உங்கள் பிச்சையில்தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா?, சட்டம் இயற்றும் இடத்தில் இருப்பவர், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசுவது ஏற்புடையதா? என ஆர்.எஸ். பாரதி வழக்கில் நீதிபதி வேதனை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுகவின் இளைஞரணித் தலைமை அலுவலகமான அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, பட்டியலினத்தவருக்கு எதிராகப் பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இது தொடர்பாக ஆதித் தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், தேனாம்பேட்டை போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆர்.எஸ். பாரதி மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ் பாரதியின் பேச்சு யார் வேண்டுமானாலும், சிபாரிசு இருந்தால் நீதிபதி ஆகிவிடலாம் என்பதைப் போல் உள்ளதாகவும், இத்தகைய பேச்சுகள் மக்களுக்கு நீதித்துறையில் மீதுள்ள மாண்பைச் சீர்குலைத்துவிடும் எனவும் நீதிமன்றதம் வருத்தம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தன் மீதான வன்கொடுமைத் தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது சரியான கூற்றா?, இது அவமானப்படுத்துவது ஆகாதா?, திராவிட இயக்கம் இல்லாவிடில் அவர்கள் சுயமாக மேல் வந்திருக்கவே முடியாதா?, உங்கள் பிச்சையில்தான் எல்லோரும் நீதிபதி ஆனார்களா?, சட்டம் இயற்றும் இடத்தில் இருப்பவர், அரசியல் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் இப்படிப் பேசுவது ஏற்புடையதா?, சமீபகாலங்களில் அரசியலில் அறிவுபூர்வமான கருத்துப் பரிமாற்றம் குறைந்து வருகிறது” என வருத்தம் தெரிவித்தார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry