நம்பிக்கையான தளபதி இல்லாததால், அடுத்த கட்ட நகர்வை ஆலோசிக்கவும், தீர்மானிக்கவும் முடியாமல் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி திணறுவதாக தெரிகிறது. இதன் காரணமாக முடிவெடுப்பதில் அவர் தாமதம் செய்தால், என்.ஆர். காங்கிரஸ் தனித்துவிடப்படலாம் என்ற சூழலும் தென்படுகிறது.
2008-ல் முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், 2011 சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை ரங்கசாமி தொடங்கினார். இதற்கு முழுபக்கபலமாக இருந்தது மறைந்த முன்னாள் எம்.எஎல்.ஏ. பாலன். அதேபோல், அரசியல் சீனியர்களான ராதாகிருஷ்ணன், தேனி ஜெயக்குமார், சபாபதி போன்றோரும் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இவர்களது கூட்டுமுயற்சியால், கட்சி பதிவு தொடங்கி, தேர்தல் செலவுக்கான பணம் வரை அனைத்தையும் ரங்கசாமியால் கனகச்சிதமாக செய்ய முடிந்தது. இதன் மூலம் ஆட்சியும் அவர் வசமானது. அப்போது என்.ஆர் காங்கிரஸின் தளகர்த்தர்களாக அறியப்பட்டவர்கள் பாலன், ராதாகிருஷ்ணன், தேனி ஜெயக்குமார் ஆகியோர்தான். முதலமைச்சர் பொறுப்பேற்ற ரங்கசாமி, கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தவறினார். கட்சிக்கான நிர்வாகிகளைக் கூட நியமிக்கவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், கட்சியின் செயல்பாடு பூஜ்ஜியமாக இருந்ததால், கட்சிக்கு செலவு செய்யும் முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை குறைந்தது. முதலமைச்சராக முழுமையாக 5 ஆண்டுகளை பூர்த்தி செய்த ரங்கசாமியிடம், 2016 தேர்தலை எதிர்கொள்வதில் ஒருவித சுணக்கம் தெரிந்தது. கூட்டணியை இறுதி செய்வது, வேட்பாளர்களை தெரிவு செய்வது என்பது போன்ற முக்கிய நடவடிக்கைகளில், அவர் காட்டிய காலதாமதம் கட்சியினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
2011-2016 ஆட்சிக்காலத்தில், ரங்கசாமி, கட்சியையும் வளர்க்கவில்லை, முதலமைச்சராக மக்கள் நம்பிக்கையையும் பெறவில்லை. இதனால் ஆட்சி அதிகாரத்தை இழந்த ரங்கசாமி, அதன் மூலம் பெற்ற பாடத்தைக் கொண்டுகூட, இதுவரை கட்சி வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை, நிர்வாகிகளை நியமிக்கவில்லை. ரங்கசாமிக்கு நம்பிக்கையான தளகர்த்தரான பாலன் கொரோனாவுக்கு பலியாக, சிலரது தூண்டுதலால் ராதாகிருஷ்ணனை ரங்கசாமி ஓரங்கட்டினார்.
அதேநேரம், சொந்தக் கட்சியில் யாரை நம்புவது எனத் தெரியாமல் ரங்கசாமி தடுமாறுகிறார். இணக்கமான, நம்பிக்கைக்குரிய தளபதிகள் இல்லாததால், யாரை நம்பி தேர்தல் திருவிழா பணிகளை ஒப்படைப்பது என அவர் திணறுவதாக தெரிகிறது. கூட்டணி, இடப்பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் நிதி, வேட்பாளர்கள் தேர்வு போன்ற முக்கிய பொறுப்புகளை யாரை நம்பி ஒப்படைப்பது? எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களை எப்படி திருப்திப்படுத்துவது? என ரங்கசாமி குழப்பதில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி என்.ஆர். காங்கிரஸ் தொண்டர் ஒருவரிடம் பேசியபோது, “ஆலோசனை கேட்க நம்பகமான ஆள் இல்லாததால் ரங்கசாமி தனிமரமாகிவிட்டார். இது எங்களுக்கு வேதனையாக உள்ளது. இந்தத் தேர்தலிலும் சரியான காலத்தில் முடிவெடுக்காமல் அவர் காலதாமதம் செய்தால், கடந்த தேர்தலின்போது ஏற்பட்ட நிலைதான் உருவாகும். சரியான ஆலோசகர் இல்லாததால், 2019 நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி, சட்டமன்ற இடைத்தேர்தலில் தோல்வி, குறிப்பாக என்.ஆர். கோட்டை என கூறப்படும் தட்டாஞ்சாவடியை இழந்தது என தொண்டர்களாகிய நாங்கள் சோர்ந்துதான் உள்ளோம்.

ராதாகிருஷ்ணனுக்கு பொதுச்செயலாளர் பதவி தரப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் யாருடைய அழுத்தத்தாலோ அதை செய்யத் தவறியதால், ராதாகிருஷ்ணன் அரிசயலுக்கே முழுக்குப் போட்டது எங்களுக்கு தொய்வை ஏற்படுத்துவதாக உள்ளது. உடனடியாக ரங்கசாமி தேர்தல் நிலைப்பாட்டை அறிவிக்க என்றால், வேட்பாளருக்கான தகுதியான நபர்களும் மாற்றுக் கட்சிக்கு செல்வதை தடுக்க முடியாது. சரியான நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை, இடப்பங்கீடு போன்றவற்றை முடித்து தேர்தல் பணிகளை தொடங்காவிட்டால், வெற்றியை வசப்படுத்தமுடியாது. யாரையும் நம்பாமல் கட்சி நடத்த முடியாது என்பதை ரங்கசாமி உணர வேண்டும். கடைசிவரை குழப்பத்திலேயே இருந்தால், வரும் தேர்தலிலும் தனித்து நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்” என்று அவர் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry