும். ஆனால் தவிர்க்க முடியாத மூன்றாவது அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் தாக்கக் கூடும். 2-வது அலையில் பாதிக்கப்படாதவர்கள், 3-வது அலையில் பாதிக்கப்படலாம். எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுகிறோம் என்பதை பொறுத்தே மூன்றாவது அலையின் பாதிப்புகள் இருக்கும்.

5 சதவிகிதத்துக்கும் அதிகமான தொற்று பாதிப்பு உள்ள மாவட்டங்களில் குறைந்தபட்ச ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். முதல் அலையின் போது பரவல் வேகம் குறைவாகவும், இரண்டாவது அலையில் பரவல் வேகம் மிக அதிகமாகவும் இருந்தது. இப்போது மாறுபாடு அடைந்து பரவி வரும் டெல்டா வகைத் தொற்று மிக வேகமாக பரவுவதற்கு வாய்ப்பு அதிகம். தடுப்பூசி போடாவிட்டால், அடுத்த சில மாதங்களில் மக்கள் தொற்றால் பாதிக்கப்படுவார்கள்என்று குலேரியா கூறியுள்ளார்.   

இதனிடையே, கொரோனா வைரஸின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, முன்களப் பணியாளார்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் தொடக்க விழாவில் பேசிய அவர், வேகமாக உருமாறி புதிய சவால்களை கொடுத்துக் கொண்டிருக்கும் கொரோனாவைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றார்.  வரும் 21ஆம் தேதி முதல் அனைத்து அரசு மையங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry