கொரோனா பரவல் மீண்டும் அதரித்தால், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
உலக தாய்ப் பால் வார விழாவை முன்னிட்டு சென்னை ராஜிவ் காந்தி அரது பொது மருத்துவமனையில், மருத்துவ கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட தாய்ப் பால் விழிப்புணர்வு அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், பி.கே. சேகர்பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலூட்டும் தாய்மார்களுக்கான அறையை துவங்கி வைத்த பின்னர் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது” இந்த ஆண்டு முடிவதற்கு முன்பாக, 7 மருத்துவ கல்லூரி மற்றும் 5 மாவட்ட மருத்துவமனை என 12 இடங்களில் தாய் பால் வங்கி அமைக்கப்படும்.
செப்டம்பர் மாதம் மத்தியில் தமிழகத்தில் கொரனோ மூன்றாவது அலை உச்சம் தொட வாய்ப்பு இருப்பதாகவும், 42,000 வரை தினசரி பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் ஐஐடி கணித்துள்ள நிலையில், எய்ம்ஸ் உட்பட அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளை கேட்டு தமிழக சுகாதாரத்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உருமாறிய கொரோனோ வைரஸ் குறித்து கண்டறிய தமிழகத்தில் இரண்டு ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளது. இதுவரை 32 பேர் டெல்டா வகை வைரஸ் பாதிப்பாலும், 10 பேர் டெல்டா பிளஸ் வகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரனோ மூன்றாவது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு சிறப்பு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன. கொரோனா எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கப்படும். தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 12.5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன.
புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் நிலைக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் என முதலமைச்சர் கூறியுள்ளார். முக கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் அதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 1.5 லட்சம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்படுகின்றன” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
இதனிடையே, மக்கள் நெருக்கம் அதிகமுள்ள சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருவதால் அடுத்த அலை ஆரம்பமாகிவிட்டதா என்று கேள்விகள் எழுகின்றன. பாதிப்பை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry